Wednesday, May 13, 2020

அம்மா ஆஸ்பத்திரியில், வீடே பட்டினி



அரிசியும் பருப்பும்
அடுக்குப் பானையிலிருக்கு
உப்பும் புளியும்
தக்கரிலே இருக்கு

மாவடுவும் மசாலாவும்
தகர டப்பாக்குள்ளே
சீனியும் சிறுகடுகும்
சிவப்புநிற குடுவையிலே



கண்ணாடி போத்தலிலே
கல்கண்டு இருக்கு
காகிதப் பொட்டலத்தில்
கருமிளகு மடித்திருக்கு


மஞ்சளும் மல்லித்தூளும்
அஞ்சரைப் பெட்டிக்குள்ளே நெஞ்சையள்ளும் நிறத்தில்
பிஞ்சுக் கத்தரிக்காயுமுண்டு

அத்தனைப் பொருட்களும் அடுக்கலையில் இருக்க
அம்மா நீ இல்லை
ஆக்கி அதைக் கொடுக்க

காயிருக்கு கறி இருக்கு
கழுவித் தர ஆளிருக்கு
கறிசோறு கிளறித்தர
தாயில்லை வீட்டுக்குள்ளே

ஊருக்குள் நோய் வந்து
உலகையே அழித்தாலும்
சொற்ப நேரம் பிந்தாமல்
சோறு தந்தாய் நீ யம்மா

தாய்மை மணக்கும் உன்
தயவு நோய் தீர்க்கும்
தைலம் மணக்குதின்று
தாய் உந்தன் தேகத்திலே

ஒற்றைத் தலைவலிக்கே
மடி தந்த மகராசிக்கு
மருத்துவமனை படுக்கை
மடியாகிப் போனதம்மா

பட்டம் படித்ததில்லை நீ
பட்டயமும் பெற்றதில்லை
பாசம் பயிற்றுவிக்கும்
பல்கலைக் கழகமம்மா

சேர்த்துவைத்த செல்வமெல்லாம் செலவழிக்கச் சம்மதமே
முடக்கிய நோய் நீங்கி
மீண்டு நீ வருவதற்கே

வீடே பசித்திருக்கு வீட்டுப் பூனை படுத்திருக்கு வேகமாக நீ வந்து விருந்தொன்று வைப்பாய் அம்மா!

இளங்கவி சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
 நன்றி https://almighty-arrahim.blogspot.com

No comments: