முழு இரவும்….
எது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு பதில்களைச் சொல்வார்கள். ஆனால் எது இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டுப் பாருங்கள்....அதற்கான பதில் என்னவாக இருந்தாலும் அதன் மையமான பொருள் பிரச்னை என்பதாகத்தான் இருக்கும். அப்படியென்றால் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதானே பொருளாகிறது.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியமானதா என்றால் நிச்சயமாக சாத்தியமில்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
"ஓடிக்கொண்டே இருக்கிறேன்.. பல பிரச்னைகள்.
வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்னைகள்.. தூங்கமுடியவில்லை.. பிரச்னைகளை தீர்த்து நான் நிம்மதியாக உறங்குவதற்கு எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே அந்த மகானின் முன்பாக நின்றிருந்தார் அரேபிய நாட்டில் ஒட்டக பண்ணை வைத்திருக்கும் அந்த மனிதர்.
வந்த மனிதரிடம் மகான் இது ஒரு பெரிய விசயமே இல்லையே. இதற்கு மிக சுலபமான ஒரு தீர்வு இருக்கிறதே என்று சொன்னதும் வந்தவருக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகி விட்டது. அடடா இந்த மகானை முன்பே சந்தித்திருக்கலாமே என்று எண்ணியபடி பிரச்னையை மறந்து உறங்கும் உபாயத்தைக் கூறும்படி கேட்கிறார். அதற்கு அந்த மகான் உன் பண்ணைக்கு சென்று அங்கு உள்ள ஒட்டகங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா என்று கூறுகிறார்.
சென்றவர் திரும்பி வந்து எல்லா ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன என்று கூற, மகான் அவரிடம் நல்லது, அங்கு இருக்கும் எல்லா ஒட்டகங்களும் தரையில் உறங்கியவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கு, நிம்மதியான உறக்கம் கிடைக்கும். பின் காலையில் எழுந்து இங்கு வா என்று கூறி அனுப்பி வைக்கிறார்.
பிரச்னைகளின் தொந்தரவின்றி தூங்குவது இத்தனை சுலபமானதா என்று எண்ணியபடி பண்ணைக்குச் சென்றவர் மறு நாள் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் திரும்பி வந்து, இரவு முழுவதும் தூங்கவே இல்லை என்று கூறுகிறார்.
என்ன நடந்தது என்று விரிவாகச் சொல்லும்படி அந்த மகான் சொன்னதும் சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன, சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். அப்படி நான் ஒட்டகங்களை படுக்க வைக்கும்போது ஏற்கனவே படுத்துக் கொண்டிருந்த சில ஒட்டகங்கள் எழுந்து விட்டன. இப்படியே அனைத்தையும் படுக்க வைக்கும் முயற்சியிலேயே முழு இரவும் கழிந்து விட்டது. இருந்தும் என்னால் அனைத்து ஒட்டகங்களையும் மொத்தமாக படுக்க வைக்க முடியவில்லை என்று கவலையுடன் கூறுகிறார்..
அதைக் கேட்ட மகான் சிரித்தபடியே, இதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் பிரச்னையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது.. சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.. சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்.. ஆனால் சில பிரச்னைகள் முடிந்தால் வேறு சில பிரச்னைகள் புதிகாக எழலாம்... அனைத்து பிரச்னையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது.. ஒட்டகங்கள் அனைத்தும் படுத்த பிறகு உறங்கலாம் என்று நினைக்காமல் உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள் என்று சொல்கிறார்.
வாழ்வில் பிரச்சனைகள் என்பது ஒட்டகப் பண்ணையில் இருக்கும் ஒட்டகங்கள் போல் தான். அவற்றிற்கான நேரம் வரும்போது அவை தானாகவே உறங்கி விடும். அனைத்தும் உறங்கக் காத்திருக்காமல் உங்களுக்கான காலவரையறைக்குள் அவற்றைத் தீர்க்கும் முயற்சியை மட்டும் செய்து விட்டு உங்கள் வாழ்க்கையை வாழ்வதுதான் வாழ்வில் நிம்மதியைத் தரும்.
பொதுவாகவே பிரச்னைகளை விட அதில் கலந்திருக்கும் உணர்வுகள்தான் மகிழ்ச்சியை பறிக்கின்றது. அந்த உணர்வுகளை அழிக்க முடியாவிட்டாலும் அதை உங்கள் மனதில் இருந்து வேறு ஒரு பொருளுக்கு கடத்தி விட்டால் அந்த பிரச்னைகள் தீரும்வரை அதன் பாரத்தை சுமக்க வேண்டி இருக்காது. அதன் காரணமாக வாழ்வின் நிகழ்வுகளை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம். அந்த மகிழ்ச்சியான மன நிலையே பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வுகளையும் கொண்டு வந்து சேர்த்து விடும்.
உணர்வுகளை எப்படி வேறு பொருட்களுக்கு கடத்த முடியும் என்று கேட்கு முன் ஒரு சிறு நிகழ்வைக் கற்பனை செய்து பாருங்கள்.
உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நண்பர் உங்கள் பிறந்த நாளன்று ஒரு வாழ்த்து அட்டை தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை நீங்கள் மிகவும் பத்திரமாக, பொக்கிஷமாக பாதுகாக்க நினைத்துக் கொண்டிருக்கும்போது அதன் மேல் டீயோ காபியோ கொட்டி அந்த வாழ்த்து அட்டை பாழாகி விட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு சாதாரண வாழ்த்து அட்டைதானே, போனால் போகட்டும் என்று உங்களால் அதைச் சாதாரணமாக கடந்து விட முடியுமா?
அந்த நேரம் உங்கள் மனதில் எழும் வலி அந்த அட்டையின் விலைக்காகவோ தரத்துக்காகவோ ஏற்பட்டதா? அது அந்த வாழ்த்து அட்டையை தந்தவரின் உணர்வுகளைச் சுமந்து வந்ததாலும் அந்த உணர்வுகள் சேதப்பட்டு விட்டதே என்பதாலும் ஏற்பட்ட வலிதானே.
அது அன்பளிப்பாக இல்லாமல் நீங்கள் கடையில் இருந்து வாங்கி இருந்தால் அதுவும் மற்ற பொருள்களைப் போல் சாதாரணமான ஒன்றாக, சேதமடைந்தால் மீண்டும் வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு பொருளாக இருந்திருக்கும். ஆனால் அன்பளிப்பாக கொடுத்ததால் அது விலை மதிப்பற்றதாக ஒரு பொக்கிஷமாகப் படுகிறது. அந்த காகிதம் உங்களுக்குப் பரிசளித்தவரின் உணர்வுகளைச் சுமந்து வருகிறது. அந்த உணர்வுகள் உங்கள் மனதிற்குள் கடத்தப் படுகிறது. அதனால்தான் அதற்கு ஒரு சேதம் என்றதும் ஏதோ ஒன்று உங்கள் மனதிலிருந்தே உடைந்தது போல் மனமெங்கும் வலி சூழ்கிறது. எந்தப் பொருளின் மதிப்பும் அதில் கலந்துள்ள உணர்வுகளாலேயே நிர்ணயிக்கப் படுகிறது. அது நல்ல மனநிலையில் நல்ல நட்பால் தரப் பட்டதால் அதில் நல்ல உணர்வுகள் கலந்திருப்பதாக நினைத்து அதை பொக்கிஷமாக பாதுகாக்க நினைக்கிறீர்கள்.
அதுபோலத்தான் பிரச்னைகளுடன் பிணைந்துள்ள உணர்வுகளையும் உங்களால் வேறு பொருட்களுக்கு கடத்த முடியும்.
உதாரணமாக எப்படி அன்பான உணர்வுகளை அன்பளிப்பாக ஒரு பொருளில் தரமுடிகிறதோ அது போல இந்த எதிர்மறை எண்ணங்களையும் மனதை அழுத்தும் பிரச்னைகளையும் ஒரு பேப்பர் பேனா எடுத்து உங்கள் மனதில் தோன்றுமாறு அப்படியே அதில் எழுதுங்கள்.
சில நேரம் யாராவது அவர்களுடைய பிரச்னைகளை உங்களிடம் சொல்லி விட்டு போனால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்.. அவர்கள் பிரச்னைகளை எல்லாம் உங்களிம் ஏற்றி விட்டு போய் விட்டதாக அழுத்தமாக உணர்வீர்கள் தானே. அது போல் உங்களுடைய பிரச்னைகளை ஒரு பேர்ப்பரிடம் சொல்லி இறக்கி வைப்பதாக எண்ணி உங்களை வருத்தும் உணர்வுகளை எழுத்தின் மூலம் அதில் கொட்டுங்கள்.
உங்கள் பிரச்னையின் ஆழத்தைப் பொருத்தும் மன அழுத்தத்தை பொருத்தும் எத்தனை முறை எழுத வேண்டுமோ அத்தனை முறை எழுதுங்கள். சிலது ஒரு முறை எழுதுவதோடு மனபாரம் மறைந்து விட்டது போல் இருக்கும் சில நேரம் ஒவ்வொரு முறையும் எழுத எழுத குறைவது போல் இருக்கும் சிலமுறை எழுதுவதோடு அந்த அழுத்தம் உணர்ச்சிகள் மறைந்து விடும். எதிர்மறை உணர்ச்சிகள் மறைந்து விட்டால், நடந்த நிகழ்வுகள் நேர்மறையாக மனதில் பின் நிலை பெறும்.
இது ஏதோ நீங்கள் பிரச்னைகளை சும்மா எழுதி பார்க்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை. இது நீங்கள் அந்த வருத்தும் உணர்வுகளை அந்த பேப்பருக்கு எழுதும் உங்கள் கைகள் மூலமாக மாற்றி விடுகிறீர்கள். இப்போது அந்த பேப்பரை நன்றாக சுருட்டி அதை தீயில் போட்டு எரிக்கவோ அல்லது சுக்கு நூறாக கிழிக்கவோ செய்யுங்கள். அன்பளிப்பு உடையும் போது நல்ல உணர்வுகள் உடைந்து விட்டதாக மனம் வருந்தியது போல் இப்போது உங்கள் எதிர்மறை உணர்வுகள் உங்களை விட்டும் நீங்கி விட்டதாக மனம் நிதானம் பெறும். தவிர எழுதும் போது உங்கள் லாஜிக்கல் பிரைன் ஆக்டிவேட் ஆகிறது அதனால் அதிலுள்ள எமோஷன் நீங்கி பிரச்னைக்கான லாஜிக்கான தீர்வுகள் உங்களுக்கு தோன்றக் கூடும்.
அது எப்படி என்று நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அதை நம்பிக்கையுடன் நீங்கள் செய்வதில் தான் உங்கள் பிரச்னைக்கான எளிய தீர்வு இருக்கிறது.
Dr.Fajila Azad faj
(International Life Coach – Mentor – Facilitator)
fajila@hotmail.com FB:fajilaazad.dr youtube:FajilaAzad
For contact: Fajila Azad <fajila@hotmail.com>
--
முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com
No comments:
Post a Comment