Wednesday, May 13, 2020

மௌனம் ஓர் ஆயுதம்


----- தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்

இளையான்குடி

ஸவ்ர் குகையே! – எங்கள்

தாஹா நபியிருந்த

பவர் குகையே !


அன்று

சத்தியம் சொல்லப்

புறப்பட்ட

எங்கள் சந்தன மலர்களைப்

பத்திரப்படுத்தித் தந்தாயே…!

பகை மேகங்கள்

விழுங்கப் பார்த்ததே…!



இளைப்பார

நிழலில் தங்குவோம்!

உன் மடியில் – அன்று

எங்களின் தங்க நிழல்கள் அல்லவா

இளைப்பாறின!


குரைஷியர்களுக்குப் பயந்து

எங்கே…. உளறிவிடுவாயோ

என்று தானே

வல்ல அல்லாஹ்

உன் வாயைச் சிலந்தி நூலால்

தைக்கச் செய்தான் !


சிலர் பேசினால்

புரட்சி !

நீ – மௌனம் காத்தே

ஒரு புரட்சி செய்தாய் !

உன் மௌனப் புரட்சியால்..

குரைஷியர்களின் அதிரடிப்படை

நூலாம் படையிடம்

தோற்றுத் திரும்பியதே …!


ஸவ்ர் குகையே!

உன்னிடமிருந்து

ஒரு பாடம் கற்றோம் !

என்ன தெரியுமா ?

பேசுவதென்றால் ..

சபையறிந்து

பேச வேண்டும் என்பார்கள் !

நீயோ ……

தருணம் பார்த்து

மௌனித்தாய் !

எங்கள் பௌர்ணமிகள்

தப்பித்தன !


மௌனம் என்பது …

அடங்கிப் போவதல்ல

அது

எதிர்ப்பை முறியடிக்கும்

ஆயுதமென்று

சொல்லாமல்

சொல்லி நிற்கிறாய் !

ஸவ்ர் குகையே !

நீ

கற்குகையல்ல !

மௌனம் போதித்த

கல்லூரி !

நன்றி

இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு மாத இதழ்

மே 2014

முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com

No comments: