Tuesday, March 24, 2020

கொரோனா போதிக்கும் பேருண்மை


Dr.Vavar F Habibullah

மனிதா! உன்னைத் தவிர
இந்த உலகில் யாரும் எவரையும்
எப்போதுமே காப்பாற்ற இயலாது.
மனித நஷ்டமே! மனிதன்
பிற மனிதனை மட்டுமல்ல..
தன்னையே யார் என்று
அடையாளம் காணாமல்
போனது தான்.!
தொட்டால் தொற்றிக்
கொள்ளும் அபாயத்தில்
மனிதக் கரங்கள்.!



உள்ளத்தில் பீரிட்டு
எழும் அன்பை இனி
முத்தங்களில்
பரிமாற முடியாது.
ஆறுதலைக் கூட இனி
கட்டி அணைப்பதில்
வெளிப்படுத்த இயலாது.
காய்ச்சலும்,தும்மலும்,
இருமலும் மனித உறவுகளை
ஆறு அடி தூரம் விலகி
நிற்க வைத்து, அச்சமூட்டி
எச்சரிக்கை செய்கிறது.

மூடிய முககவசங்களில்
இப்போது முகங்களை
காண இயலவில்லை.
தொடாமலே, கரங்கள்
அடிக்கடி தன்னைத் தானே
சுத்தம் செய்து கொள்கின்றன.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
என்பதை கொரோனா கோடு
போட்டு பிரித்து விட்டது.

மனித இனம், இப்போது தன்னை
தனிமை படுத்திக் கொண்டது.
கொரோனா பரவாமல் தடுக்க
தனிமை தான் தனிச் சிகிச்சை
என்பது தனி விதியாகி விட்டது.
சோஸியல் டிஸ்டன்சிங் உலகில்
மருத்துவ சட்டமாகி விட்டது.

மனிதனை பார்த்து மனித இனம்
பயந்து நடுங்கும் காலம் இது.
சுற்றமும், உறவும், நட்புகளும்
கட்டாய குவாரண்டைனில்.
இனி நோய் தொற்றியவரை
தொட முடியாது, அருகில்
இருந்து உதவுவது கூட
பேராபத்தை விளைவிக்கலாம்.
இருமலில் தும்மலில் சிதறும்
டிராப்லெட், விஷ வைரஸை
வெளியில் கொட்டுகிறது.
அதை நுகர்ந்தாலே நோய்
தொற்றிக் கொள்ளும் அபாயம்
அருகிலேயே குடி இருக்கிறது.

பணபலம்,ஆட்பலம்,பதவி
பெருமை,ஆணவம்,அதிகாரம்
எல்லாம் சோர்ந்து போய்
விட்டன.நல்ல உணவு, நீர்
மருந்து மாத்திரைகளே உயிர்
வாழ கவசங்களாக தெரிகிறது.
நோய் பாதிப்புக்கு ஆளானவர்
களால் உணவை ருசிக்கவும்
முகரவும் முடியவில்லை என்று
இன்றைய மருத்துவ குறிப்புகள்
சொல்கின்றன.

விசா இல்லாமல் உலகம்
சுற்றும் கொரோனா மனிதர்
களை பழி வாங்க துடிக்கிறது.
இனி போர்புரிய உலக நாடுகளுக்கு
அணு ஆயதங்கள் தேவையில்லை.
கத்தியின்றி ரத்தமின்றி உலக
நாடுகளை எல்லாம் ஹிரோசிமா
நாகாசாகி போல் அழித்து
ஒழிக்கும் ஒரு பயோ ஆயுதம்
உலகை சுற்றி உலா வருகிறது.

இத்தாலியில், இறந்து போன
ஏராளமான மனித உடல்கள்
மண்ணடக்கம் பெற இயலாமல்
குவியலில் குவியலாக சிதறி
கிடக்கின்றன.அருகில் உற்றாரும்
இல்லை உறவினரும் இல்லை
நண்பர்களும் இல்லை.
பிணங்களை சீண்டுவார் இல்லை.
வேதம் சொல்வார் இல்லை
நல்லடக்கம் செய்வார் இல்லை.

ஆலய மணி ஓசை இல்லை
ஐ நேர தொழுகை இல்லை
ஜெப ஆராதனைகள் இல்லை
ஆறுதல் தரும் இறைவனை
தேடுவோரும் இல்லை.
மருத்துவமனைகளே
தேவாலயங்கள்!
மருத்துவர்களே
தேவ தூதர்கள்!
நோய் முற்றினால்
அதுவே நரகம்!
ரிசல்ட் நெகடிவ் ஆனால்
அதுவே சொர்க்கம்!

மனிதா
இனியாகிலும் விழித்துக் கொள்
வீட்டுச் சிறையில் 21 நாட்கள்...
உன்னையே நீ அறிந்து கொள்ள
இயற்கை தந்த மன வாசம் இது.
உன் இருமலும், தும்மலும்
உன் கோபம் வெறுப்பை விட
பன்மடங்கு ஆபத்தானவை.
பதிநான்கு நாட்கள் உன்னை
தனிமைச் சிறையில் அடைத்து
விடும்.ஆண்டியும் அரசனும்
கொரோனாவின் பார்வையில்
ஒன்று தான்.மனித இனத்தை
மட்டுமே காதலிக்க தெரிந்த
அதற்கு ஜாதி, மத,மொழி, நிறம்
நாடுகள் பற்றிய கவலை இல்லை.

தனிமை
அது போதிக்கும்
தத்துவம் புதுமை
உடல் தூய்மை
உளத் தூய்மை
சுற்றம் தூய்மை
முற்றம் தூய்மை
முற்றிலும் தூய்மை
தனி மனிதன் செய்த
பாவங்களில் இருந்து
முற்றிலும் விடுபட உதவும்.

பில் கேட்ஸ் சொல்கிறார்
after every difficulty
there is ease
உண்மை, இறைமறையும்
இதைத்தான் போதிக்கிறது.
this too will pass...

Dr.Vavar F Habibullah

No comments: