மதுரையில் பிறந்த
மதுரம் நீ.
அதன் சாரம்,
புதுகையில் இருந்து
ஊற்றெடுத்தது- என்பதே
உன் பூர்வீகம்.
தமிழ்த்தாயின்
மனம் பெரிது-
உன் மனம் போல.
எனவே,
உர்தூ குடும்பத்து
உதயத்தை,
தமிழ்த்தாய்
தனதாக்கிக் கொண்டாள்.
வைகைக் கரையில் தொடக்கம்
வையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம்.
ஆற்றில் வருகின்ற
அலையெல்லாம்
புதிதானாலும் அதன்
பொதுப் பெயர்
தண்ணீரே.
நீ,
வெறும் தண்ணீர் அல்ல;
பாலாறாய்,தேனாறாய்ப்
பாயத் தெரிந்தவன்.
உன்
சிந்தனை,
செந்தமிழைச்
செழுந்தமிழாக்கியது;
மனதை
உழுந்தமிழாக்கியது.
அதனால்
உள்ளங்கள்,
வெளிச்ச
வெள்ளங்களாயின.
முள் கிரீடங்களைக்
கழற்றவும்
சிலுவைகளை இறக்கவும்
பல பேருக்குப்
பாடம் நடத்தியவன் நீ.
இலக்கியப் பயணம்
மேற்கொண்டவர்களெல்லாம்
இலக்கை அடைந்தவர்கள்
இல்லர்.
அது உனக்கு
அருளப்பட்டது!
அன்று-
பயணத்தைப்
”பால் வீதி”யில்
தொடங்கினாய்...!
இன்று,
பெருங்கடலாகவும்
பேசப்படுகிறாய்......
நீ
சிப்பியின்வாயில் விழுந்த
துளிநீர்!
அதனால் முத்தானாய்…..
தமிழுக்குச் சொத்தானாய்!
முத்து முத்தாகவே
இருக்கும். நீயோ
ஒன்பான் மணிகளாய்
உருவெடுக்கத் தெரிந்த
சித்தன்…
இன்றோ
பவழமாகவும்
பார்க்கப்படுகிறாய்….
“நீரின்றி அமையாது உலகு”
நாளும்
நீயின்றி அமையுமோ
நெறியார்ந்த சிந்தனை...?
Yembal Thajammul Mohammad-------------ஏம்பல் தஜம்முல் முகம்மது.
------------------------------------------------------------------------------------------------
( கவிக்கோ அவர்களுக்குப் பவளவிழா)
மாமனிதர்கள் வாழும்போது கொண்டாடப்படுவதில்லை என்பது வரலாற்றின் வருத்தம்.அதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன...
வரலாற்றின் போக்கு மாறிவருவதற்கான சூழ்நிலைகளும் அரும்பி,மலர்ந்து வரத்தான் செய்கின்றன....
இதற்கான ஆதாரங்கள் இதோ:1. கவிக்கோ, 2.ரஹ்மத் அறக்கட்டளையின் கவிக்கோ அரங்கம்,3.இன்று தொடங்கும் கவிக்கோ பவள விழா...!
வாழ்த்துவோம்....
கவிக்கோவைப் பற்றி-
"இலக்கியப் பயணம்
மேற்கொண்டவர்களெல்லாம்
இலக்கை அடைந்தவர்கள்
இல்லர்.
அது உனக்கு
அருளப்பட்டது!"
- என்று எழுதினேன்...
அவரைப் போலவே எல்லா இலக்கியவாதிகளும் வெற்றிபெற இந்த மகிழ்ச்சியான தருணத்தில் வாழ்த்துவோம்!
Yembal Thajammul Mohammad
No comments:
Post a Comment