Wednesday, July 23, 2014

போய்வா; என் செல்லமே…

போய்வா;
என் செல்லமே…

முட்டிக்கொண்டு
நிற்கும் கண்ணீரோடு
வழியனுப்புகிறேன்
என் செல்லமே!

வளரும் முன்னே
சுவனத்தை சுகிக்க
பயணப்பட்டாயோ
என் செல்லமே!

பால் மணம் மாறா
என் ஈரக்குலையே;
சுதந்திரத் தாகத்திற்கு
வித்தாக விழுந்தாயோ
என் செல்லமே!

அழுகையும்;
பிரார்த்தனை மட்டுமே;
இப்போது செய்யும்
கையாலாகாதவனாக உள்ளேனே
என் செல்லமே!

எச்சிலும்…
என் தொண்டைக்குப்
பாரமாகிவிட்டதே;
வற்றிப்போன விழிகளுடன்;
சூடான மூச்சுக்காற்றுடன்
உனை நுகர்ந்து கரைகிறேனே
என் செல்லமே!

அழியாத சுவனத்தில்
செழுமையாய் நீ இருக்க;
பச்சைக்கிளியாய் பவனி வர
வல்லோனின் நாட்டமிது
என் செல்லமே!
Yasar Arafat
என் பக்கம் 
 கவிதை :கவிஞர் யாசர் அரபாத் அவர்களுக்கு நன்றி

No comments: