நேர்மையே அற்றவோர் நீணில வாழ்விலே
சோர்வதும், சோகமும், தோல்வியும் ஏணியே!
ஆரெமைக் காத்திடும் ஆண்டவன் என்றுளக்
கூரது மங்கிய கொள்கையில் மாய்வதோ?
பறந்திடும் எல்லாம் பறவையா என்றும்,
துறந்திடும் மாந்தர் துறவியா என்றும்,
உறவுகள் யாவுமே உண்மையா என்றும்,
அறுதியாய் எங்ஙனம் ஆய்ந்தே அறிவதோ?
மூர்க்கரும் நெஞ்சினில் மோகமே விஞ்சிட
ஆர்த்திடும் பிஞ்சதன் ஆயினைத் தீய்ப்பதோ?
ஊரதைச் சுற்றிய ஊத்தையை சாய்த்திட
யாரெவர் வேண்டும்? எழுந்திடு மானிடா!
பாரதம் பற்றியப் பாம்பாம் புரையிதைத்
தூர்த்திட வேண்டும் துணிந்து.
==============================
ஆய் = எழில்
ஊத்தை = பெருங்கேடு
புரை = வளர்தீமை
தூர்த்தல் = அழித்தல்
நன்றி :கவிதை யாத்த கவிஞர் இராஜ. தியாகராஜன் அவர்களுக்கு
1 comment:
மிக்க நன்றி திரு முகமது அலி அவர்களே உங்களின் இனிய பகிர்விற்கு. வாழ்க, வளர்க, தமிழால், தமிழொடு, தமிழுக்காய்ப் பல்வளங்களும் பெற்றிப் புவியில் பல்லாண்டு.
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
Post a Comment