Friday, May 29, 2020

பிறப்பு என்பது ஒரு நிகழ்வு மட்டுமல்ல; அது ஒரு வரலாற்றின் தொடக்கம்


Yembal Thajammul Mohammad ஏம்பல் தஜம்முல் முகம்மது //




பிறப்பு என்பது ஒரு நிகழ்வு மட்டுமல்ல; அது ஒரு வரலாற்றின் தொடக்கம் என்பதை உணர்ந்தால் " தோன்றிற் புகழொடு தோன்று"தல் எவர்க்கும் எளிது. இனிது.

உன்னதமான தந்தையின் உத்தமமான பிள்ளையாகப் பிறந்து எல்லா வசதி வாய்ப்புகளையும் எய்தித் திகழ்ந்தாலும்
" என்றும் ஒருநடையர் ஆகுவர் சான்றோர்" என்ற இலக்கணத்திற்கு இவர் இலக்கியம்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்( ரஹ்) அவர்களின் மடி தவழ்ந்து,
அண்ணாவைப் போன்ற ஒர் ஆளுமையான சிராஜுல் மில்லத் அவர்களின் மனம் தவழ்ந்து, சிங்கம் போலத் தமிழகத்தில் உலாவந்த சிறைக்கஞ்சாப் போராளி- சிறந்த இதழாளர்- பல்துறை வித்தகர் நாவலர் மறுமலர்ச்சி யூசுஃப் அவர்களின் உறவாகி, அரசியல் சூஃபி என்று அகிலம் போற்றும் முனீருல் மில்லத் பேராசிரியர் இ.யூ.மு.லீகின் அகில இந்தியத் தலைவர் பேராசியர் கேஎம்கே அவர்களின் அரசியல் நிழலாகி, நாடெங்கும் - நாநிலமெங்கும் வரவேற்கக் காத்திருக்கும் மக்களின் உறவாகி ....உலா வரும் இந்த நிலா முகம், இயூமுலீகின் முதன்மைத் துணைத் தலைவர் அண்ணன் அப்துர் ரஹ்மான் - மேனாள் நாடாளுமன்றப் போர்வாள்- அவர்களின் பிறந்த நாள் சமுதாய வரலாற்றில் ஒரு சந்தோஷமான நாள்! தமிழக சன்மார்க்க வரலாற்றில் ஓர் உன்னதமான நாள்.


பேரறிஞர் அண்ணா, ஒருவரை "அக்ரஹாரத்து அதிசய மனிதர்" என்றார்.
அதுபோல இவர் அரசியலில் ஓர் அதிசய மனிதர். இது நான் மட்டும் சொல்வதல்ல. அரசியலில் இருக்கும் யோக்கியர், அயோக்கியர் என இருதரப்பாரும் கூறுவதை அருகிருந்து கேட்கும் ஆச்சர்யமான வாய்ப்பு வாய்க்கப் பெற்றவன் நான்.இது சாதாரணமான சான்றிதழ் அல்ல.இறைநேசமும் மார்க்கப் பேணுதலும் உள்ளவர்களுக்கே இத்தகைய உயர்நிலை கிடைக்கும்.

"பண்புடையார் பட்டுண்டு உலகம்; அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்--- பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை இயங்குகிறது; நிலைத்திருக்கிறது; அவ்வாறானவர்கள் இல்லையாயின் உலகம் மாய்ந்து மறையும்" என்றார் வள்ளுவர். அத்தகைய பண்புடையார் பட்டியலில் இவருக்குச் சிறப்பிடம் உண்டு. ஏனென்றால் மங்கி மறைந்து போயிருக்கக் கூடிய பல நற்செயல்களுக்கு உயிரூட்டியவர் இவர். உயிர் வெளியில் தெரிவதில்லை. அதுபோல் இவரால் உயிர்ப்புற்றவற்றின் உயிர் வெளியில் தெரியாது. எனினும் அந்த உயிராற்றலின் வெளிப்பாடுளை அற உலகம், அறிவுலகம் அறிந்தே இருக்கின்றன.

அகவையிலே இளையவர் ஆயினும் அறிவிலும் பண்பிலும் மேம்பட்டவர் என்பதால் நான் அண்ணன் என்றே இவரை அழைப்பேன் ...

எல்லாப் புகழுக்கும் உரிய படைத்த இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றியாகவே இந்த ஆக்கத்தை சகோதரர்கள் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எழுத ஏராளம் உண்டு.எனினும் இறைவனைப் புகழ்ந்தவனாய் ஒன்றைக் கூறி நிறைவு செய்ய நினைக்கிறேன்.

தமிழக வரலாறு -தமிழகச் சமுதாய வரலாறு - மூன்று அப்துர் ரஹ்மான்களை எப்போதும் இதயத்தில் அன்போடு ஏந்தி இருக்கும். அவர்கள்,1.சமுதாய ஒளிவிளக்கு -சேனாஆனா B.S.அப்துர் ரஹ்மான், 2.கவிக்கோ அப்தல் ரகுமான், 3.இயூமு லீகின் முதன்மைத் துணைத் தலைவர் எம். அப்துர் ரஹ்மான் (Ex.M.P) ஆகியோர் ஆவர்.இந்த மூவரின் அன்பும் எனக்குக் கிடைத்தது இறையருளே.

அதிலும் அண்ணன் கவிக்கோ அவர்கள், முத்துப் பேட்டை அளித்த முத்தான அண்ணன் M.அப்துர் ரஹ்மான் ஆகிய இருவரும் என் மீது கொண்ட அன்பும் பரிவும் தூயது; ஓர் உடன் பிறவாச் சகோதரனாக என்னை உவந்து கொண்டது.அல்ஹம்துலில்லாஹ் ...

நம்மிடையே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாய் தலைமைத் தன்மைகளுக்குரிய தகைமைகளுடன் நடமாடிக் களமாடும் அன்பிற்கினிய அண்ணன் இயூமு லீகின் முதன்மைத் துணைத் தலைவர் M.அப்துர் ரஹ்மான்,M.A; Ex.M.P; அவர்கள் வாழ்க! வாழ்வாங்கு வாழ்க! நிறைந்து வாழ்க! நீடு வாழ்க! அல்லாஹ்வின் நல்லடியார்களின் பிரார்த்தனைகளைப் பெற்று வாழ்க! என வாழ்த்தி மகிழ்கிறேன் ...

உங்கள் மேலான வாழ்த்துகளையும் பதிவு செய்யுங்கள்.... அது நம் நல்லெண்ணங்களைப் புலப்படுத்தும் நற்செயலாகி வானவர்களும் வழி மொழியட்டும் .... !

Yembal Thajammul Mohammad ஏம்பல் தஜம்முல் முகம்மது


No comments: