Thursday, October 29, 2015

நீங்கள் துபாயில் வசிப்பவரா? உங்களை மகிழ்ச்சி படுத்த காவல்துறை உதவும்!.


துபாயில் வசிப்பவர்கள் சோகமாக இருந்தால், உடனடியாக ஓடோடி வந்து காரணத்தைக் கேட்கிறது போலீஸ். உலகின் மிக மகிழ்ச்சி யான நகரம் என்ற பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடிப்பதற்காகவே இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அந்நாட்டு அரசு.

ஓர் எளிமையான ஆய்வு மூலம் மக்கள் சோகமாக இருக்கிறார்களா மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என கணக்கெடுக்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பவர்கள் முகச்சுளிப்புடன் இருக்கும் குறியீடு, சிரிக்கும் குறியீடு, உணர்ச்சிகளைக் காட்டாத முகபாவ குறியீடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

மகிழ்ச்சியாக இல்லை என்று பதிவு செய்பவர்களை காவல் துறை தொடர்பு கொண்டு, அதற்கான காரணத்தை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



துபாயில் உள்ள அரசு அலுவலகங்களில் இதுதொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. அதிகாரி களுக்கு அருகே சிறிய டேப்லட் கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருக்கும். குடிமக்கள் அதில் தங்களின் அனுபவத்தைப் பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல், நகராட்சி அலுவலகங்களை அவற்றின் வாடிக்கையாளர் சேவையின் அடிப்படையில் 2 முதல் 7 நட்சத்திர தரத்துக்கு மதிப்பிட்டு வருகின்றனர். ஸ்மார்ட் கவர்ன்மென்ட் என்ற திட்டத்தின் ஒருபகுதியாக இவை மேற்கொள்ளப்படுகின்றன.

துபாயில் மகிழ்ச்சியைப் பெருக்க பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. உங்களின் பாதுகாப்பு எங்களின் மகிழ்ச்சி என்ற ஹேஷ்டேக்கில் துபாய் காவல் துறை ட்விட்டர் பதிவுகளை அண்மையில் இட்டது.

கடந்த புதன்கிழமை முதல், மகிழ்ச்சி தொடர்பான கணக் கெடுப்பு தொடங்கியுள்ளது. துபாய்வாசிகளுக்கு இதுதொடர் பான குறுஞ்செய்தி அனுப்பியுள்ள காவல் துறை, அதில், இணைய தளம் ஒன்றின் இணைப்பையும் அளித்துள்ளது.

அந்த இணையதளத்தில், துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், புர்ஜ் கலிபா கட்டிடத்தின் பின்னணியில் உள்ளார். அதில், நீங்கள் துபாயில் மகிழ்ச்சியாக உள்ளீர்களா என ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
 முதல் நாளில் மட்டும் 2 லட்சம் பேர் இந்த கணக்கெடுப்புக்கு பதில் அளித்துள்ளதாக துபாய் காவல் துறை தெரிவித்துள்ளது. இதில், 84 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 6 பேர் இயல்பாகவும், 10 சதவீதம் பேர் மகிழ்ச்சியற்று இருப்பதாகவும் பதிலளித்துள்ளனர். எவ்வளவு குறுஞ்செய்திகளை தாங்கள் அனுப்பினோம் என்ற விவரத்தை காவல் துறை தெரிவிக்கவில்லை.

ஆனால், மகிழ்ச்சியற்று இருப்பதாக தெரிவித்துள்ளவர் களில் பரவலான முறையில் தொடர்பு கொண்டு அதற்கான காரணத்தைக் கேட்கப்போவதாக துபாய் காவல் துறை தலைவர் மேஜர் ஜெனரல் காமிஸ் மட்டார் அல் மேஸேய்னா தெரிவித்துள்ளார்.
நன்றி  Source:http://www.thoothuonline.com/archives/75090

No comments: