Monday, March 2, 2020

MY STORY

Dr.Vavar F Habibullah
ஒரு இந்தியக் குடிமகன்
இல்லை...இல்லை...ஒரு
தமிழ்க் குடிமகன் வரலாறு!
(A bit long post)

70+ல் வாழும் நான், இந்திய
திருநாட்டின் சீனியர் சிடிஜன்.
நான் பிறந்த தேதி 22 ஏப்ரல்
மாதம் 1947 என்று, நான் படித்த
இடலாக்குடி மேல்நிலைப் பள்ளி
எஸ்எஸ்எல்சி சர்டிபிகேட் சாட்சி
சொல்கிறது. எனது கல்வி சான்றிதழ்
தான், நான் பிறந்த ஆண்டுக்கான
ஒரே உண்மையான அத்தாட்சி.


அப்போது எல்லாம் ஐந்து வயது
நிரம்பிய குழந்தைகளையே
ஸ்கூலில் ஒன்றாம் வகுப்பில்
சேர்ப்பார்கள்.அதை வைத்தே
பிறந்த தேதி கணிக்கப்படும்.
நாலரை வயது குழந்தையை
ஐந்து வயதாக்கி அட்ஜஸ்ட்
செய்து அட்மிட் செய்வது என்பது
அப்போது நார்மல் மேட்டர்.

கன்னியாகுமரி மாவட்டம்
கோட்டாறு இடலாக்குடி
பள்ளித்தெருவில் அமைந்த
எனது தாய் வீடான ‘ஆமினா
மன்ஜில்’ இல்லத்தில் தான்
நான் பிறந்ததாக எனது
தாயார் சொன்னார்கள்.

தலைப்பிரசவம் அதுவும் சற்று
கடினமான பிரசவம் என்றாலும்
அன்று சிறப்பு மருத்துவ வசதிகள்
இல்லாத சூழலில் தாயம்மாள் என்ற
மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சிறந்த
நர்சின் கைராசியால்,வீட்டில்
வைத்து பிரசவம் நடந்து, நான்
செத்து பிறந்து உயிர் பிழைத்த
கதையை எனது தாயார் அன்று
விவரித்த போது...!

நான் பிறந்த ஊரான குமரி மாவட்டம்
இந்தியாவில் ஒரு அதிசய மாவட்டம்.
இந்தியா சுதந்திரம் பெறுமுன்
நான் பிறந்ததாக, எனது கதை
சொல்கிறது.அப்போது கேரள
மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா
எங்கள் நாட்டை ஆட்சி செய்து வந்தார்.
மவுண்ட் பேட்டன் பிரபு, பிரிட்டிஷ் இந்தியா
வின் கவர்னர் ஜெனரல் என்றும் இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ் தான் பாகிஸ்தான்,பங்களாதேஷ் உட்பட ஒன்று பட்ட இந்திய திருநாட்டின் அன்றைய பேரரசர் என்றும் வரலாறு
சொல்வதை கேட்பதற்கு சற்று
சுவாரசியமாகத் தான் இருக்கிறது.

என் வயதில் இங்கே இந்த
குமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள்
எல்லாம் ஒன்று பிரிட்டிஷ் இந்திய
பிரஜைகளாக இருக்க வேண்டும்
அல்லது கேரள சித்திரை திருநாள்
மகாராஜாவின் குடிமக்களில்
ஒருவராக இருக்க வேண்டும்.
வரலாற்று உண்மைகளை எடுத்து
சொல்ல இப்போது அத்தாட்சி
எதுவும் இல்லை.

பிறந்து பத்து வருடங்கள் வரை
குமரி மாவட்டம் கேரளமா அல்லது
தமிழகமா என்பது கூட தெரியாத
நிலையில் கேரள மன்னர் பாதுகாப்பில்
கேரள அரசின் கல்வி கூடங்களில்
தான் பள்ளி வாழ்க்கை
தொடர்ந்தது.

1956 ம் ஆண்டு
சொன்னார்கள்... குமரி மாவட்டம்
தமிழ் நாட்டோடு இணைந்து
விட்டது. ஒன்றும் புரியவில்லை.
பள்ளி ஆசிரியரிடம் கேட்ட போது அவர் சொன்னார்... நாம் எல்லாம் தமிழ் மொழி பேசுவதால் இந்த மாவட்டம் தமிழகத்தோடு
சேர்ந்து விட்டது.

இளம் மாணவ பருவத்திலேயே
தமிழன் என என்னை அழைத்து மகிழவும் தமிழ் மீது தீரா காதல் அல்லது பற்று ஏற்படவும் இந்த
மொழி வழி மாநில பிரிவினையே
முதல் காரணமாகும்.

ஸ்கூல் அதிகாரப்பூர்வ கல்வி
சான்றிதழ் தவிர உண்மையான
ஒரிஜினல் பிறந்த சர்டிபிகேட்
என் வசம் இல்லை.என் வயதை
ஒத்த என் நண்பர்களிடமும் இல்லை.
நிறைய பேர் இப்போது உயிருடன்
இல்லை.என் பெற்றோர் பிறந்த
சர்டிபிகேட்டும் என்னிடம் இல்லை.
ஆனால் அவர்கள் வாழ்ந்த வீடு
இருக்கிறது.இறந்த தினம் ஞாபகம்
இருக்கிறது.இறந்து மறைந்து
அடக்கம் ஆன இடம் நினைவில்
இருக்கிறது.

மதம் இங்கே பிரச்னை
இல்லை....காரணம்
முஸ்லிம் பெற்றோருக்கு
பிறந்தவன் முஸ்லிமாகவும்
கிருத்துவ பெற்றோருக்கு
பிறந்தவன் கிருத்துவனாகவும்
ஹிந்து பெற்றோருக்கு
பிறந்தவன் ஹிந்துவாகவும்
வாழ்வது என்பது இயற்கையே!
ஆதார்,பேன்கார்ட்,ஓட்டுனர்
உரிமம்,ஓட்டர் ஐடி,பாஸ்போர்ட்
எதிலும் மதம் குறித்து எதுவும்
இல்லை.

இந்தியாவில் மும்பை சென்றால்
மதராஸி என்கிறான்,டெல்லி
சென்றால் டமில் என்கிறான்
கேரளா சென்றால் பாண்டி
என்கிறான்.அமெரிக்காவிலோ
தாடியை பார்த்தால் சீக்கியன்
என்கிறான்,வளைகுடா நாடு
களில் அல்ஹிந்த் என்கிறான்.
மக்காவில் தமிழ் பேசினால்
எல்டிடி என்கிறான்.இது தான்
தமிழனனின் இன்றைய நிலை.

பள்ளி படிப்பின் போதும் சரி
கல்லூரி படிப்பின் போதும் சரி
நான் பிறந்த இந்த மாவட்டம்
முழுமையான ஒரு கிருத்துவ
மாவட்டமாகவே என் கண்களில்
பட்டது.மெத்தப் படித்தவர்களும்
இங்கே கிருத்துவர்களே!
குமரி மாவட்ட எம்பி க்கள் ஒன்று
கிருத்துவ நாடார், இல்லையேல்
ஹிந்து நாடார்களாகவே இருப்பர்.
மதநல்லிணக்கம் மிகுந்த இந்த
மாவட்டத்தில் இப்போது மத
ஒற்றுமை சீர் குலைந்து வருவது
வேதனை தருகிறது.

டில்லியை ஆண்ட கில்ஜிகளும்
கோரிகளும்,துக்ளக்களும்
லோடிகளும்,முகலாயர்களும்
தமிழ் மக்களை ஆட்சி புரிந்த
தாக வரலாறுகள் இல்லை
குமரி மாவட்டத்தை 1956
வரை ஆங்கிலேயன் கூட
ஆட்சி புரிந்ததாக தெரியவில்லை.
1947 இந்திய சுதந்திரத்திற்குப்
பின்னர் வடநாடு போல் தமிழ்
நாட்டில் மதக்கலவரங்கள்
நிகழந்ததாக வரலாறுகளும்
இல்லை.

என் கதையில்
நான் இப்போது
எந்த நாட்டு பிரஜை!
மன்னர் ஜார்ஜ் ஆட்சியில்
பிறந்ததால்....
பிரிட்டிஷ் இந்தியாவின் பிரஜையா!
சித்திரை திருநாள் மகாராஜாவின்
ஆட்சியில் பிறந்ததால்
திருவாங்கூர் கொச்சி
சமஸ்தானத்தின் பிரஜையா!
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்
முழுமையான இந்திய பிரஜை
என்றால்
சிஏஏ ஏன்
சிஆர்சி ஏன்
என்பிஆரும் ஏன் ஏன்!

Vavar F Habibullah


No comments: