அப்துல்கையூம்
இட்லிக்கு பதிவு போட்டுவிட்டு சாம்பாருக்கு பதிவு போடாவிட்டால் அது இட்லிக்கு செய்யும் மாபெரும் துரோகம். உண்ட இட்லிக்கு ரெண்டகம் நினைக்கக்கூடாது.
Matches are made in Heaven என்கிறார்கள். புரோட்டாவுக்கு குருமா, பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா, இடியாப்பத்திற்கு பாயா, தயிர் சாதத்திற்கு பட்டை ஊறுகாய், உப்புமாவுக்கு ஜீனி - இப்படியாக ஒவ்வொன்றுக்கும் மேட்சிங் கண்டுபிடித்த அந்த 'மெட்ரிமோனியல் மேட்ச் மேக்கர்' யாரென்று நமக்குத் தெரியவில்லை.
குஷ்புக்கு எப்படி சி.சுந்தர் மேட்சிங்கோ அதுபோல குஷ்பு இட்லிக்கு சாம்பார் மேட்சிங் என்ற உண்மை தமிழ்க்கூறும் நல்லுலகம் மட்டுமல்ல இங்கிலீஷ் கூறும் இவ்வுலகமும் ஏகத்துக்கும் அறிந்த செய்தியே.
“எனக்குத் தெரிஞ்ச வரையிலே ரோசமுள்ளவனும் மானமுள்ளவனும் ஜெயில்லே இருக்கான். !... அங்கே வேலை கிடைக்குது; கூலி கிடைக்குது; இட்லி சாம்பார், சாப்பாடு எல்லாம் கிடைக்குது..., வேறென்ன வேணும் உனக்கு” என்று எம்.ஆர்.ராதா தன் சிறைவாச அனுபவத்தைச் சுவையாகச் சாம்பாருடன் சேர்த்துச் சொன்ன நிகழ்வுதான் என் மூளைக்குள் இருந்த CEREBRUM பகுதியில் சட்டென்று உதித்தது.
கண்ணதாசன் “மஞ்சள் முகமே வருக! மங்கள விளக்கே வருக!” என பாடுவார். அது அவருடைய பார்வை. எம்.ஆர்.ராதாவின் பார்வை வேறு “சாம்பாருக்கு போடுற மஞ்சளை மூஞ்சியிலே பூசிக்கிட்டு வந்து நிக்குறே?” என்ற ரத்தக்கண்ணீர் சாம்பார் வசனத்தை மறக்கத்தான் முடியுமா?
பட்டப்பெயர் வைப்பதில் நம்மை அடித்துக் கொள்ள ஆளில்லை. ஜெமினி கணேசன் சினிமா திரையில் தோன்றும்போது யாராவது ஒருத்தர் “சாம்பார்” என்று கூட்டத்தில் ஹை டெசிபளில் அநாயசமாக கத்துவார். சிறுவயதில் கீற்றுக் கொட்டகையில் படம் பார்க்கும்போது இதை நான் அனுபவித்திருக்கிறேன்.
“எனக்கு இட்லி சாம்பார் ரொம்பவும் பிடிக்கும்” என்று எதோ ஒரு பேட்டியில் ஜெமினி எதார்த்தமாக சொல்லப்போக நம்மாளுங்க அதையே அவருக்கு “சாம்பார்” என்று பட்டப்பெயர் வைத்து விமோசனம் அடைந்து விட்டார்கள். அதையெல்லாம் ஜெமினி மிகவும் Sportive ஆகவே எடுத்துக் கொண்டார். டி.ராஜேந்தருக்கு “டண்டணக்கா டணக்குணக்கா” என்று சொல்லும்போது கோவம் பொத்துக்கொண்டு வருவதுபோல் அவர் எந்த நேரத்திலும் ஆத்திரப்பட்டதில்லை.
(இதை எழுதும்போது இன்னொன்றும் என் ஞாபகத்திற்கு வந்தது, ஒரு காலத்தில் ஜெமினி ஸ்டூடியோவின் ஓனர் ஜெமினி கணேசன் என்றும் ஏ.வி.எம். ஸ்டூடியோவின் அதிபர் ஏ.வி.எம்.ராஜன் என்றும் நான் வெள்ளந்தியாக நம்பியதுண்டு)
"சாம்பாரை முதன் முதலில் தயாரித்தது மராத்தியர்கள்தான்" என பிரபல சமையல் கலை நிபுணர் குணால் கபூர் என்பவர் உடான்ஸ் விட அந்த எழவையும் நம்மவர்களும் சீரியஸாக நம்பித் தொலைத்து அவரவர் பங்குக்கு மனதில் தோன்றிய கற்பனைக்கு ஏற்றவாறு ‘தீஸீஸ்’ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த குணால் கபூர் என்பவர் மராத்திய சிவாஜி பிரியர்கள் பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரேயின் சிஷ்ய கோடியோ என்னவோ?
உடுப்பிகாரர்களை கேட்டால் நாங்கள்தான் சாம்பாரின் பிதாமகன்கள் என்கிறார்கள். இனிக்கும் சாம்பாரில் தோய்ந்த அந்த ஊறிய இட்லியும் உன்னத சுவைதான் மறுப்பதற்கில்லை
1530 C.E. தமிழக கல்வெட்டிலேயே சாம்பரம் என்ற சொற்பதம் காணப்படுகிறது. .அதாவது “அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக” என்று கல்வெட்டில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இதை K.T.ஆச்சார்யா என்ற ஆய்வாளர் மேற்கண்ட ஆதாரத்துடன் தெளிவாக எடுத்தியம்பி இருக்கிறார்.
(ஆதாரம் : South Indian Inscriptions, IV, 503, 1530 CE, Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha)
"கறியமுது பல சம்பாரம்" என்றால் பல காய்கறிகளை கொண்டு உணவு படைத்தல்" என்று பொருள்.
"நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக" என்றால் நெய் சேர்ந்த உணவை பணம் ஒன்றுக்கு கொடு என்று பொருள்.
தமிழில் சாம்பு என்றால் ‘குறைத்தல்’ அல்லது ‘அரைத்தல்’ என்று பொருள். அரைத்த தேங்காய் அல்லது அரைத்த தானியங்கள் என்பதை குறியீட்டாகச் சொல்கிறது.
இந்த வாட்ஸப் நவீனயுலகில் துப்பறியும் சாம்புதான் சாம்பாரைக் கண்டுபிடித்தார். சாம்புதான் பின்னர் சாம்பாராக மருவியது என்று நான் புதிதாக ஒரு புரளியைக் கிளப்பி விட்டாலும் எல்லோரும் நம்பி விடுவார்கள்.
குணால் கபூர் சொல்லும் டணால் கதை இதுதான்:.
மராத்திய மன்னர் சாம்பாஜி ஒருநாள் அவரது சமையற்காரர் வேலைக்கு வராமல் ‘கட்’ அடித்தபோது அவரே குசியாக குசினிக்குச் சென்று சமைக்க முற்பட்டாராம். Dhal Curry செய்வதற்காக சென்றபோது ஏதோ ஞாபகத்தில் புளியையும் தண்ணீரையும் கலந்து விட்டாராம். கடைசியில் பார்த்தால் அது ஒரு சுவையான திரவமாக உருவெடுத்து விட்டதாம். உடனே சாம்பாஜி என்ற அவரது பெயரால் அதை சாம்பார் என்று பெயர் வைத்து விட்டார்களாம்.
இதற்கு என்னப்பா ஆதாரம் என்று கேட்டால், 17-ஆம் நூற்றாண்டில் சாம்பார் தொடர்பாக எழுதப்பட்ட “போஜன குதூகலம்” மற்றும் “சரபேந்திர பாஸ்திரம்” என்ற இரண்டு நூல்கள் இதற்கு ஆதாரம் என்கிறார்கள்.
யோவ்.. குணாலு யார்கிட்டேயா கதை விடுறே?
இன்னும் கொஞ்சம் விட்டா சர்பத்தை கண்டுபிடிச்சது சரபோஜி, வெங்காயத்தை கண்டுபிடிச்சது வெங்கோஜி என்று நம்மக்கிட்டேயே ரீல் சுத்துவே போலிருக்கே?
நல்லவேளை இட்லியைக் கண்டுபிடித்தது இட்லர் என்று சொல்லாதவரை சந்தோஷம்தான் குணாலு.
இன்னும் வேறு யாராவது சாம்பாரைக் கண்டுபிடித்தது சாம்பல் பள்ளத்தாக்கில் இருந்த பூலான் தேவிதான். அவர் பெயரில் உள்ள சாம்பல் என்ற சொல்தான் சாம்பார் ஆகியது என்று அறிக்கை விட்டாலும் விடலாம். அதற்கு முன்பு நாம் ஜூட் விடலாம்.
#அப்துல்கையூம்
No comments:
Post a Comment