Monday, September 30, 2019

கீறல்கள்

அப்துல் கையூம்

கீறல்கள்
வாழ்வியலில் ஓர் அங்கம் !

மண்ணை கீறித்தான்
விதைகளும் விருட்சமாகின்றன !
மேகத்தைக் கீறித்தான்
வான்மழையும் பொழிகின்றன !!

இராமன் கிழித்த
கோட்டின் கீறலில்தான்
இராமாயணமே பிறந்தது !

இயேசுவுக்கு அணிவித்த
முட்கிரீடத்தின் ரத்தக்கீறல்தான்
பாவிகளை இரட்சித்தது !

மூஸா நபியின் கைத்தடி கீறலில்தான்
சமுத்திரமே பிளந்தது !


முகம்மது நபியின் கீறல்
சந்திரனையே பிளந்தது !

காண முடிந்த
கைரேகையின் கீறல்களும்
காண முடியாத
தலையெழுத்தின் கீறல்கள்தான்
தலைவிதியை நிர்மாணிக்கின்றன !

கீறல்கள்..
நன்மையும் பயக்கும்
தீமையும் பயக்கும் !

கீறல் விழுந்த இசைத்தட்டு
ஒரு பாட்டைக்கூட முழுசாக
கேட்க விடுவதில்லையே !

இனிப்பப்பத்தை கீறித்தானே
இன்று பிறந்தநாளையே கொண்டாடுகிறோம்?

பூமத்திய ரேகையும்
ஒரு கற்பனைக் கீறல்தானே ?

மின்னல்….
வானத்தின் கீறல் !

மருத்துவனின் கீறல்
உயிர்காக்கும் சிகிச்சை !

மனதில் விழும் கீறல்
மிகவும் ஆபத்தானவை !
அது நட்பையும் முறிக்கும் !

அனைத்து மணமுறிவுகளும்
இலேசான கீறலினால்
ஏற்பட்ட விபத்துகள்தான் !

கீறல்களை அலட்சியப்படுத்தாதீர்
கீறல்கள் விரிசல்கள் ஆகும் !
விரிசல்கள் பிளவுகள் ஆகும் !
பிளவுகள் …….
ஒட்ட முடியாமலேயே போகும்!

கீறல்களை அலட்சியப்படுத்தாதீர் !!

(கவிதை அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப எழுதப்பட்டது)


#அப்துல்கையூம்

No comments: