Saturday, May 16, 2020

இட்லி

அப்துல்கையூம்

இதை நீங்க ரூம் போட்டு யோசிச்சீங்களா என்று கேட்டால், ஊ..ஹூம் கிடையாது, என் ரூமிலேயே உட்கார்ந்து நானே யோசித்தது. மண்டபத்திலும் யாரும் இதை எழுதிக் கொடுக்கவில்லை.

இத்தாலியை ஆங்கிலத்தில் ITALY என்று எழுதிவிட்டு நாம் அதை இட்டாலி என்று ஆங்கிலத்தில் உச்சரிப்போம். நோ.. நோ.. அப்படி உச்சரிக்கக் கூடாதாம். இட்லி என்றுதான் உச்சரிக்க வேண்டுமாம். உடனே பிஸ்ஸாவைப்போல் இட்லியும் இத்தாலி உணவு என்று நான் சொல்லிவிட்டதாக யாரும் என்னிடம் மல்லுக்கு நிற்க வேண்டாம்.

மல்லூஸ்க்கு எப்படி புட்டு பிரதான உணவோ அதுபோல நமக்கு இட்லி பிரதான உணவு, காலப்போக்கில் இட்லி குட்டி போட்டு இப்போது குட்டி குட்டி இட்லியும் வாரிசாக வந்து விட்டது.

வடநாட்டில் தமிழர்களாகிய நமக்கு அவர்கள் வைத்திருக்கும் பட்டப்பெயர் “இட்லி சாம்பார்”.

அடேய் ..! இட்லிதான் உலகத்திலேயே ஆரோக்கியமான, சத்தான உணவு என்று மேலை நாடுகளே ஒத்துக்கிட்டாங்க என்று சொன்னால் அந்த பான்பராக் வாயன்களுக்கு எங்கே சார் புரியப் போகுது?


7-ஆம் நூற்றாண்டிலிருந்தே இது நம்ம உணவுதான். We are the Sole proprietor என்று தாராளமாக அடித்துச் சொல்லலாம். “இட்டரிக” என்ற சொல்லாடல் அன்றைய காலக் கட்டத்தில் இருந்துள்ளது.

அதன் பின்னர் 12-ஆம் நூற்றாண்டில் இட்டு + அலி என்ற சொல்லாடல் நிலவியிருக்கிறது. இட்லி சட்டியில் குழிப்பணியாரம் மாதிரி மாவை இட்டு பிறகு அவிப்பதனால் இப்பெயர் வந்தது என்கிறார்கள்.. அவித்தலுக்கு “அலி” என்ற சொற்பதமும் உள்ளது.. “அலி” என்று வருவதால் இதைக் கண்டுபிடித்தவர் பர்மாவிலிருந்து தமிழகம் வந்த கடையநல்லூர் முஹம்மது அலி என்ற முடிவுக்கு யாரும் வந்து விடாதீர்கள்.

சந்தேகமில்லாமல் இது தமிழ்நாட்டு பண்டம்தாங்க. அதுக்காக.. “எங்கே.. துண்டு போட்டு .தாண்டுங்கள் பார்ப்போம்” என்றெல்லாம் கூறி என்னை பாடாய்ப் படுத்தக்கூடாது.. ஆமாம்.

கும்பகோணத்துக்கு எப்படி டிகிரி காப்பியோ, சைதாப்பேட்டைக்கு எப்படி வடகறியோ, மதுரைக்கு எப்படி சட்னியோ அதுபோல இட்லிக்கு பேர் போன ஊர் காஞ்சிபுரம். (பேர் பெற்ற ஊர் என்றுதானே சொல்ல வேண்டும்? அதென்ன பேர் போன ஊர்?- இப்படியொரு சந்தேகம் எனக்கும் உண்டு) 'சபாலங்கி கிரி கிரி சைதாப்பேட்டை வடகறி' என்ற ரைமிங் பழமொழியே பிறந்து விட்டதே. வேறென்ன?

முன்னர் ‘பொசுபொசு’வென இருக்கும் இட்லியை “மல்லிகைப்பூ இட்லி” என்று சொல்வார்கள். இப்போது வேற லெவல். “குஷ்பு இட்லி” என்று சொன்னால்தான் எல்லோருக்கும் பரிகிறது.

வெறும் இட்லி கடை வைத்தே உலகப் புகழ்ப் பெற்றவர்கள் இல்லையா? உதாரணம் “முருகன் இட்லி கடை”.

மார்ச் 30-ஆம் தேதியை உலக இட்லி தினமாக கொண்டாடுகிறார்கள். வடநாட்டு ஆசாமிகளிடம் கேட்க வெண்டும். யோவ்..! நீங்களும் தைரியமிருந்தா ஏதாவதொரு நாளை “பானிபூரி தினம்” அல்லது “பேல் பரி தினம்” என்று கொண்டாட வேண்டியதுதானே என்று.

அடுத்த பதிவு என்ன தோசையா என்றுதானே கேட்கிறீர்கள்? புரிகிறது. புரிகிறது. அதுக்கென்ன எழுதினா போச்சு.


#அப்துல்கையூம்

No comments: