Friday, May 29, 2020

ஊர் என்று எதனைச் சொல்வீர்?

ஊர் என்று எதனைச் சொல்வீர்?
Shahjahan R

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எதற்காக ஊருக்குப்போவதில் அவ்வளவு குறியாக இருக்கிறார்கள்? இருக்கிற இடத்திலேயே இருக்க வேண்டியதுதானே? அரசுதான் உணவு தருகிறதே? நிலைமை சரியாகிற வரை அமைதியாக இருக்க வேண்டியதுதானே?
- என்றெல்லாம் சில அறிவாளிகள் கேள்வி கேட்டார்கள். ஆட்சியில் இருப்பவர்கள்கூட. பிரதமர் ஒருவர்தான் பேச்சுவாக்கில் ஒருமுறை சொன்னார் - “புலம் பெயர்ந்தவர்கள் தன் ஊருக்குப் போக வேண்டும் என்று நினைப்பது இயல்பானது” என்று. ஆனால் சொன்னாரே தவிர, செய்தது ஏதுமில்லை.

தினமும் இரண்டு வேளையும் அரசு தருகிற உணவுக்காக, அது எப்போது வரும் என்று எத்தனை நாட்களுக்கு காத்திருக்க முடியும்? எத்தனை நாட்களுக்குக் பிச்சைக்காரர்களைப் போல கையேந்தி நிற்க வேண்டியிருக்கும் என்று தொழிலாளர்களுக்குத் தோன்றும் என்பதெல்லாம் இந்தக் கேள்வி கேட்கும் அறிவாளிகளுக்குப் புரியாது. அவர்களுக்குத்தெரிந்ததெல்லாம், தன் தலைவன் எதைச் சொன்னாலும் அது தவறாக இருந்தாலும் போற்ற வேண்டும். தலைவன் எதையும் செய்யாவிட்டாலும் அதற்கும் ஏதாவது சப்பைக்கட்டு கட்ட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அடிமை புத்தி. அல்லது தொழிலாளர்களை வெறும் அடிமைகளாகக் கருதும் புத்தி.


சோறு இல்லை, தண்ணீர் இல்லை, ஊருக்குப்போக வாகனங்கள் இல்லை. பிள்ளைகள், வயதான பெற்றோர்கள், நோயுற்றவர்கள், கர்ப்பிணிகள், என எல்லாரும் பல நூறு மைல் நடந்தாலும் பரவாயில்லை ஊருக்குப் போவோம் என்ற முடிவோடு கொளுத்துகிற வெயிலில் நடக்கிறார்களே ஏன்?

சக்கரக்காலன் அல்லது பயணக்காதன் நூலின் முன்னுரையில் இப்படி எழுதியிருப்பேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அந்த வார்த்தைகள் சத்தியமான வார்த்தைகள் என்று இன்றைய நிகழ்வுகள் காட்டுகின்றன. எழுதுவதற்கான கருத்துக் கிடைத்தது ராஜன்குறை அவர்களிடமிருந்துதான். :
<<
ஊர் என்று எதனைச் சொல்வீர்? பிறந்த ஊரா? வளர்ந்த ஊரா? வாழ்ந்த ஊரா? பிழைத்த ஊரா? வசிக்கும் ஊரா? ஊர் என்றாலே எப்போதுமே எல்லாருக்குமே நினைவு வருவது சொந்த ஊர், அல்லது வாழ்ந்த ஊர்தான். “ஊர் என்பதே தற்போது வசிக்கும் ஊர் அல்ல, வாழ்ந்த ஊர்தான்” என்றார் தில்லிகை இலக்கிய வட்டக் கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் ராஜன்குறை கிருஷ்ணன். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!

வங்க எழுத்தாளர் ஆஷா பூர்ணாதேவியின் சிறுகதை ஒன்றில் அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் நிலை இவ்வாறு வர்ணிக்கப்பட்டிருக்கும் —
“அவன் தன் பிறந்த மண்ணுக்கு வந்து தங்குவது என்பது வருடத்தில் பத்து நாட்கள்தான். அந்தப் பத்து நாட்களுக்கு முன்பு, பத்து மாதங்கள் தினமும் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பான். ஊருக்குக் கிளம்புவதற்கு முன் பத்து நாள் ராத்திரி சரியாகத் தூங்க முடியாமல் தவிப்பான். ...”

ஆமாம். போவதற்கு முன் தவிப்பது மட்டுமல்ல, ஊருக்குப் போய்த் திரும்பிய பிறகும் வேறு விதமான தவிப்பு தொடரும். பயணத்தின் போதை தொடரும். அனுபவங்களை மனது அசைபோடும். இதழ்களில் சமயங்களில் தானாகவே புன்னகை தோன்றி மறையும், சில நேரங்களில் கண்ணீரும் வழியும். அடுத்த பயணம் பற்றிய ஏக்கமும் கற்பனைகளும் விரியும். இதெல்லாம் ஊரிலிருந்தும் குடும்பத்தை விட்டும் பிரிந்து தொலைவில் இருப்பவர்களுக்கு மட்டுமே நன்றாகப் புரியும்.
>>

தில்லிக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் ஊர் என்றால் எனக்கு சொந்த ஊர்தான். உடுமலைதான். வருமானமும் வேலையும் தில்லியில்தான். பின்னே ஏன் ஊர் என்றால் சொந்த ஊர் நினைப்பு வருகிறது? ஏனென்றால் இங்கே நான் வேர் பிடிக்கவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து வந்து இங்கேயே குடியமர்ந்து விட்டவர்கள் பல லட்சம் பேர். சொந்தமாய் வீடு வசதி வேலை என்று உருவாக்கிக் கொண்டவர்கள். அவர்களுக்கும்கூட ஊர் என்பது சொந்த ஊர்தான். என்ன, எப்போதும் ஊருக்குப் போகும் தவிப்பு இருக்காது. ஆண்டுக்கு ஒருமுறை அல்லது நல்லது கெட்டதுகளுக்குப் போய் வருவார்கள்.

ஆனால், பிழைப்புக்காகப் போனவர்கள், அன்றாடம் காய்ச்சிகள், வேலை கிடைக்கும் இடங்களுக்கு டேரா தூக்க வேண்டியவர்கள், ஒப்பந்தக்காரர் எங்கே போகச்சொல்கிறாரோ அங்கே குடிபெயர நேர்ந்தவர்கள் - இவர்கள் வேர் பிடிக்க முடியாதவர்கள். அவர்களுக்கு ஊர் என்றால் எப்போது சொந்த ஊர்தான். அரபு நாடுகளுக்கு சம்பாதிக்கச் சென்றவர்களின் மனநிலையும் இதுதான். ராஜஸ்தான் பீகாரிலிருந்து தெறகே வந்தவர்களின் நிலையும் இதுவேதான்.

யாரோ ஒரு எழுத்தாளரின் கதை ஒன்று லேசாக நினைவு வருகிறது. அதில் வரும் அப்பா, தம் கடைசி காலத்தில் ஊருக்குப் போய் சொந்த வீட்டில்தான் உயிர்விடுவேன் என்கிறார். நகரத்தில் எல்லா வசதிகளும் இருக்கும் வீட்டைவிட்டு ஊருக்குப் போயாக வேண்டும் என்று அடம்பிடிக்கிறாரே என்று மகனுக்கு கோபம் வரும். இருந்தாலும் கடைசியில் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவான். அதேபோல ஊருக்கு வந்து சொந்த வீட்டில் அமைதியாக உயிர் பிரிகிறது. இதுபோல எத்தனையோ கதைகள் இருக்கும். அந்தக் கதையைப் படித்தவர்கள் ஆஹா ஓஹோ என்று மலைத்துப் போயிருப்பார்கள்.

சொந்த ஊர் என்ற உணர்வு, ஏதோ செல்வந்தர்களுக்கும் வசதி உள்ளவர்களுக்கும் மட்டும் உரித்தானதல்ல. சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் எல்லாருக்கும் உரியது.

அம்மா புற்றுநோயால் தாராபுரம் மருத்துவமனையில் இருந்தார். இனியும் சிகிச்சை பயன்தராது என்பது அவருக்கும் தெரிந்துவிட்டது. ஊருக்கே போய்விடலாம் என்கிறார். தொடர்ந்து சிகிச்சை செய்ய பணவசதி இல்லை என்பது மட்டும் காரணமல்ல, ஊரில் தன் வீட்டில் உயிர் பிரியட்டும் என்ற எண்ணமும் காரணம். இத்தனைக்கும் தாராபுரம்தான் அவர் பிறந்த ஊர். ஆனால் சொந்த ஊராகிப்போனது மடத்துக்குளம். வீடும்கூட சொந்த வீடு அல்ல. ஆனால், மடத்துக்குளம் என்ற ஊரில்தான் அவர் வேர் பிடித்திருந்தார். அதுதான் அவர் வாழ்ந்த ஊர்.

அதேதான் இப்போதும் நடக்கிறது. பல நூறு மைல்கள் நடக்கிறவர்கள் யார்? மனைவிகளை ஊரில் விட்டுவந்த கணவர்கள். பிள்ளைகளைப் பிரிந்திருக்கும் தந்தைகள். பெற்றோரை விட்டு வந்திருக்கும் மகன்கள். சொந்தங்களைப் பிரிந்து வந்திருக்கும் குடும்பங்கள். இவர்களின் உடல்கள் இங்கே இருந்தாலும் உள்ளங்கள் ஊரின்மீதுதான் இருக்கும். தனக்கே சோறு இல்லாதநிலையில் பிள்ளைகள் என்ன செய்கிறார்களோ எப்படி இருக்கிறார்களோ என்ற தவிப்புதான் இருக்கும். என்னவானாலும் பரவாயில்லை, சொந்த ஊருக்குப்போவோம், சொந்த ஊர் நம்மைக் கைவிடாது, கஞ்சியோ கூழோ இருப்பதை பகிர்ந்து குடிப்போம். செத்தாலும் சொந்தங்களின் மத்தியில் சாவோம் என்ற உந்துதல் வருவது இயல்பு.

ஆட்சியாளர்களுக்கு இதெல்லாம் புரியும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் ஐந்து-ஆறு வயதுச் சிறுமிகள் எல்லாம் மூட்டைகளைச் சுமந்து கொண்டு நடப்பதைப் பார்த்தபிறகும், சாலையிலேயே பிரசவித்து சிசுவையும் தூக்கிக்கொண்டு நடக்கிற தாயையும் பார்த்த பிறகும் மனம் இளகவில்லை, வாகனங்களுக்கு ஏற்பாடு செய்ய மறுக்கிறார்கள் என்றால்... அவர்கள் மனிதர்களே அல்ல. விலங்கினும் கீழானவர்கள் என்று சொல்வது விலங்குகளை இழிவுபடுத்துவதாகும். விலங்குகள் தம் பசிக்குத் தவிர மற்ற விலங்குகளை இம்சிப்பதில்லை. இவர்கள் கொடூரர்கள். இரத்த வெறி பிடித்தவர்கள்.

நடந்து சாகிறவர்கள் சாகட்டும். அதற்கும் தாக்குப்பிடித்து மிஞ்சுபவர்கள்தான் உயிர்வாழத் தகுதி உள்ளவர்கள். அவர்களும் எம் தயவில்தான் உயிர் வாழ்ந்தாக வேண்டும். கொஞ்சம் மீண்டதும் வேறு வழியே இல்லாமல் நாளை இன்னும் குறைந்த கூலிக்கு தயாராகி வருவார்கள் என்று நமட்டுச் சிரிப்புடன் காத்திருப்பவர்கள். இவரகளைப் பொறுத்தவரை இந்தப் புலம் பெயர் தொழிலாளர்கள் குடிமக்கள் அல்ல. அடிமைகள்.

அடிமைகள் பற்றி ஒரு பதிவு பினனர் வரும்.

Shahjahan R

No comments: