Wednesday, July 9, 2014

இப்ப விளங்கிடுச்சு!

ஃப்ளைட்ல சாப்பாடு எப்படி இருந்தது?, மகளிடம் கேட்டேன்..
”நல்லா இருக்கும் என்று சொன்னீர்கள்? கொஞ்சம் கூட ‘டேஸ்ட்’ இல்லை…. , வாய்க்கு வெளங்கலை..”

படபடவென பாய்ந்து வந்தது பதில்!

உண்மைதான்!. நாமும் கூட விமானப் பயணங்களின் போது இதை உணர்ந்திருப்போம். இத்தனைக்கும் சில வெளிநாட்டு விமானங்களில்
பரிமாறும் உணவுவகைகள் நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து வந்திருக்கும். ஏன் நம் உள்நாட்டு விமானங்களில் பரிமாறப்படும் உணவுவகைளும் கூட பெரும்பாலும் அதே மாதிரிதான். ஆனால் ருசி? உண்மையிலே வாய்க்கு விளங்காத ஒன்றுதான். ஏன் தெரியுமா?

புரியாத மொழியில் பேசினால் நம்மால் எப்படி விளங்கிக் கொள்ளமுடியாதோ அதேபோல் தான் நமக்கு மிகவும் பரிச்சயமான உணவுவகைகளை ரசித்து ருசித்து சாப்பிடும் நமது நாக்கு, அதே உணவுவகைகளை விமானத்தில் மறந்துவிடுகிறது. அதனால் அதன் ருசியை நம்மால் உணரமுடிவதில்லை.

எப்படின்னு ஆச்சர்யமாய் இருக்கிறதா!? ஜெர்மனியைச் சார்ந்த
The Fraunhofer என்ற ஆராய்ச்சி நிறுவனம்,
இது தொடர்பாக ஆராய்ந்து சமர்ப்பித்த அறிக்கையைப் பாருங்கள்.

விமானம் 8,000 அடி உயரத்தில் பறக்க ஆரம்பிக்கும் போது விமானத்திற்குள் அழுத்தமேற்றப்பட்ட மாறுபட்ட சூழல் உருவாகி இருக்கும். மேலும், குளிரூட்டப்பட்ட உலர்காற்று விமானத்திற்குள் பரவியிருக்கும். இதனால் நமது நாக்கிலுள்ள சுவைமொட்டுகள் (TASTE BUDS) மரத்துப்போக ஆரம்பிக்குமாம். கிட்டத்தட்ட ஜலதோஷம் ஏற்பட்டால் எப்படி நாம் சாப்பிடுவது சுவையற்றதாய் இருக்குமே அந்த நிலைக்கு வந்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பொதுவாக விமானம் அதிகபட்ச உயரத்தினை அடைந்த பிறகு தான் உணவு பரிமாறும் சேவையினை ஆரம்பிப்பார்கள். 35,000 அடி உயரத்தில் பறக்கும் போது நமது நாக்கில் பரவியிருக்கும் சுவைமொட்டுகள் (TASTE BUDS) முழுவதுமாய் மரத்துப்போயிருக்கும். குறைந்த ஈரப்பதம் காரணமாய் நமது மூக்கும் வாசனை நுகரும் தன்மையினை இழந்திருக்குமாம். இதனால் இனிப்பு மற்றும் உவர்ப்பு ஆகியவற்றை வேறுபடுத்தி உணரும் தன்மை 30% க்கும் மேலாக குறைந்துவிடும் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இப்ப விளங்கிடுச்சு!
 

No comments: