Tuesday, July 1, 2014

சிறுவர் பாடல்கள் - குழந்தைக் கவிஞர். புதுகை அப்துல்லா.

சிறுவர் பாடல்கள்
--------------------------------
பட்டம்

பட்டம் பறக்குது உயரே பார்.
பறவை போலப் பறக்குது பார்!

ஆடி அசையும் அழகைப் பார்.
காற்றில் மிதக்கும் கலையைப் பார்!

சுற்றிச் சுழன்று வீசும் காற்றைச்
சின்னப் பட்டம் எதிர்க்கிறது!

எதிர்த்து மோதி அதனின் ஊடே
வெற்றியோடு பறக்கிறது!

பட்டம் சொல்லும் சேதியை நன்றாய்
பதிய வைப்போம் மனதினிலே.

- குழந்தைக் கவிஞர்.புதுகை அப்துல்லா.
----------------------------------

 பட்டுகுட்டியும், சிட்டு குருவியும்

சிட்டுக் குருவி வந்தது
பட்டுக் குட்டி பார்த்தது.

பட்டுக் குட்டி பார்த்ததும்
சிட்டுக் குருவி சிரித்தது.

சிட்டுக் குருவி சிரித்ததும்
பட்டுக் குட்டி சிரித்தது.

களைத்து வந்த குருவியை
பட்டுக் குட்டி உணர்ந்தது.

வீட்டின் உள்ளே சென்றது
அரிசி கொண்டு வந்தது.

அரிசி தின்ற குருவியும்
களைப்பு நீங்கிப் பறந்தது.

பறந்து சென்ற குருவியை
பார்த்து பட்டு மகிழ்ந்தது!!

- குழந்தைக் கவிஞர். புதுகை அப்துல்லா.
---------------------------------------
பட்டுப் பாவாடை


பட்டு குட்டிப் பாப்பாவுக்கு
குட்டி பட்டு பாவாடை.
திருவிழா வந்ததற்கு
தாத்தா தந்த பாவாடை.

மாம்பழம் நிறமிருக்கும்
மஞ்சள் வண்ண பாவாடை.
தங்கம்போல ஜொலிஜொலித்து
தகதகக்கும் பாவாடை.

கையிரண்டும் பக்கம் நீட்டி
ஆலவட்டம் சுற்றினால்
ஆளோடு சுற்றிச் சுழலும்
அழகு வண்ண பாவாடை.

நாளை பள்ளி செல்லுவேன்
நண்பர்களுக்குக் காட்டுவேன்.
தாத்தா வந்த செய்தி சொல்லி
மகிழ்ந்து வீடு திரும்புவேன்.

- குழந்தைக் கவிஞர்.புதுகை அப்துல்லா
---------------------------------------------

ஜவ்வு மிட்டாய் மாமா கூவும்
ஓசை சத்தம் கேட்டது.
ஓசை சத்தம் கேட்டதும்
ஓடிச் சென்று வாங்கினேன்.

கையில் வாட்சும் காதில் தோடும்
கழுத்தில் மணி மாலையும்
எச்சில் ஊற நானும் வாங்கி
வீடு வந்து சேர்ந்தேனே.

கழற்றித் தின்னும் ஆசையடக்கி
பார்த்துப் பார்த்து நிற்கையில்
தம்பி பையன் துள்ளி வந்து
எல்லாம் பிடிங்கித் தின்றானே!

- குழந்தைக் கவிஞர். புதுகை அப்துல்லா.

                                         M.m. Abdulla

No comments: