Monday, May 4, 2020
உகாண்டா சனாதிபதி ககுட்டா முசொவேனி சிறந்த ஆட்சியாளர் ....
தமது தேசத்தின் மீது பற்றை விதைத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் ஆப்பரிக்கா கண்டத்தின் ஒற்றை மனிதராய் ஜொலித்து உரிய நடவடிக்கைகளை கையாண்டு மக்களின் உயரிய அன்பை அறுவடை செய்கிறார் ....
எவ்விதமான விஷயமாக இருந்தாலும் அவைகளை விளக்கும் முறையில் நாட்டு மக்களிடம் விவரமாக பேசும் திறனை இறையிடம் வரமாக பெற்றவர் என்றால் அது இவருக்கு மிகவும் பொருந்தும் ....
பேச்சுக் கலையில் கலைஞரை போல் நாவன்மை பெற்றவரான இவர் ஊரடங்கு அமுலாகிய தருணங்களில் மக்கள் எவ்வாறு செயல்பட்டு தங்களை பேணிக் கொள்ளணும் என்று பற்பல உதாரணங்களோடு அருமையாக ஊட்டுகிறார் ....
ஊரடங்கை அனுபவிக்கும் மக்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக படிப்படியாக நாட்டின் எந்திர இயக்கங்களை குறைத்து கொரோனா பரவலை தடுத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க கச்சிதமாக அறிவுறுத்துகிறார் ....
யுத்தங்கள் செய்திட அணு ஆயுதங்கள் தயாரித்து தங்களை வல்லரசு என்று பிரகடணப்படுத்துகிற நாடுகளுக்கு மத்தியில் மக்களை காப்பாற்றும் ஆயத்தங்களை தயாரித்து இது நல்லரசு என்று பறைசாற்றி உகாண்டா ஒரு தில்லரசு என்பதை நிரூபிக்கிறார் ....
மக்கள் உயிரோடு வாழ்ந்தால்தான் பொருளாதாரம் சீரடைந்து மேம்படும் என்று உறுதியோடு சொல்லுகிற இவரோடு இணைந்து கொரோனா வைரஸை ஒழித்திட பெரும்பாலான தொழிலக வர்த்தக நிறுவனங்களும் சேவை அமைப்புகளும் செல்வந்தர்களும் பொருளேற்றும் சிறிய வாகனங்களை வழங்கி நிதிகளையும் உணவுகளையும் அரசுக்கு வாரி கொடுக்கிறார்கள் ....
மக்களுக்கு நாட்டின் நிலைகளை தெளிவுபடுத்த தொலைக்காட்சி வாயிலாக இவர் அறிக்கைகள் வாசிக்கையில் உதவிகள் வழங்கிய நிறுவனங்களை மறக்காமல் பட்டியலிடுகிறார் ....
'அவசர கால உணவு வினியோக படை'
என்கிற புதிய இலாகாவை துவங்கி நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு அதிகாரிகளை நேரடியாக களமிறக்கி தேவையான உணவுப் பொருட்களை கனரக வாகனங்களில் ஏற்றி வயிற்றுப் பசியாற வினியோகித்து மக்களின் மனமகத்தில் அமருகிறார் ....
சுகாதார துறை மக்களின்
உடல் நிலையை பரிசோதித்து
காவல் துறை மக்களின்
நடமாட்டத்தை கண்காணித்து
நிலைமைகளை தம்மிடம் அவ்வப்போது எடுத்துரைக்க அறிவுறுத்தி அந்த சாராம்சங்களை வல்லுனர்களோடு கலந்தாய்ந்து நாட்டின் நலன்களை குறித்து தீவிரமாக ஆலோசிக்கிறார் ....
இக்கட்டான சூழலிலும் நாட்டு மக்களுக்கும் மற்றும் இங்கே பணியாற்றி வாழ்வோருக்கும் நலம் பயக்கும் காரியங்களை முன்னெடுத்து உலக தலைவர்கள் வியக்கும் வண்ணம் செயல்படுத்துகிறார் ....
இவரை குறித்து இன்னும் எழுதினால்
அது நைல் நதி போல் நீண்டு செல்லும் ....
எவ்வாறான அசாதாரண தருணத்திலும் நாட்டுக்காக உழைத்து எனது மக்களை நான் காப்பாற்றுவேன் என்று உறுதி பூண்டு நம்பிக்கை நீண்டு செயலாற்றுகிற உகாண்டா சனாதிபதியை நன்றிகள் கலந்து பாராட்டி மகிழ்வதோடு இறைவன் இவருக்கு என்றென்றும் ஆரோக்கியத்தை நல்கவும் பிரார்த்திக்கிறோம் ....
அப்துல் கபூர்
04.05.2020 ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment