20.07.14
அன்று விஜய் டிவி நீயா நானாவில் நான் பேசியதன் சுருக்கம்
இதுதான்:
இரண்டு தரப்பினரையும் நான் கேட்ட இன்னொரு கேள்வி:
”ஒரு மாணவர் கிளிப்பிள்ளை மாதிரி புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதினால் ஒத்துக்கொள்வீர்கள்.
ஆனால் அவரே சொந்தமாக சிந்தித்து எழுதினால் ஒத்துக்கொள்வீர்களா? நான் ஒரு உதாரணம் தருகிறேன். என் நாகூர் பள்ளிக்கூட அனுபவத்திலிருந்து.
புவியியலில் ஒரு கேள்வி கேட்டார்கள். ”மண் புழு எங்கே வசிக்கும்? மண் புழுவின் உணவு யாது?” என்று. அதற்கு ஒரு மாணவர் சரியான விடையை தன்னுடைய சொந்த பாணியில் எழுதியிருந்தார்.
அதற்காக அவருக்கு மார்க் தரப்படவில்லை. அடிதான் விழுந்தது. அவர் என்ன எழுதினார் தெரியுமா?
”மண் புழு என்ன மாட மாளிகைகளிலும், கூட கோபுரங்களிலுமா
வசிக்கும்? மண்ணில்தானே வசிக்கும்! மண் புழு என்ன இட்லி,
தோசை, இடியாப்பமெல்லாமா சாப்பிடும்? மண்ணைத்தானே தின்னும்!” –
இதுதான் அவர் எழுதிய ஆக்கப்பூர்வமான, நகைச்சுவையை வரவழைக்கின்ற பதில். இப்படி ஒரு மாணவர் எழுதினால்
நீங்கள் என்ன செய்வீர்கள்?” (இந்தக் கேள்விக்கு நாங்கள்
ஒத்துக்கொள்வோம் என்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் பதில் சொன்னார்கள்).
நான் சொன்ன கடைசி விஷயம்
”இரண்டு தரப்பிலும் பேசியதிலிருந்து எனக்குப் புரிவது இதுதான். ஒரு மாணவர் அரசுப்
பள்ளியில் படிக்கிறார் என்றால் அதற்கு ஒரே காரணம் அவரிடம் வசதியில்லை என்பதுதான்.
”எனக்குத் தெரிந்த ஒரு மாணவர் காலையில் 4 மணிக்கு எழுந்து மாட்டுப்பால் கறந்து
வீடுவீடாகச் சென்று கொடுத்துவிட்டு பின்பு ஸ்கூலுக்கு வருகிறார். அதேபோல மாலையில் ஸ்கூல்
விட்டதும் மறுபடியும் பால் கறந்து வீடுகளுக்குச் சென்று கொடுத்துவிட்டு அவர் தன் வீட்டுக்குத்
திரும்பும்போது எட்டு மணிக்கு மேலாகிவிடுகிறது. இப்படிப்பட்ட மாணவர்கள்தான் அரசுப்பள்ளிகளில்
படிக்கிறார். அம்பானி வீட்டுப் பிள்ளைகளோ, ஆச்சி மசாலா
ஐசக் வீட்டுப்பிள்ளைகளோ அரசுப்பள்ளியில் படித்ததாக வரலாறு கிடையாது
”ஒரு மாணவர் தனியார் பள்ளியில் படிக்கிறார் என்றால் அதற்குக் காரணங்கள் இரண்டு.
ஒன்று, வசதி. பத்தாவது படிக்கக்கூட 3 லட்ச ரூபாய்
செலவு செய்ய பெற்றோர் தயாராக உள்ளன. இரண்டு, ரிசல்ட். ரிசல்ட்
எனும்போது இன்க்யூபேட்டரில் வைத்த முட்டை சூட்டில் குஞ்சு பொரிப்பதுபோல்தான் ஒரே மாதிரியான
இறுக்கமான சூழ்நிலையில் மாணவர்களை வைத்து வெளியேற்றுகிறார்கள். வெளியில் போகும்போது
அவர் நிறைய அறிவுடன் (knowledge) செல்கிறார். ஆனால் வாழ்க்கையை, பிரச்சனைகளை face செய்யும் திராணியற்றவராக, knowledgeable
fool ஆக வெளியில் போகிறார்.
“அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 40,000 சம்பளம்
கிடைத்தால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 4000 தான் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் படும்பாடு
கொஞ்ச நஞ்சமல்ல. மேனேஜ்மெண்ட்டிலிருந்து அவர்களுக்கு ப்ரஷர் அதிகம் உள்ளது. சேலத்தில்
உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாவதில் 500க்கு 490 எடுத்தால்தான் அவர்கள் பள்ளியிலேயே
ப்ளஸ் 1-ல் சேர்த்துக்கொள்வோம் என்று நிபந்தனை உள்ளது! இன்னும் எனக்குத் தெரிந்த சில
தனியார் பள்ளிகளில் ”வகுப்பில் உள்ள ஐம்பது பேரையும் செண்டம் வாங்கவைத்தால்
ஒரு கோல்டு காயின் பரிசு” என்று சொல்லப்படுகிறது. ஒரு ஆசிரியரிடம் பயிலும்
200 மாணவர்களையும் செண்டம் வாங்க வைத்தால் 4 கோல்டு காயின்கள் அவருக்குக் கிடைக்கும்.
மாறாக, தொடர்ந்து இரண்டு முறை யாரும் செண்டம்
வாங்கவில்லையென்றால் அந்த ஆசிரியருக்கு பள்ளியிலிருந்து ’கல்தா’ கிடைக்கும்.
“இந்த டென்ஷனையெல்லாம் ஆசிரியர்கள் யார்மீது காட்டுவார்கள்? மாணவர்கள்மீதுதான்”
இன்னும் என்னென்ன சொன்னேன் என்று எனக்கே ஞாபகமில்லை.
Nagore Rumi
No comments:
Post a Comment