இதே நாள், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், முதன் முதலாய், ஒரு டாக்டராய் என் க்ளினிக்கில் உட்கார்ந்தேன். அன்று என்னுடன் என் நண்பனும் அவன் மனைவியும் துணைக்கு வந்தார்கள். உள்ளே உட்கார்ந்து என்ன செய்வது என்றே தெரியாமல், செய்ய எதுவும் இல்லாமல் உட்கார்ந்து வெட்டியாய் ஏதேதோ பெசிக்கொண்டிருந்தோம்.
ஒரு மணி நேரம் போனபின், இன்னும் பத்து நிமிஷம் பார்க்கலாம் யாரும் வராவிட்டால் போய்விடலாம் என்று முடிவெடுத்தபோது ஒருவர் உள்ளே வந்தார்.
“நீங்க தான் டாக்டரா?”
“ஆமாங்க”
“ஆணி கீறிடுச்சு, செப்டிக் ஊசி போட்டுடுங்க”
“எங்கே அடிபட்டுச்சு, காட்டுங்க..”
“ட்ரெஸ்ஸிங் எல்லாம் வேணாங்க, ஆய்ண்ட்மெண்ட் நானே போட்டுட்டேன், ஊசி மட்டும் போடுங்க”
“ சரி, வாங்கிட்டு வாங்க” என்று டிடி எழுதிக்கொடுக்க, “ உங்க பேர் என்ன்ங்க?” என்றால்,
“தெரியாதாங்க? நான் தான் அன்வர் பாய். தோ எதித்தாப்பல நம்ம கடைதான்” என்று சொல்லி விட்டு, ஊசி வாங்கி வந்து நான் போட்ட பின், “பரவாயில்ல, வலிக்காம போட்டீங்க” என்று சொல்லி விட்டு எழுந்தார்.
ஃபீஸ் எப்படி கேட்பது, எவ்வளவு கேட்பது என்று புரியாமல் நான் பேசாமல், ஒரு மய்யமான முறுவலுடன் நிற்க, “காசு எடுத்துட்டு வரலே, கடைக்குப் போய் பையன் கிட்ட குடுத்துஅனுப்புறேன்” என்று சொல்லி விட்டுப் போனார்.
ஐந்து நிமிடத்தில் ஒரு பையன் வந்து “பாய் தரச் சொன்னார்” என்று இரண்டு ரூபாய் கொடுத்தான்- என் முதல் மருத்துவ வருமானம்.
முப்பத்தைந்தாண்டுகள் ஓடி விட்டன. எத்தனையோ பேர் ஃபீஸ் கொடுத்திருக்கிறார்கள், எத்தனையோ பேர் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள், எத்தனையோ பேரிடம் வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் அன்வர் பாய் எனக்கு ’ஸ்பெஷல் பேஷண்ட்’. எப்போது வந்தாலும், காத்திருக்கும் கூட்ட்த்தைப் பார்த்து, “நம்ம கை ராசிங்க, க்ளினிக் நல்லா போகுது” என்று பெருமைப்படுவார்.
சில ஆண்டுகளில், பொது மருத்துவ சிகிச்சை பார்ப்பதை நிறுத்திவிட்டு, மனநல மருத்துவம் மட்டுமே நான் பார்த்துக்கொண்டிருந்தாலும், “வயிறு சரியில்லே, மாத்திரை எழுதிக்கொடுங்க, ஜெலுஸில் வேலக்காவலே” என்று வந்து நிற்பார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார்.
மனநல மருத்துவம் மட்டுமே பார்க்க ஆரம்பித்த 1988லிருந்து
இன்றைய தேதிவரை நான் பார்த்தவர்களின் எண்ணிக்கை, 25,925. ஆனாலும் என் ‘அன்வர் பாய்’ தான் இன்று நினைவுக்கு வருகிறார்.
லட்சக்கணக்கில் பணம் கட்டி, கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாய் பொதுவாய் மருத்துவர்கள் மீது பலர் காழ்ப்பில் இருக்கிறார்களே, அவர்களுக்குத் தெரியாது இப்படி கொஞ்சமாய் காசு வாங்கியும் சிகிச்சை தரும் மருத்துவர்களும் உண்டு என்று. அவர்களுக்குத் தெரியாது என்னைப்போல் படித்து மதிப்பெண் வாங்கி அரசு மருத்துவக் கல்லூரியில் குறைந்த செலவில் படித்து ஆயிரக்கணக்கில் வெளிவருபவர்கள் தான் அதிகம் என்று. அவர்களுக்குத் தெரியாது, சிலரின் கேவலமான வியாபாரத்தனத்தை மீறி நேர்மையும் நெறியும் பிறழாத மருத்துவர்கள் இன்றும் உண்டென்று.
Dr. Rk ருத்ரன் Rk Rudhran
நன்றி : டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு
No comments:
Post a Comment