அபு ஹாஷிமா
அன்பு மிகுந்தவனே!
அருளில் மிகைத்தவனே
உலகங்கள் அனைத்தையும்
அழகுற அமைத்து
மாட்சியாய்
ஆட்சி செய்பவனே
ஏக இறையோனே
யா அல்லாஹ்...
உன் அழகுத் திருப்பெயரால்!
அளவுக்கும் அளவேயில்லாத
அருளாய் ...
நிகருக்கும் நிகரேயில்லாத
அன்பாய் ...
இலங்குகின்ற ஏக இறையே!
எல்லாப் புகழும்
உனக்கு நிறையே!
உதிர்ந்து போகும் உலகம்
மீண்டும்
உதயமாகும் நாளின்
ஆளுமைமிக்க அதிபதி
நீ!
யா அல்லாஹ்!
உன்னையே நாங்கள்
சிரம் பணிகின்றோம்
உன்னிடத்திலேயே
நாங்கள்
உதவி தேடி
கரமும் ஏந்துகின்றோம்!
இறைவா...
நாங்கள் செல்லும் பாதையை
நேர்வழியாக்கி
எங்களை அதில் நடத்து!
யாருக்கெல்லாம்
வழி காட்டி
நீ
அருள் புரிந்தாயோ
அவர்கள் சென்ற
சீரிய வழியில் !
அது ...
உன் சினத்துக்கு
இலக்கானவர்களின்
வழியல்ல..
நெறி பிறழ்ந்து வாழ்ந்தார்களே
அவர்களின் வழியுமல்ல!
யா அல்லாஹ்...
எங்கள் வேண்டுதலை ஏற்பாய்
அருள் புரிவாய் !
ஆமீன் !
No comments:
Post a Comment