Thursday, October 1, 2015

அச்சே தின் ஆயேகா?


நல்ல காலம் பொறக்குது..!
நல்ல காலம் பொறக்குது..!

“அச்சே தின் ஆயேகா”
“அச்சே தின் ஆயேகா”

குடுகுடுப்பைக் காரராய்
தாடி வைத்த மோடிஜீ
நாடி ஜோதிட
நற்குறி சொன்னார்.

அய்யகோ….!
“அச்சே தின்” அல்ல
அச்சம் தினம் அல்லவா
ஆகி விட்டது?

என் வீட்டு அடுக்களையில்
என்னவெலாம் சமைக்க வேண்டும்?


என் சாப்பாட்டு மேசையில்
என்னென்ன பரிமாற வேண்டும்?

என் சாப்பாட்டுத் தட்டில்
எந்தெந்த அயிட்டங்கள்
இடம் பெற வேண்டும்?
எடுத்துச் சொல்லுங்கள் மோடீஜி

இன்று என் மெனு
ஆட்டுக்கறி குழம்பா?
மாட்டுக்கறியுடன் கப்பைக்கிழங்கா?
கோழிக்கறி குருமாவா?

எதைச் சமைத்தால் குற்றமில்லை
இனியாவது சொல்லுங்கள் மோடீஜீ

அப்படியே சமைத்தாலும்
சிறை வாசமா அல்லது
சிரச்சேதமா
சீக்கிரமாய் சொல்லுங்கள் மோடீஜீ

அடுத்தடுத்து எத்தனை எத்தனை
அப்பாவி உயிர்கள் பறிபோகுமோ
அதற்குமுன்பு அறிவியுங்கள் மோடீஜீ

டிசிட்டல் இந்தியா என்கிறீர்கள்
பசியாற வேண்டும் நாங்கள்
புசித்தலுக்கு சுதந்திரம் கொடுங்கள்

கங்கையை சுத்தப்படுத்துவது
அப்புறம் ஆகட்டும் – முதலில்
கரசேவகர்களின் மனங்களை
சுத்தப்படுத்துங்கள்

இல்லையெனில் ஜனங்கள்
உங்கள் ஆட்சியையே
அப்புறப்படுத்தி விடுவார்கள்

தூய்மை பெற வேண்டியது
இந்தியா அல்ல
சங்பரிவார்களின் இதயங்கள்

அவர்களின் மனங்களில்
குடியிருக்கும் குப்பையை அகற்றுங்கள்
இல்லையெனில் ஜனங்கள் உங்களுக்கு
குட் பை சொல்லிவிடுவார்கள்

விவசாயிகளுக்கு
“Whatsapp” வேண்டாம்.
எங்களின் எதிர்காலம்
“What’s Next?” என்கிறார்கள்

கிராமங்களுக்கு வேண்டாம்
இணையம் இலவசம் – முதலில்
நகர மையங்களில் தாருங்கள்
நாறாத இலவச கழிப்பிடம்

இந்தியாவிற்கு வெளியே சென்று
“இதற்குமுன் இந்தியன் என்று சொல்ல
எல்லோரும் வெட்கப்பட்டார்கள்” என்று
இந்தியர்களின் மானத்தை கப்பலேற்றினீர்கள்

உள்ளதைச் சொல்கிறோம்
உங்களாட்சியில்தான் நாங்கள்
உண்மையிலேயே வெட்கப்படுகிறோம்.


அப்துல் கையூம்
01.10.2015
https://nagoori.wordpress.com/

No comments: