கத்தரின் மீது சவூதியுடன் இணைந்து பல தடைகளை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்படுத்தியபோதும் அதே முறையில் பழிதீர்க்காமல், ஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் கத்தர் பாதுகாக்கும் விசயம் தற்போது வெளியாகியுள்ளது.
கத்தரின் ஆகாய மற்றும் கடல் வழி போக்குவரத்துகளைச் சவூதியுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகமும் தடை செய்தது. இதனால் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா முதலான கிழக்கு நாடுகளுக்குக் குறைந்த தூரத்தில் சென்று சேரும் ஆகாய வழித்தடம் கத்தருக்கு மறுக்கப்பட்டது. அதே நேரம், இப்பகுதியின் மிகப் பெரிய துறைமுகங்களான ஜபல் அலி, ஃபுஜைரா போன்றவை கத்தருக்குச் செல்லும் அனைத்து கப்பல்களையும் தடுத்தது. இதனால் கத்தருக்கு வரும் உணவில் சுமார் 40 சதவீதத்துக்கு மேல் குறைந்தது.
இது மட்டுமன்றி அல் ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பு தடை, கத்தர் முக்கியஸ்தர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைத் தீவிரவாதி என முத்திரை குத்தல், அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கல், கத்தருக்கு ஆதரவாக பேசுவோருக்கு 15 ஆண்டுகள் தண்டனை என ஐக்கிய அரபு அமீரகம் அடுத்தடுத்து எவ்வித மனிதாபிமானமோ குறைந்தப்பட்ச நாகரீகமோ கூட பேணாமல் தடைகளை ஏற்படுத்தி வந்தது.
புனித ரமலானில் விரதமனுஷ்டிக்கும் இக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இத்தடை கத்தருக்கு மிகப் பெரும் பேரிழப்பையும் அங்கு வாழும் மக்களுக்கு மிகப் பெரும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் என்பது தெரிந்தே, அதற்காகவே இத்தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில், "ஒருநாடு மீது எதிரிகள் கூட செய்யாத அநியாயங்கள் இவை" என கத்தர் வெளியுறவு துறை அமைச்சர் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி வருத்தம் தெரிவித்தார். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்துடன் செய்து கொண்ட எரிவாயுவுக்கான ஒப்பந்தத்தைக் கத்தர் மதித்து நடக்கும் என அப்போதே அவர் அறிவிக்கவும் செய்தார்.
இதுகுறித்த விவரங்களே தற்போது வெளியாகி கத்தர் மீதான நன்மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளுக்கான மின்சாரத்தேவைக்கு அந்நாடு பெரும்பாலும் எரிவாயுவையே அதிகம் சார்ந்துள்ளது. அதன் மின்சார உற்பத்திக்குக்த் தேவையான எரிவாயுவில் 50 சதவீதத்துக்கு மேலான எரிவாயு கத்தரிலிருந்து சப்ளை செய்யப்படுகிறது.
இதற்காக கடலுக்கடியில் சுமார் 364 கிலோமீட்டர் நீளத்துக்கு கத்தரிலிருந்து குழாய் போடப்பட்டு, தினசரி 2 பில்லியன் க்யூபிக் அடி எரிவாயு ஐக்கிய அரபு அமீரகத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
கத்தர் மீதான தடைக்குப் பின்னர், கத்தர் நாட்டு மக்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேறுதல், கத்தர்வாசிகளின் வங்கி கணக்கு மூடல், பாதை மூடல், கத்தருக்கு ஆதரவாக பேசினால் 15 ஆண்டுகள் தண்டனை, அல் ஜஸீரா ஊடகம் தடை என பல அறிவிப்புகளை அமீரகம் பிறப்பித்ததோடு, கத்தரிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற திரவ இயற்கை எரிவாயு அடங்கிய கப்பல்களையும் ஜபல் அலி மற்றும் ஃபுஜைரா துறைமுகங்கள் வழி செல்ல தடை விதித்தது.
அதே சமயம், கத்தரிலிருந்து கடலின் கீழே குழாய் வழியாக அமீரகத்துக்கு வரும் எரிவாயு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் அமீரகம் அமைதி காக்கிறது. கத்தரோ, அந்த எரிவாயுவைத் தடுக்கும் பட்சத்தில் அமீரகத்தில் ஒரே நாளில் இருள்படரும் என்பது அறிந்தும் அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தாமல் தினசரி அமீரகத்துக்கு எரிவாயு செல்வதை அனுமதித்து வருகிறது. தமக்கொரு வாய்ப்பு இருந்தும் அதனைச் செய்வதால் அமீரகத்திலுள்ள சாதாரண மக்களே பெரிதும் பாதிப்படைவர் என்பது உணர்ந்து, புனித ரமளானில் அமீரகம் செய்த அதே அநியாயத்தைத் தாமும் செய்துவிடக் கூடாது என்று கவனத்தோடும் கரிசனையோடும் செயல்படும் கத்தரின் அணுகுமுறை உலக நாடுகளிடையே கத்தர் மீது மிகுந்த நன் மதிப்பைப் பெற வைத்துள்ளது!
தகவல் உதவி: Arab News
தகவல் விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல்
No comments:
Post a Comment