Friday, October 2, 2015

மாட்டுக் கறியும் மட்டோக்கியும் பின்னே ஞானும் ...!

 ராஜா வாவுபிள்ளை

உகாண்டாவுக்கு வந்த புதிதில் 1980 ல் கம்பாலாவில் இந்திய தூதரகதில் பணிபுரிந்த இந்தியர்களை தவிர்த்து இங்கே இருந்த இந்தியர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இந்தியர்கள் அனைவரும் இங்குள்ள குஜராத்தி கோவிலில் விடுமுறை நாளான ஞாயிறன்று கூடுவது வழக்கம். மதியம் 'தாழி' எனும் குஜராத்தி மரக்கறி சாப்பாடும் பரிமாறப்படும். 10 அல்லது 15 இந்தியர்கள் ஒற்றுமையாய் கூடி அந்த வாரத்தில் நடந்த காரண காரியங்களை பகிர்ந்து எந்தவிதமான பாகுபாடும் இல்லாமலே பழக்கவழக்கங்கள் இருந்து வந்தது.

ஹோட்டல்கள் இருந்தாலும் இந்திய உணவு விடுதிகள் எதுவும் இல்லாததால் குஜராத்தி கோவில் அப்போது அங்கு வாழ்ந்த இந்தியர்களுக்கு நல்ல ஒரு கூடுமிடமாக வே இருந்தது.

1981 ல் எனக்கு பணிமாற்றல் கம்பாலாவில் இருந்து 200 KM துலைவிலுள்ள மசாக்கா எனும் ஊருக்கு ஆனது. அங்கு சென்று பணி செய்த நாட்களில் ஊர் சாப்பாடு கனவில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். சமையல் செய்யவும் அப்போது தெரிந்திருக்க வில்லை.
அந்த ஊரில் ஒரே இந்தியனாக நான் ஒருவனே இருந்தேன். கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் என்று படித்திருப்போம் நான் பல்லைக் கடித்துக் கொண்டு காலம் தள்ளினேன். இன்று நல்ல வெளிச்சமாகவே இருக்கிறது ஏகனவன் கருணையே கருணை.

நான் தங்கி இருந்த கட்டிடத்தில் பக்கத்து வீட்டில் எங்கள் கம்பனி ஏஜன்ட் இருந்தார். அவரிடமே பேயிங் கெஸ்ட் ஆக இருந்தேன். அவர்களின் உணவு மட்டோக்கியும் (இது ஒருவகை வாழைக்காய் நீராவியில் அவித்து உண்ணப் படுவது) கூட்டாக மாட்டுக் கறியும் அதையே நானும் உண்ண வேண்டிய கட்டாயம், உயிர் வாழ வேண்டுமே!
ஒரு நாளின் மூன்று வேளையும் இதுவே உணவு மேலும் இதுவே உகாண்டா மக்களின் உயர்தர உணவு.

இத்தனைக்கும் எங்களது வீட்டில் வாழைக்காயோ மாட்டுக் கறியோ சமைத்து சாப்பிட்டதே இல்லை. உகாண்டாவில் வந்து உயிர் வாழ வேண்டிய தேவையின் நிமித்தம் ஏற்றுக் கொண்டு இப்போது மனதார உண்ணும் உணவாகிப் போனது.

இப்போதோ மட்டோக்கியும் மாட்டுக் கறியும் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்றாகும்.

1983 வாக்கில் படேல் சமூகதினர் வந்து உகாண்டாவில் குவிய ஆரம்பித்தனர். குஜராத்தி கோவிலில் வழக்கமான 'தாழி' பரிமாறப்பட்டாலும் நாங்கள் அங்கு செல்வது நின்றுவிட்டது. மேலும் பல இந்திய உணவகங்களும் புதிதாக திறக்கப் பட்டுள்ளது.

எல்லாமே காலத்தின் கட்டாயங்களே, உணவானாலும் உடையானாலும் ரோமாபுரிக்குப் போனால் ரோமானியனாக இருப்பது வாழ்க்கையை நகர்த்திச் செல்ல உதவலாம்.
ஆனாலும் நாம் நாமாகவே இருப்போம்!s

ராஜா வாவுபிள்ளை

No comments: