அரசியல் பிரமுகர் ஒருவருடன் தந்தை பெரியாரைச் பார்க்கச் சென்றிருந்தேன்.
அப்போது அவர் ஒரு மாலை நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தார். நாங்கள் முகமன் கூறினோம். முகம் மலர பதில் கூறினார். மரியாதை நிமித்தமான சந்திப்புதான்; பொதுவான பேச்சு.
அப்போதே அவர் இரண்டு மூன்று பேர் உதவியுடன்தான் இயங்கிக் கொண்டிருந்தார்.குறிப்பான பிரச்னை அந்த மூத்திரச் சட்டி;அதற்கும் வயிற்றுப் பகுதிக்குமான இணைப்பாக இருந்த குழாய். அது அசைந்தால் கூடச் சிரமம்தான் போலும்.
அவரைப் பற்றி மக்களுக்கு அதிகம் தெரிந்தது அவர் கடவுள் இல்லை என்பவர் என்பது.அது மாபெரும் துணிச்சலான செயலாகப் பார்க்கப்பட்டது.
நாங்கள் அவரோடு இருந்த நேரத்தில் அவர் சற்று இப்படி அப்படி அசைந்தார்.ஏதோ அசௌகர்யத்தை உணர்ந்தவர் சிங்கம் கர்ஜிப்பது போன்ற தொனியில் ஒரு வார்த்தையைச் சொன்னார்....
இளைஞனான எனக்கு அது வியப்பான வியப்பாக இருந்தது.அப்போது பெரியாருக்கு 89/90 வயது இருக்கும்.(1968-69 என்று ஞாபகம்)
கடவுளையே இல்லை என்பவரானாலும் இவரால் இந்த வயதிலும் ஒரு சிரமம் என்றால் அந்த உறவை நினைவு கூராமல்- அந்தச் சொல்லைக் கூறாமல்- இருக்க முடியவில்லையே என்பதுதான் என் ஆச்சர்யம்.
அந்தத் தொண்டு கிழம்- தொண்டு செய்து பழுத்த பழம்- சிறு துன்பம் என்றாலும் சிரமப் பரிகாரமாகச் சொன்ன- ஒரு சிறு கர்ஜனை போல் சொன்ன -அந்தச் சொல் இதுதான்:-
"அம்மா!"
No comments:
Post a Comment