Wednesday, October 28, 2015

யார் இந்த அப்துல் சத்தார் எதி?


” நான் எதி. நான் பாகிஸ்தான்காரன்.நான் இந்தியாவை வெறுக்கவில்லை…இரண்டு நாடுகளுக்கு இடையிலான அமைதியை நான் ஆதரிக்கிறேன் ” என்று சொல்பவர்.

“எதி நிறுவனம் எந்த அரசின் நிதி உதவியையும் ஒப்புக்கொள்ளாது. தனிமனிதர்களின் ஆதரவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்;அவர்கள் பாகிஸ்தானியராக இருக்கலாம் அல்லது எந்த நாட்டினராகவும் இருக்கலாம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நன்றி” என்று தம்நிலை விளக்கம் தருபவர்.

எதி ப்ரிட்டிஷ் இந்தியாவில் குஜராத்தில் உள்ள பண்ட்வா என்ற இடத்தில் 1928-இல் பிறந்தவர். இவருடைய தாயார் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு அதனாலேயே இறந்ததனால் ஏற்பட்ட துயரமே இவரை மாற்றுத் திறனாளிகள்,மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் முதலியோரை ஆதரிப்பவராக ஆக்கியது. இளமையில் அன்றாடம் தாயார் தரும் இரண்டு பைசாக்களில் ஒன்றைத் தன் உணவுச் செலவுக்கும் மற்றொன்றை ஏழை எளியோரின் உணவுச் செலவுக்கும் செலவிட்டவர்.மிகவும் துயரமான சூழ்நிலையில் பாக்கிஸ்தானுக்குத் துரத்தியடிக்கப்பட்டவர்.

பாகிஸ்தான் சென்ற பின்னர் படிப்படியாக உழைத்து உயர்ந்த இவர் வள்ளல், சமூக ஆர்வலர், மனிதாபிமானி என்று அறியப்படுகிறார். ”எதி ஃபவுண்டேஷனின்” நிறுவனராகவும் தலைவராகவும் இருந்து அதை வெற்றிகரமாக நடத்திவருபவர். பாகிஸ்தான் முழுவதிலும் உள்ள அற நிறுவனங்களில் இதுவே அளவிலும் ஆற்றிவரும் பணியிலும் முதலிடத்தில் இருப்பது; உலகின் மிகப்பெரிய ஆம்புலனஸ் ஊழியம் செய்து வருகிற நிறுவனமும் இது.”லெனின் அமைதிப் பரிசு” பெற்ற இவர் தொய்வில்லா மனிதாபிமானத் தொண்டு செய்து வருபவர் ஆவார்.


ஏம்பல் தஜம்முல் முகம்மது Yembal Thajammul Mohammad

No comments: