Sunday, October 18, 2015

‎இப்போது‬ அவர் யோசிக்க ஆரம்பித்திருந்தார்.

ஒரு வணிக நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தமது நிறுவனத்தின் மூலமாகச் செய்யும் சேவைகளைக்குறித்து சொல்லிக்கொண்டிருந்தார். சில கோவில்களின் கட்டிடப் பணிகளுக்கு கணிசமாக பண உதவி செய்ததாகவும் கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானத்திற்கு தர்மம் செய்ததாகவும் இறைவன் தாம் செய்யும் இந்த தானதர்மங்களுக்குப் பகரமாக வணிகத்தில் செழிப்பையும் குடும்பத்தில் மன நிம்மதியையும் தந்துவிட்டால் போதுமானது என்று பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டிருந்தார்.

நான் மெதுவாகச்சொன்னேன்,
“ அண்ணே, நானும் வரும்போது பாத்தேன். ரோடெல்லாம் ஃப்ளெக்ஸ்ல அப்பா பக்திப்பழமா வணக்கம் வைச்சுட்டிருந்தாரு. திருப்பணி உபயம்னு உங்க நிறுவனத்தோட பெயரையும் இறைப்பணிச்செம்மல் அப்படீங்கற அடைமொழியோட அப்பாவோட பெயரும் கோவில் வளாகத்துல இருக்கற கல்வெட்டுல மட்டுமில்லாம எல்லா போஸ்டர்லயும் போட்டிருந்துச்சு. பரவால்ல.
நம்ம நிறுவனத்துக்கு நல்ல விளம்பரம் இது.” என்று.

அவர் இடைமறித்து வேகமாகக் கேட்டார்,
“ என்னது விளம்பரமா..??” என்று.

ஆமா, இந்தச்செலவெல்லாம் விளம்பரச் செலவுலதான வரணும். நீங்க எப்படி தானதர்மச் செலவுல இதை எழுதமுடியும்.?
தர்மம் செய்துவிட்டதாக மனநிறைவு அடைய முடியும்..? எப்போ உங்க நிறுவனத்தோட பெயரையும் உங்க படத்தையும் போட்டீங்களோ அப்பவே இது தான தர்மத்திலிருந்து முற்றிலுமாக விலகி அப்பட்டமான விளம்பரமாகிடுச்சு. அதனால இதை விளம்பரச் செலவுல எழுதுவதுதான் முறை. தானதர்மம் செய்றதுக்கு இனிமேலாவது முயற்சி செய்யுங்க. நிச்சயமா உங்க குடும்பத்துல மனநிம்மதியையும் உங்க வணிகத்துல செழிப்பையும் வளர்ச்சியையும் இறைவன் கொடுப்பான்.

விளம்பரச்செலவுன்னு கணக்கு எழுதிட்டு தானதர்மம் செய்யுங்க தப்பே இல்ல. ஆனா தயவுசெஞ்சு தானதர்மம்னு கணக்கு எழுதிட்டு விளம்பரம் செய்யாதீங்க” என்றேன்.

‪#‎இப்போது‬ அவர் யோசிக்க ஆரம்பித்திருந்தார்.
 
Nisha Mansur

No comments: