Wednesday, October 21, 2015

முதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும்


-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
எம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எமது பெற்றோர் வயதுக்குச் செல்லும்போது அல்லது முதுமையை அடையும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவர்களது நிலமைகளையும் நாம் அறிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

குழந்தையாக, சிறுவர்களாக வாலிபர்களாக நாம் இருக்கும்போது நமது பிரச்சினைகளையும் நிலவரங்களையும் நன்கு கவனித்து, நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் எமது பெற்றோர்கள். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வகையான பிரச்சினையை நாம் சந்திக்கின்றோம். அது போலவே பெற்றோரும் முதுமையிலும் பிரச்சினைகளை சந்திக்கின்றார்கள். அவர்களது பிரச்சினைகளையும் மனோ நிலைகளையும் பிள்ளைகள் அறிந்து அன்புடன் நடாத்த வேண்டிய கடமைப்பாடு உள்ளது.

முதுமைப் பருவம் என்பது குழந்தைப் பருவத்தை விடவும் சிக்கலானது. இப்பருவத்திலுள்ள எமது பெற்றோரை பாதுகாப்பதும் பராமரிப்பதும் அல்லாஹ்வின் திருப்தியையும் அன்பையும் பெற்றுத் தரக் கூடிய காரியமாகும். அது மட்டுமன்றி, பெற்றோரை பராமரிப்பது பிள்ளை களின் கடமையும் கூட.

இன்று பெற்றோர் முதுமையை அடைகிறார்கள். நாளை நாமும் முதுமையை அடையக் கூடியவர்களாக இருக்கின்றோம். எனவே, முதுமை பற்றியும் முதுமையில் ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சினைகள் பற்றியும் அறிந்துகொள்வது கட்டாயமானதாகும்.

முதுமை என்றால் என்ன?
ஒருவரின் உடலிலுள்ள கலங்களிலும் தொகுதிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, அவரது செயற்பாடுகளில் படிப்படியாக தேய்வு ஏற்படுவதே முதுமை எனப்படும். அதாவது சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த உடல் அங்கங்களில் படிப்படியாக தோய்வும் பலவீனமும் ஏற்பட ஆரம்பிக் கின்றது.

– மூளையின் செயற்பாட்டின் நிலை குறைவடைதல்
– மூட்டுக்களில் தசைகளில் பலவீனம் ஏற்பட்டு மூட்டுக்களில் தேய்வு ஏற்படுதல்.
– நரம்புகளில் தளர்ச்சி ஏற்படுதல்.
– தசைகள் மெலிதல்.
– தோள்கள் சுருங்குதல்
– மயிர்கள் உதிர்தல் மற்றும் நரை ஏற்படுதல்
– புலனுறுப்புகளில் குறைபாடுகள் ஏற்படுதல்
– நோய் எதிர்ப்புச் சக்திகள் குறைந்து, தொற்று நோய்கள் ஏற்படுதல் போன்றவை காணப்படும்.

ஐ.நாவின் விளக்கம்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதியோர் எனப்படுவர். இன்றைய நவீன மருத்துவ வளர்ச்சியின் காரணமாக முதியோர் தொகை அதிகரித்து வருகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்கான வயதெல்லை சராசரியாக 20 வருடங்களாக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. 2020ம் ஆண்டு ஆகும்போது முதியோர் வயது 73 ஆக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இன்று முதியோரில் பெரும்பாலானவர்கள் கைத்தொழில் நாடுகளிலேயே வாழ்கின்றார்கள். 2020 ம் ஆண்டில் உலகில் முதியோர் தொகை ஒரு பில்லியனாகிவிடும். இவர்களில் 700 மில்லியன் பேர் வளர்முக நாடுகளில் வாழ்வார்கள் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கின்றது.

1998 ம் ஆண்டு உலக சனத் தொகை நிதியம் மேற்கொண்ட மதிப்பீட்டின்படி இப்பொழுது ஒவ்வொரு பத்து பேருக்கும் ஒருவர் முதுமை அடைந்தவராக இருக்கின்றார். இத்தொகை 2050 ம் ஆண்டில் ஐந்து பேருக்கு ஒருவர் என்ற படியும், 2150 ம் ஆண்டு மூவருக்கு ஒருவர் என்ற படியும் மாற்றமடையும் எனப் படுகிறது. (நன்றி: தினகரன்-இலங்கை)

முதுமையை பாதிக்கும் காரணிகள்:
இரண்டு வகையான காரணிகள் முதுமையைப் பாதிக்கின்றன.
1. உடற் காரணிகள்
2. உளக் கரணிகள்
உடற் காரணிகளைப் பொறுத்த வரையில் உடலில் ஏற்படுகின்ற பலவீனங்கள் மற்றும் பல்வேறு நோய்கள் தாக்கம் செலுத்துகின்றன. இளமையில் உடலில் இருந்த சக்திகள் குறைவடைவதாலும் நோய் எதிர்ப்புச் சக்திகள் பலவீனமடைவதாலும் நோய்கள் தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் முதியோர் பெரிதும் அவஸ்தைக்குள்ளாவர்.

உளக் காரணிகளைப் பொறுத்த வரையில், உடற் காரணிகளை விடவும் பாரிய தாக்கத்தினை செலுத்தக் கூடியதாக இருக்கும். பொதுவாக மனதளவில் பாதிப்படையக் கூடியவர்கள் அதிலிருந்து விடுபடுவது கடினமாக இருப்பதை நாம் பார்த்து வருகின்றோம். ஆனால், முதுமையில் ஏற்படும் இந்த உளக் காரணிகள் பல்வேறு காரணங்களால் பிணைந்ததாக இருக்கும்.

1. வேலையிலிருந்து ஓய்வு:-
துடிதுடிப்பான இளமைப் பருவத்தில் தனக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளவும் தன்னுடைய குடும்ப வாழ்வையும் தன்னை நம்பியிருக்கின்றவர்களின் வாழ்வையும் மேம்படுத்திடவும் பொருத்தமான ஒரு தொழிலை தேர்வு செய்து அயராது உழைத்து வருகின்றனர். ஆடி, ஓடி செய்கின்ற எந்த வேலைக்கும் ஒரு நாள் ஓய்வு தேவைப்படுகின்றது. 60 வயதை அடைகின்றபோது தொழிலிருந்து ஓய்வு பெறும் காலம் வந்து விடுகின்றது.

தொழிலிருந்து ஓய்வு பெற்று வீட்டுக்குச் செல்லும்போது அடைகின்ற கவலைக்கு அல்லது உளக் குமுறல்களுக்கு வலி அதிகம். 40 வருடங்கள் தொடராக ஒரு தொழில் ஈடுபட்டு உழைத்து வாழ்ந்தவர்களால் இந்த கவலையை ஓரோ நாளில் மறந்து விடவும் முடியாது.

தொழில் புரிந்த இடத்தை விட்டும் நீங்கும்போது தனது சொந்த வீட்டை விட்டு நீங்குவதாகவும் தனது உணர்வுகளை விட்டு பிரிவதாகவும் துன்பப்படுவர். இதன் பிறகு இந்த முகங்கள் பார்க்க முடியாது. பேச முடியாது. 40 வருடகால பிணைப்பு இன்று பிரிந்து உடைந்து விடுகின்றது என்று குமுறுவார்கள். தங்களுக்கிடையில் இருந்த நட்பு, அந்நியோன்யம் அகன்று விடுகின்றது என்று அவஸ்தைப்படுவார்கள்.

இதன் பின் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். வேறொருவரின் உழைப்பில் அல்லது தயவில் வாழ வேண்டும் என துக்கப்படுவர். ஓய்வூதியப் பணம் இவர்களது கவலைக்கு ஓரளவு மருந்தாக இருக்கும்.

இரவு, பகல் கஷ்டப்பட்டு உழைத்து, வளர்த்து ஆளாக்கிய தங்களுடைய பிள்ளைகளுடைய உழைப்பில் வாழ வேண்டுமே. நாம் பிள்ளைகளுக்கு சுமையாகி விடுவோமா, அவர்களது குடும்ப வாழ்வுக்கும் சந்தோசத்திற்கும் தடையாக இருந்து விடுவோமோ என்று ஏக்கம் கொள்வார்கள். எங்களை கவனிப்பது அவர்களுக்கு சுமையாகி விடுமோ என்ற அச்சமே அவர்களுக்கு மேலோங்கியிருக்கும்.

கிராமப்புற வாழ்வை விட நகர்ப்புற வாழ்வில் வாழும் முதியோர்களின் ஏக்கங்களே அதிகம். கிராமப்புற வாழ்வில் மக்கிளடையே தொடர்புகளும் கைத்தொழில்களும் விவசாயங்களும் காணப்படும். அங்கு எவரும் தனித்து விடப்படுவதற்கோ ஓய்வாக இருப்பதற்கோ வாய்ப்பு குறைவாக இருக்கும். குடும்ப உறவுகளும் சொந்த பந்த இணைப்புகளும் வலுவாகக் காணப்படும். கூட்டுக் குடும்ப முறைகளும் பேரப் பிள்ளைகளுடன் வாழும் சூழலும் காணப்படும். எனவே முதியோர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும் கிராம சூழல் அவர்களது வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது குறைவு.

இந்த கிராமப்புற வாழ்வை விட நகர்ப்புற வாழ்வு வேறுபட்டு இருப்பதனால்தான் முதியோர்கள் தனித்து விடப்படுகிறார்கள். நகர்ப்புற வாழ்வு எப்போதும் பரபரப்பாக இருக்கும் எல்லோரும் வீட்டை விட்டு வெளியில் தொழிலுக்கு செல்லக் கூடியவர்கள். குடும்பங்களுக்கிடையிலான சந்திப்புகளும் குறைவானது. அடுத்த வீட்டில் யார் வாழ்கிறார்கள் என்று கூட அறியாதவர்கள். எனவே இங்கு வாழும் முதியவர்கள் மனதளவில் பெரிதும் பாதிப்படைகிறார்கள்.

பொதுவாக நகர்ப் புறங்களில் வாழும் முதியவர்கள் செல்லப் பிராணிகளை வளர்க்கவும் பராமரிக்கவும் நேரத்தை செலவிடுவார்கள். மாலை நேரத்தில் அச்செல்லப் பிராணியை அழைத்துக் கொண்டு வீதியில் அல்லது பூங்காவில் சுற்றி வருவார்கள். தங்களது வாழ்வின் இறுதிப் பகுதியில் தனித்து நிற்கின்றோமே என்ற ஏக்கம் அவர்களை பெரிதும் வாட்டி விடும்.

வாழ்க்கை துணையை இழத்தல்
60 வருடகால வாழ்க்கையில் சுக துக்கங்களில் பங்குகொண்டு எல்லா சந்தர்ப்பங்களிலும் துணை நின்ற தனது கணவன் அல்லது மனைவி தனக்கு முன்னதாகவே மரணித்து விட்டார். இன்று நான் தனித்து விடப்பட்டுள்ளேன் என்று எண்ணி பெரிதும் கவலைப்படுவர்.

இதன் பிறகு தன்னுடைய கஷ்டங்களைத் தேவைகளை யாரிடம் கூறியும் நிவர்த்தி செய்ய முடியாது என்று ஆதங்கப்படுவர். பிள்ளைகளிடம் தங்களுடைய தேவைகளை முறையிடுவதால் பிள்ளைகள் பாதிக்கப்பட்டு விடுவார்களோ அல்லது அவர்களது குடும்பத்தில் (கணவன் மனைவிக்கிடையில்) பிரச்சினையாகி விடுமோ என்று கவலைப்படுவர்.

எனவே தங்களுடைய விருப்பு வெறுப்புக்களை, தேவைகளை பிள்ளைகளிடம் சொல்வதில் தயக்கம் காட்டுவர். குறிப்பாக நோய்களை முறையிடுவதிலும் தயக்கம் காட்டுவர். தங்களுடைய மனதுக்குள்ளே எல்லா கவலைகளையும் புதைத்துக் கொண்டு நல்ல நிலையில் இருப்பதாக காட்டிக் கொள்வர்.

துணையை இழந்ததன் பாதிப்பை முதுமையின் எல்லைக்கு போகும் போது நன்கு உணர்வார்கள். தனக்கு துணையாக இருந்து தன்னுடைய வேலைகளை செய்துத் தர துணையில்லமல் போனதே என்று கண்ணீர் வடிப்பார்கள். எனவே எமது பெற்றோரில் ஒருவர் துணையை இழந்தால் அவருக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க வாய்ப்பும் வலிமையும் உள்ளதா என்று கவனிக்க தவறக் கூடாது.

நண்பர்களின் இழப்பு
சிறு வயதிலிருந்து அல்லது பள்ளிப் பருவத்திலிருந்து பழகிய நட்பை எவரும் மறந்து விடமாட்டார்கள். அழியாத நினைவுகள் நிறையவே இருக்கும். நண்பர்களிடையிலான தொடர்புகள் அறுந்து போவது எளிதில் தாங்கிக் கொள்ளக் கூடியதல்ல. இந்த நட்பு மரணம் வரை தொடர்ந்து வரக் கூடியது. ஒவ்வொருவரும் தன்னுடைய விவகாரங்களை (நல்லதோ கெட்டதோ) நண்பர்களுடன்தான் பகிர்ந்து கொள்வர். நண்பன் ஒருவன் இழந்து விட்டால் தாங்கிக் கொள்ள மாட் டார்கள்.

முதிய வயதிலும் இந்த நட்பை பெரிதும் எதிர்பார்ப்பார்கள். ஓய்வு காலங்களில் நண்பர்களுடன் நேரங்களைக் கழிப்பது தனிமையை போக்குவது கடந்த காலங்களை மீட்டிப் பார்ப்பது என்று சுவாரஸ்யமாக எதிர் பார்ப்பார்கள். தங்களுடைய நண்பன் இழந்து விட்டான் என்றால் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும். ஏற்கனவே தனிமையில் இருக்கும் நாம், மேலும் தனிமையில் விடப்பட்டுள்ளோம் என்று கவலைப்படுவர்.

இடம்பெயர்வு
யுத்தம் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்வு ஏற்படுகின்ற போது முதியவர்கள் பெரிதும் கவலைப்படுவர். பிறந்து, வளர்ந்த பூமியை விட்டும் ஓடி, ஆடி விளையாடிய மண்ணை விட்டும், பழகிய உறவுகளை விட்டும், அறிமுகமற்ற பகுதிக்கு (அல்லது பிரதேசத்திற்கு) செல்கின்றோமே. எமது தொழில் சம்பாதிக்க சொத்துக்களும் இழக்கப்படுகிறதே என்று துன்பப்படுவார்கள்.

பொதுவாக நாம் வாழும் ஊரை விட்டு இன்னுமொரு ஊருக்கு புதிதாக குடியேறும்போது சந்தோசமடைந்தாலும் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டும் வெளியேறுகின்றோமே என்ற எண்ணம் ஏற்படும்போது மனது பாரமாகி விடுகின்றது. அப்படியானால் முதியவர்கள் எந்தளவு உளப் பாதிப்புக்கு உள்ளாகுவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
(தொடரும் இன்ஷா அல்லாஹ்)
நன்றி http://www.islamkalvi.com/?p=104934

No comments: