Sunday, September 29, 2019

பாட்டிகள்.. இறைவனின் விசித்திரப் படைப்புகள் !

எனது நண்பர் நாகூர் ரூமி தன் பாட்டியைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார், அதைப் படித்ததும் எனக்கும் என் பாட்டியின் நினைவு வந்து விட்டது.

பாட்டிகள்..
இறைவனின்
விசித்திரப் படைப்புகள் !
கோபிக்கத் தெரியா
அப்பாவி ஜென்மங்கள் !

ஈசாப்பும் தன் பாட்டியிடத்தில்தான்
கதைகள் கற்றிருக்க வேண்டும் !

பானை பிடித்தவள்
மட்டுமா பாக்கியசாலி?
பாட்டி வாய்த்தவர்களும்
பாக்கியசாலிதான் !

பாட்டியின் அரவணைப்பில்
படுத்துறங்கும் அதிர்ஷ்டம்
கொடுப்பினை உள்ளவர்களுக்கு
மட்டுமே கிட்டும் ஆசீர்வாதம் !

என் பாட்டியின்
இடுப்பில் தொங்கும் சுருக்குப்பை
எனக்கு “பாக்கெட் மணி”யை
அள்ளித்தரும் அமுத சுரபி !

பெற்றோர்களிடம் அடிவாங்கும் போதெல்லாம்
அடைக்கலம் புகும் வேடந்தாங்கல்

கஞ்சத்தனம் காட்டும்
பெற்றோர்களைப் போலன்றி
“செல்லம்” வாரி வழங்குவதில்
பாரி வள்ளல் !

சூரியனைச் சுற்றி வரும்
சந்திரனைப் போல
அவர்களின் நினைப்புகள் யாவும்
பேரன் பேத்திகளை மட்டுமே
சுற்றிச் சுற்றி வரும் போலும் !

தேனீக்களும் பொறாமைப் படுவது
பாட்டிகளின் சுறுசுறுப்பை
பரவசமாய் பார்த்த பின்புதான் !

உறங்கும் நேரத்திலும்
கூரையையே வெறித்துப் பார்த்து
கொட்டக் கொட்ட முழித்திருக்கும் அவர்கள்
யாரை நினைக்கிறார்கள்..?
பேரன் பேத்திகளைத்தானே..?

பாட்டிகளை
இறைவனும் கோபிக்க மாட்டான்.
நான் முதல் நோன்பு பிடித்தபோது
“நீ பசி தாங்க மாட்டாய்” என்று
பாதியிலேயே யாரும் அறியாமல்
பசி போக்கியதும் என் பாட்டிதான் !

பாட்டியின் நினைவுகளை
மனதிலிருந்து அழிப்பதற்கு
இதுவரை எந்தவொரு செயலியும்
கண்டுபிடிக்கவில்லை என்பதே நிதர்சனம்


#அப்துல்கையூம்

No comments: