Saturday, October 31, 2015

ஒற்றை வரியில் எல்லாம்...

 by Yasar Arafat
ஒற்றை வரியில் எல்லாம்...

உன் வியர்வையின் நெடி
மணம் கமழும் என் மனம் மகிழும்;
பாத்திரம் கழுவியக் கையோடு எனை
அணைக்கும் உன் ஸ்பரிசம் அது சுகம்!

அடுப்படி மசாலா வாசத்தோடு உன் சரீரம்
ஆனாலும் கட்டியணைக்கும்போது
உள்ளம் தோறும் மெய்சிலிர்க்கும்;

இதுதான் கடைசியென
எத்துனை முறை ஊட்டுவாய்;
இன்னும் உணவு இருக்கு..
நீ உண்ணு என
காலியான பாத்திரத்தோடு
எப்படிதான் மனம்வந்து சொல்லுவாய்;

உச்சக்கட்டக் கோபத்திலும்
சாப்பாட்டை கொண்டுவந்து நீட்டுவாய்;
தவறிழைத்த நானே முரண்டுப்பிடித்தாலும்
சமாதானாத்திற்கு நீயே வருவாய்;

உறங்கியப்பின்னும்
தலைக்கோதிவிடுபவர் நீயே - என் உடல்
சுகமில்லையென்றாலும் சுணங்குபவர் நீயே;

தோளுக்கு மேல் வளர்ந்தாலும்
என் சட்டையப்பிடித்து
அடிக்கும் உரிமை உனக்கு;
எத் திசை சென்றாலும் மனம் முழுவதும்
உனைதான் நிரப்பி இருக்கு!

உன் பாசத்தை ஒற்றை வரியில்
திணித்துட விருப்பமில்லை எனக்கு;
எந்த தேசம் சென்றாலும் நான்
படுக்க உன் மடிதான் வேண்டும் எனக்கு!!

#‎அம்மா‬..                                                  Yasar Arafat
 Yasar Arafat

No comments: