தந்தை பெரியாரின் கொள்கையும், பிரச்சாரமும் பாமர மக்கள் மத்தியில் மட்டுமல்ல; படித்தவர்கள் மத்தியிலும் அம்பாகத் தாக்கியிருக்கிறது. ஏன்? முற்றும் துறந்த முனிபுங்கவர்களையும், காவி தரித்த கனவான்களையும்கூடக் கச்சிதமாகவே தாக்கி களைப்பாறி இருக்கிறது.
மடத்துக்குள்ளிருந்த என்னை மக்கள் மத்தியில் கொண்டு வந்து நிறுத்தியவர் தந்தை பெரியார் என்று மனம் நிரம்பக் கூறியவர் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரையே தாக்கி இருக்கிறது என்று சொன்னால், சுலபத்தில் யாரும் ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள்.
உண்மை என்னவென்றால் மேனாவில் (பல்லக்கில்) முன்னால் நான்கு பேர்களும், பின்னால் நான்கு பேர்களும் தோளில் சுமந்து அதில் பவனி வந்த அந்தச் சங்கராச்சாரியார், அதனை விலக்கி விட்டு, காலால் நடந்து செல்லும் ஒரு நிலையை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.
சக்தி விகடன் பொறுப்பாசிரியராக இருந்த ரவி பிரகாஷ் இதோ எழுதுகிறார் படியுங்கள்! படியுங்கள்!!
பெரியவாள் (சந்திர சேகரேந்திர சரஸ்வதி) ஒருமுறை மேனாவில் சென்று கொண்டிருந்த போது, வழியில் மேடைப் போட்டு பெரியார் பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் சிரமப்பட்டு தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்து கொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லா சுகங்களையும் துறக்கவேண்டும்; இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்று முழங்கிக் கொண்டிருப்பது பெரியவாளின் காதுகளில் விழுந்தது. அவ்வளவுதான், மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லிவிட்டு, இறங்கி விட்டார் பெரியவர்.
அவர் ஏதோ சொல்றார், சொல்லிவிட்டுப் போறார், அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ!
உங்களைச் சுமந்து கொண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம் என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் கெஞ்சியிருக்கிறார்கள். இல்லை, அவர் சொல்றது தான் சரி. சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போகிறேன் என்று தீர்மானமான முடிவெடுத்து விட்டார்.
கடைசி வரையிலும் அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன. இது வெளிவந்த இதழ் சக்தி விகடன் - எழுதியவர் அதன் பொறுப்பாசிரியர் ரவி பிரகாஷ் - அதற்குச் சாட்சியமாகக் கூறப்பட்டவர் 40 ஆண்டு காலம் சங்கராச்சாரியாரிடம் சேவை செய்த இலட்சுமி நாராயணன் என்பவர் - மாங்காட்டில் இருக்கக்கூடியவர்.
பெரியவாளிடமும்கூட தாக்கத்தை ஏற்படுத்தியவர் பெரியாரன்றோ! -
கலி. பூங்குன்றன்
No comments:
Post a Comment