Sunday, September 29, 2019

கடந்த கால நினைவுகள்

கடந்த கால நினைவுகள்

பழைய டைரிகளைப் புரட்டிக்கொண்டிருந்தேன். என் தாய் வழிப் பாட்டியார், தாயில்லாமல் போன என்னை வளர்த்து ஆளாக்கிய தாய், நென்னம்மா என்று நாங்கள் அன்போடு அழைத்த செல்லம் என்கிற அலிமுஹம்மது நாச்சியாரைப் பற்றிய ஒரு குறிப்பு அது.

நென்னம்மா உயிர் வாழ்ந்த காலம் வரை எனக்கு சம்பாத்தியம் கிடையாது. நான் சம்பாதிக்க ஆரம்பித்த காலத்தில் நென்னம்மா உயிரோடு இல்லை. ‘விழுதுகள் ஆளானபோது விழுந்துவிட்ட ஆலமரம்’ என்று என் தம்பி (சிங்கை ஆடிட்டர் மொஹிதீன் அப்துல் காதர்) தீன்கூட நென்னம்மாவின் ஒளிப்படத்தின்கீழே எழுதி வைத்திருப்பார்.

எந்தக் கவிஞனின் வரிகளோ தெரியாது, ஆனால் நென்னம்மாவுக்கான மிகச்சரியான வரிகள். நான் நென்னம்மா பற்றி ‘தாயுமானவள்’ என்று ஒரு நாவல் எழுதியுள்ளேன். சரி இப்போது அந்த டைரியின் வரிகள் (படித்து முடித்துவிட்டு என்ன மீறி சப்தமாக அழுதுவிட்டேன்):

18/07/1987
1.55 a.m.


என் பாட்டியார் இறந்து எத்தனையோ வருஷங்கள் கழித்து இப்போது அழுகிறேன். என் தலையின் வேர்களில் பேன் பிடுங்கிய உன் காக விரல்களுக்காக இப்போது அழுகிறேன்.


நீரினுள் விழுந்த கல்லைப்போல என்னை லேசாக உணர வைத்த அன்பின் சாயல்களான உன் திட்டல்களுக்காக இப்போது அழுகிறேன். நான் அழக்கூட இல்லை என்று கூறினார்கள்.

என் கண்ணீரின் பரிமாணங்களைப் புரிந்துகொண்ட உன் நித்திய மௌனத்தை நினைத்து நினைத்து இப்போது அழுகிறேன்.

மகாராணி உனக்கு எதுவும் செய்ய இயலாத என் ஏழ்மையை நினைத்து இப்போது அழுகிறேன்.

என் கால்களையே குறிவைக்கும் கபடி ஆட்டக்காரர்களுக்கு மத்தியில் எனக்கு சுகம் கொடுத்த நீ சரமாரியாக வீசிய ப்ளாஸ்டிக் கத்திகளை மீண்டும் யாசித்து இப்போது அழுகிறேன்.

என்னைக் கட்டியணைத்து உறங்கிய கைகள் தனியே உறங்குவது என்ன நியாயம் என்று தெரியவில்லை.

பணத்தை நான் எப்போதும் மதித்ததில்லை. உனக்குப் பயன்படாத அந்தப் பணத்தை இனி நான் எப்போதும் மதிக்க மாட்டேன். உனக்காக நான் என்ன செய்ய?

அவ்வளவுதான். என் பாட்டியார் செல்லம் அவர்கள் ரமலான் மாதம் பிறை 24ல் வஃபாத்தானார்கள்.

எங்களுக்காகவே வாழ்ந்து, எங்களை உருவாக்கி மறைந்த அவர்களுக்கு அல்லாஹ் மறுமையின் மகிழ்ச்சியையும் கண்ணியத்தையும் கொடுத்தருள்வானாக, ஆமீன்!

நாகூர் ரூமி

No comments: