அன்புடன் நோன்பு
இறை நம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு கடமையாக்கப் பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையானவர்கள் ஆவதற்காக’ – அல் குர்ஆன் (2:183)
இதோ நோன்பு ஆரம்பித்து விட்டது.இது இஸ்லாமியர்களுக்கான நோன்புக் காலம்.வருடம் முழுக்க பழகி இருந்த ஒரு முறையிலிருந்து முற்றிலும் தன்னை மாற்றிக் கொள்ளச் செய்யும் ஒரு ஓவராயிலிங் சிஸ்டம்.. முந்தின தினம் வரை நேரத்திற்கு காபி குடிக்க முடியாவிட்டால் கூட தலைவலி என உழலும் மனம் அடுத்தநாள் நோன்பு என்று அறிவிக்கப்பட்டவுடன் அதற்கேற்றாற்போல் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை எதையும் உண்ணாமல், பருகாமல் இருக்க தயாராகி விடுகிறது.
பசித்திருக்கும் நோன்பாளி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கூட ஃப்ரிட்ஜில் இருக்கும் உணவையோ நீரையோ உட்கொள்ளாத கட்டுப்பாடும் இறை அச்சமுமே இந்த நோன்பின் சிறப்பு.
இதெல்லாம் ஒருபுறமிருக்க இந்த வருட ரமலான் முற்றிலும் புது அனுபவமாக அமைந்து விட்டது.
‘பள்ளிவாசலில் முன்புபோல் பலரும் ஒன்றாக கூடி இருந்து நோன்பு திறந்து அங்கு தரப்படும் நோன்புக் கஞ்சியை ரசித்து இலயித்து குடித்து நோன்பு திறக்க முடியாததும். பின்னிரவில் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கூட்டாக இறைவனை தொழ முடியாது. தவிர்க்க இயலாத இந்த சூழலையும் நினைக்கும் போது நிச்சயம் மனவருத்தமாகத்தான் இருக்கும்.
பொதுவாக, எப்போதும் செய்து கொண்டிருக்கும் ஒன்றை விட்டும் மாறும்போது சரியான புரிதல் இல்லாமல் இருந்தால்தான் மன அழுத்தம் ஏற்படும். ஏனென்றால், மூளையின் செயல்பாட்டில் இருக்கும் ஹோமியோஸ்டேஸிஸ் எனும் சிஸ்டம் மாற்றத்தை உடனே ஏற்றுக் கொள்ள முடியாமல் முரண்படுவதால் ஏற்படும் அழுத்தம் அது. ஆனால் இந்த மாற்றம் எதற்காக என்ற புரிதல் இருந்தால் இலகுவாக எந்த மாற்றத்தையும் மனம் ஏற்றுக் கொள்ளும்.
தொழுகையைப் பொறுத்தவரை மசூதியில் தொழுவது பெரும் சிறப்பு என்றாலும், தவிர்க்கவே கூடாத வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகையைக்கூட மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்களின்போது வீட்டிலேயே தொழுது கொள்வதற்கு அனுமதித்திருக்கிறது மார்க்கம்.
‘மனிதனின் பிடரி நரம்பைவிட நாம் அவனுக்கு அருகில் இருக்கிறோம்’ அல் குர்ஆன் (50:16) என்று இறைவன் சொல்லி இருக்கும்போது இன்று உலகில் நிலவும் பேரிடர் சூழலில், மற்றவர்களோடு கலந்து உறவாட முடியாத நேரத்தையும் சேர்த்து, அமைதியான மனதோடு இன்னும் இறைவனோடு நெருங்கிக் கொள்ள கிடைக்கும் ஒரு வாய்ப்பாக, நம் மனதை புனிதமாகவும், நம்முடைய இல்லத்தையே ஒரு சிறந்த வழிபாட்டு இடமாகவும் அமைத்துக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொள்வோம்.
நபி பெருமானார் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைப் பற்றிச் சொல்லும்போது ‘மக்களே, ஒரு மகத்துவ மிக்க ஒரு மாதம் உங்களிடம் வந்து கொண்டிருக்கிறது, அது அருள் நிறைந்த மாதம், அது பொறுமையினுடைய மாதம்’ என்று ஒவ்வொன்றாகச் சொல்லி வரும்பொழுது, “இது ஏழைகளையும் வறியவர்களையும் அரவணைக்கக் கூடிய, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய மாதம்” என்று கூறுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், நாம் எங்கிருந்தாலும் மனதால் இணைந்து அமைதியும் இறைஅருளும் பெறுவோம். உள்ளத் தூய்மையோடு தன் நலம் பேணி பிறர் நலம் பேண வேண்டும் என்பதே நோன்பின் தலையாய அறமாக உள்ளது. அதன் மாண்பு காப்போம்.. பிணி அகற்றுவோம்.
From: Fajila Azad <fajila@hotmail.com>
--
முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com
muduvaihidayath@gmail.com
00971 50 51 96 433
No comments:
Post a Comment