Friday, October 2, 2015

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (7)


Vavar F Habibullah
கேரளாவை சார்ந்த ஒரு பெரிய பிஸினஸ் மேன், உம்ரா மற்றும் ஹஜ் விசாவில் மக்கா வந்தார். சாதாரண மெடிக்கல் செக்கப்புக்காக என்னை பார்க்க மருத்துவமனை வந்தார். அவர் சொன்னார்...,

"டாக்டர் சார்... நான் ஒரு டயபடிஸ் பேஷியண்ட், ஆனால் அதிசயம் பாருங்கோ, மக்காவில் கால் வைத்ததுமே டயபடிஸ் இருந்த இடம் தெரியாம மறைந்து போய் விடுகிறது."

பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று வயிற் றை பிடித்துக் கொண்டு அலறினார். அது ஒரு 'அக்யூட் அப்டாமன்' கேஸ் போல் தோன்றவே உடனடியாக ICU வில் அட்மிட் பண்ணி, தேவையான சிகிச்சையைத் தொடர்ந்தோம்.
சற்று 'ஸ்டபிலைஸ்' ஆன பிறகு அல்- நூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தேன்.
அவருடன் தங்கி இருந்து, அவரை கவனிக்க எவரும் இல்லை. வந்தவர்கள் அவர்கள் பணிகளை கவனிக்க சென்று விட்டனர். அவர் தந்த தகவலின் பேரில், அவருக்கு தெரிந்த உறவினர் ஒருவரை, ரியாதில் இருந்து வரவ ழைக்க ஏற்பாடு செய்தோம். இரவில் வெகு நேரம் கழித்து வந்த அவரை, மருத்துவமனை யில் நோயாளியுடன் இருந்து, அவரை கவனிக்க ஏற்பாடுகள் செய்து கொடுத்தோம்.

ஹஜ் நெருக்கடியில், நோயாளிகளின் கூட்டம் மருத்துவமனையில் அலை மோதிய நேரம் அது. ஒரே பெயரில் இரு நோயாளிகள் சிகிச் சைக்காக வார்டில் அநுமதிக்கப் பட்டிருந்தத தால் தவறுதலாக இவரை ஸ்டெரிச்சரில் கிடத்தி ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்து சென்று விட்டனர். அந்த நேரம் டூட்டியில் இருந்தவர்கள் எகிப்திய டாக்டர்கள். இந்திய டாக்டர்கள் எவரும் அப்போது அங்கு பணியில் இல்லை. 'கம்யூனிகேஸன் பிராப்ளம்' வேறு. இந்த மனிதரின் பேச்சு அவர்களுக்கும் புரியவில்லை.
இந்த நேரத்தில், நோயாளியை படுக்கையில் காணாத அவர் உறவினர், அலறியடித்து அங்கும் இங்கும் ஓட, விஷயம் புரிந்தது.
ஒரு வழியாக நோயாளியை பாதுகாத்த திருப்தியுடன், என்னை உடனடியாக தொடர்பு கொண்டார். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில், அவரை ஊருக்கு அனுப்பி வைப்பது உசிதம் என்ற என் கருத்தை, தெளிவு படுத்தினேன். மிகவும் பிஸியான அந்த நேரத்தில், விமான டிக்கட் பெற்று, அவருக்கு கிளியரன்ஸ் வாங்கி ஊருக்கு அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

ஹஜ் செய்வதற்கு நல்ல உடல் ஆரோக்கியம் மிக மிக அவசியம்.

இந்த காட்சியை எல்லாம் அருகில் இருந்து உன்னிப்பாக கவனித்த எனது டாக்டர் நண்பர் கூறினார்...,

"இப்போதெல்லாம் பெரிய கோரிக்கைகளை இறைவனிடம் நான் சமர்பிப்பதில்லை. நோய் இல்லாமல் என்னை காப்பாற்று, என்று இறை வனிடம் கேட்க முடியாது. அது சாத்தியம் இல்லை. அதனால் இப்போது சாத்தியமான வேண்டுதல்களையே இறைவனிடம் முன் வைக்கிறேன். இந்த கோரிக்கையை நிச்சயம் அவன் நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக இருக்கிறது."

நான் கேட்டேன்......,

'அப்படி என்ன வேண்டுதலை இறைவன் முன் வைக்கிறீர்கள்.'

அவர் சொன்னார்.....,

" இறைவா நோயைக் கொடு..., வேண்டாம் என்று சொல்லவில்லை. அதோடு - ஒரு நல்ல மருத்துவரையும் சேர்த்துக் கொடு".

வித்தியாசமான இந்த வேண்டுதலில் உண்மை இல்லாமல் இல்லலை.

 

No comments: