Wednesday, July 9, 2014
இந்திரா கிளப்பிய விவாத சுனாமி
மனசுக்குள் பெருமையும் சந்தோஷமும் வண்ணத்து பூச்சிகளாக சிறகடித்து பறந்தன.
இப்படி பரவசப்பட்டு நீண்டநாள் ஆயிற்று. வீட்டுக்குள் திரும்பி காரை நிறுத்தும்போது வாட்சை பார்த்தாள். மணி 10. நள்ளிரவுக்கு முன் வீடு திரும்பியது கடைசியாக எப்போது என்று நினைவுக்கு வரவில்லை. ’அம்மா ஆச்சரியப்படுவாள்’ என்று நினைத்தவாறு இறங்கியவள் பார்வை முன்கதவை நோக்கி வளைந்து செல்லும் படிக்கட்டில் ஏறியது.
அம்மா நின்றிருந்தாள். குபுக்கென்று பொங்கி வழிந்தது உற்சாகம்.
‘அம்மா, ஒரு குட் நியூஸ் கொண்டு வந்திருக்கேன்..!’ குழந்தையின் குதூகலத்தோடு அறிவித்தாள்.
‘நியூஸ் இருக்கட்டும்... போய் கொஞ்சம் பால் வாங்கிட்டு வந்துடறியா..?’
மனசுக்குள் பொங்கிக் கொண்டிருந்த பால் சட்டென தணிந்து மவுனமானது. பார்வையை திருப்பினாள். கணவனின் கார் அமைதியாக நின்று கொண்டிருந்தது. மேலே படர்ந்திருந்த பனித்துளிகள், அதன் இன்ஜின் அணைக்கப்பட்டு நெடுநேரம் ஆகியிருந்ததை உணர்த்தியது. அம்மாவை பார்த்தாள்.
‘அவர் எப்போ வந்தார்?’
‘எட்டு மணிக்கெல்லாம் வந்துட்டார்’
‘பால் வாங்கிட்டுவர அவரை போக சொல்லியிருக்கலாம்ல..?’
‘டயர்டா இருந்தார். தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லல. பேசிகிட்டு நிக்காதே. போய் வாங்கிட்டு வா. காலைல காஃபிக்கு பால் இல்லை!’
சுர்ரென்று கிளம்பிய கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டை திறந்து விறுவிறுவென நடந்தாள். 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைக்குள் நுழைந்து பால் வாங்கி திரும்பினாள். அம்மா அங்கேயே நின்றிருந்தாள். படிகளில் ஏறி அம்மாவிடம் கொடுக்காமல் பால் பேக்கை மேடையில் வைத்து விட்டு அம்மாவை ஏறிட்டாள்.
‘கம்பெனில எனக்கு பதவி உயர்வு கிடைச்சுருக்கு. போர்டுல ஒரு டைரக்டரா இருந்த என்னை பிரசிடென்டா ப்ரமோட் செஞ்சுருக்காங்க. டாப் போஸ்ட். அந்த நல்ல செய்திய உங்கிட்ட சொல்றதுக்கு ஆசை ஆசையா வந்தா, என்னை வாசல்ல நிறுத்தி போய் பால் வாங்கிட்டு வான்னு துரத்தற. என்ன அம்மாம்மா நீ..?’
கேள்வியில் கோபத்தைவிட ஆதங்கம் அதிகமிருந்தது.
அம்மா படிகளில் இறங்கி வந்தாள். முகத்தில் உணர்ச்சிகள் தெரியவில்லை. மகளின் கண்களை பார்த்தபடி மெல்லிய ஆனால் உறுதியான குரலில் சொன்னாள்:
‘ஒரு விஷயம் புரிஞ்சுக்கோடி.. உன் கம்பெனி உலகத்துலயே பெரிய கம்பெனி, சரி. அதுல நம்பர் ஒன் போஸ்ட் உனக்கு குடுத்துருக்கா, சரி. ஆனா, இந்த வீட்டுக்குள்ள வரும்போது நீ ஒரு மனைவி, ஒரு அம்மா, ஒரு மகள், ஒரு மருமகள். இது எல்லாமும்னு வெச்சுக்கோ. இந்த ரோலை வேற யாருமே ஏத்துக்க முடியாது. இதொண்ணும் கம்பெனி வேலை கிடையாது. அதனால, அங்க உன் தலைல சூட்டுற கிரீடத்தை எல்லாம் இந்த கராஜ்லயே விட்டுட்டு வந்துரு. வீட்டுக்குள்ள கொண்டு வராதே!’
இதை சொல்லிவிட்டு பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நடந்த அம்மாவை மவுனமாக பின் தொடர்ந்தாள்...
மகள் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. உலகின் மிகப்பெரிய குளிர்பான தயாரிப்பாளரான பெப்சி கம்பெனியின் தலைவர். ரூ.75,00,00,000 சம்பளம். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ‘பூமியின் சக்தி வாய்ந்த பெண்கள்’ பட்டியலில் 13வது இடம். அனைத்திலும் மேலாக நமது சென்னையில் பிறந்து வளர்ந்த பெண்மணி. கோடிக்கணக்கான இளம் பெண்களின் ரோல் மாடல்.
பெண்கள் வேலைக்கு செல்வது குறித்து சென்ற வாரம் இந்திரா வெளியிட்ட கருத்துக்கள் சர்வதேச அளவில் காரசாரமான விவாதத்தை தூண்டியிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் ஆஸ்பென் ஐடியாஸ் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் ஆண்டுதோறும் கருத்தரங்கம் நடக்கிறது. தலைசிறந்த சிந்தனையாளர்கள், பல்துறை மேதைகள், தலைவர்கள், உயர்நிலை நிர்வாகிகள் பங்கேற்கும் விவாதங்கள் ஒரு வாரம் நடைபெறும். இந்த ஆண்டு பங்கேற்றவர்களில் இந்திரா முக்கியமானவர்.
வேலையையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க போராடும் கோடிக்கணக்கான பெண்களின் மனநிலையை இந்திரா இந்த கருத்தரங்கில் அற்புதமாக எதிரொலித்தார் என்று பாராட்டுகள் குவிகின்றன. வேலை முக்கியம் என்று நினைப்பவர்கள் குடும்பத்தை முழுமையாக கவனிக்க முடியாது; குடும்பம் பெரிதென்று நம்புகிறவர்கள் வேலையை முழுமையாக செய்ய முடியாது என்ற மதிப்பீடு இந்திராவின் கருத்தால் புத்துயிர் பெற்றுள்ளது.
’எனக்கொன்றும் பிரச்னை இல்லை. குடும்பம், வேலை இரண்டிலுமே எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். இதனால் இரண்டு ரோலிலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று சொல்லும் பெண்களை நாம் நிறையவே சந்திக்கிறோம். அவர்கள் சொல்வதை வியப்புடன் ஏற்றுக் கொள்கிறோம். அத்தகைய பெண்களை கூடுதல் மரியாதையுடன் பார்க்கிறோம். இந்திராவின் மனம் திறந்த பேச்சு, மேற்படி பெண்கள் உண்மை பேசுகிறார்களா என்ற கேள்விக்குறியை எழுப்புகிறது.
‘இரண்டையும் பேலன்ஸ் செய்கிறோம், இரண்டிலும் சமமான திருப்தி கிடைக்கிறது என்று சொல்வது வெறும் பாசாங்கு. அப்படி சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். வேலையில் சாதிப்பவர்களுக்கு குடும்பத்தில் கடமையை செய்த திருப்தி கிட்டாது. குடும்பத்தைநன்றாக கவனிப்பவர்களுக்குவேலையை சிறப்பாகசெய்த திருப்தி ஏற்படாது. இதுதான் எதார்த்தம். வசதி வாய்ப்பு இருப்பதால் என்னை போன்றவர்கள் குடும்ப நிர்வாகத்தில் மற்றவர்களின் ஒத்துழைப்பை பெற முடிகிறது. ஆனாலும் முழுமையான திருப்தி ஏற்படாமல் மனம் உறுத்திக் கொண்டே இருக்கிறது’ என்று உடைத்து பேசியிருக்கிறார் இந்திரா.
பெண்கள் வேலைக்கு சென்று சம்பாதித்து எந்த ஆணையும் சார்ந்திராமல் சொந்தக் காலில் நிற்பதுதான் உண்மையான சுதந்திரம் என்று பலர் கூறுகின்றனர். ஆண்கள் அவரவர் விரும்பும் தொழில் அல்லது வேலையை தேர்ந்தெடுத்து அதில் சாதனை படைக்கும்போது, பெண்கள் மட்டும் கணவன், குழந்தைகள், குடும்பம் என்று வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பது சமத்துவ தத்துவத்துக்கு முரணானது என்று வாதிடுகின்றனர். அத்தகைய பெண்ணிய ஆர்வலர்கள் இந்திராவின் பேச்சால் கொதித்து போயிருக்கிறார்கள். வெவ்வேறு துறைகளில் சாதிக்க கனவு காணும் இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு இந்திரா தவறான வழியை காட்டுகிறார் என அவர்கள் கண்டிக்கின்றனர்.
இன்றைய சமூக சூழலில் மாறுபட்டதாக தோன்றும் கருத்தை முதல் முதலாக முன்வைப்பவர் இந்திரா நூயி அல்ல. நியு அமெரிக்கா ஃபவுண்டேஷன் தலைவரும், வெள்ளை மாளிகையில் உயர் பொறுப்பு வகித்தவரும் ஆன ஆன் மேரி ஸ்லாட்டர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே கருத்தை சொல்லியிருந்தார். அரசியலில் உயர் பதவி வகித்த மேலும் மூன்று பெண்மணிகள் அதற்கு முன்பே இதே காரணத்துக்காக பொறுப்புகளை கைவிட்டு இல்லத்தரசிகளாக மாறினர்.
முக்கிய பதவி வகிக்கும் பெண்கள், அந்த வேலையின் பளுவால் குடும்ப பொறுப்புகளை கவனிக்க முடியாமல் போகிறதே என வருந்தி ராஜினாமா செய்தால், வேலை செய்ய இயலாமல் அவர்கள் விலகியதாக செய்தி பரவுகிறது. வேலை செய்ய தெரியாததால் அவர்கள் நீக்கப்பட்டதாக செய்தி பரப்புவதும் வாஷிங்டனில் வாடிக்கை. அமெரிக்காவில் இந்த நிலை என்றால் ஏனைய நாடுகளில் சொல்ல தேவையில்லை.
இதை வேதனையுடன் சுட்டிக் காட்டிய ஆன் மேரி, ’ஆண்கள் ரொம்ப மாறிவிட்டார்கள். ஆனால் இந்த பெண்ணியவாதிகளின் நெருக்கடி தாங்க முடியவில்லை. மிகப்பெரிய பதவிகளை வகிக்கும் பெண்கள் மனம் திறந்து பேசினால்தான் இந்த உண்மைக்கு அங்கீகாரம் கிடைக்கும்’ என்று சொன்னார்.
அதைத்தான் இந்திரா செய்திருக்கிறார்.
’‘ஸ்கூல் நிகழ்ச்சி நடக்கும். நான் சீனா,ஜப்பான், இந்தியா என்று ஏதோ ஒரு நாட்டில் இருப்பேன். ’எல்லா அம்மாக்களும் வந்திருந்தாங்க.. நீ மட்டும்தான் மிஸ்ஸிங்மா..’ என்று மகள் ஏக்கமாக சொல்வாள். மனசு தாங்காது. அடுத்த நிகழ்ச்சி நடக்கும்போது, யாரெல்லாம் வரவில்லை என்று டீச்சரிடம் ஃபோனில் கேட்டு வைத்துக் கொள்வேன். மகள் வழக்கம்போல புகார் சொல்லும்போது, ’இல்லையே, அவ அம்மா வரலை, இவ அம்மா வரலை... நானும் வரலை. கெட்ட அம்மா நான் மட்டும் இல்லைல்ல..?’ என்று கூறி சமாளிப்பேன்”
“எனக்கு கல்யாணமாகி 34 வருஷம் ஆகிறது. கணவர் ராஜ், 2 பெண்கள், என் அம்மா. இதுதான் என் குடும்பம். ராஜ் ரொம்ப பொறுப்பானவர். நான் இல்லை என்கிற குறை தெரியாமல் குடும்பத்தை நிர்வகிக்க சின்சியராக முயற்சி செய்பவர். ஆனால் என் குழந்தைகளை போலவே அவரும் என் நெருக்கம் கிட்டாததால் ஏமாற்றம் அடையத்தானே செய்வார். ‘உனக்கு எல்லாமே பெப்சிகோ, பெப்சிகோ, பெப்சிகோ, அப்புறம் உன் இரண்டு பெண்கள், அடுத்தது உன் அம்மா, லிஸ்ட்ல கட்டக் கடைசியா நான்..’ என்று எப்போதாவது புலம்புவார். பாவமாக இருக்கும். ‘லிஸ்ட்ல இருக்கீங்கள்ல, அதுக்கே நீங்க சந்தோஷப்படணும், ராஜ்..’ என்று சொல்லி சமாளிப்பேன்..”
“சின்னக் குழந்தையா இருக்கும்போது அம்மா கூட இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே மாதிரி அவர்கள் டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும்போதும் நமது துணை, நெருக்கம், வழிகாட்டுதல், ஷேரிங் எல்லாம் ரொம்ப ரொம்ப அவசியம். அந்த சந்தர்ப்பங்களில் நாம் அவர்களோடு இல்லையே என்ற எண்ணம் குற்ற உணர்வாக மாறி என்னை வதைக்கும். வீட்டில் ஒரு அம்மாவாக, ஒரு மனைவியாக இருப்பது முழு நேர வேலை. பெப்சிகோ பிரசிடென்ட் ஆக இருப்பது மூன்று முழு நேர வேலைகளுக்கு சமம். இதில் எப்படி இரண்டுக்கும் நியாயம் வழங்க முடியும்?”
இந்திராவின் இந்த கேள்வி, சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஃபேஸ்புக் சிஇஓ ஷெரில் சாண்ட்பெர்க் சில மாதங்களுக்கு முன் எழுப்பிய கேள்வியை பிரதிபலிக்கிறது. ’குடும்பத்தையும் வேலையையும் உங்களாலெப்படிஅனுசரித்து போக முடிகிறது?’ என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷெரில், ‘ஒன்று வேலை, இன்னொன்று வாழ்க்கை. இதில் பேலன்ஸ் செய்யும் பேச்சுக்கு எங்கே இடம் இருக்கிறது? நோ வே...’
பெண்கள் வேலைக்கு செல்வதே தப்பு என்பதற்கான வாதங்கள் அல்ல இவை. புஷ் காலத்தில் அதிபரின் ஆலோசகர் மற்றும் உதவியாளர் பொறுப்புகளை வகித்த கரன் ஹ்யூஸ், மேரி மேடலின் இருவரும் சொல்லும் யோசனை: அன்றாட குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற தடையாக இல்லாத வேலை அல்லது தொழிலை நாம் தேர்வு செய்வதுதான் ஒரே வழி.
அது எல்லா பெண்களுக்கும் சாத்தியமா?
(இழு தள்ளு 42+/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 13.07.2014)
நன்றி Kathir Vel கதிர்வேல் அவர்களுக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment