Sunday, November 3, 2019

உடல் கேட்கும் போது உணவு தர வேண்டும்!


இன்றைய காலத்தில் நோய்களால் அவதிப்படுவதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று; இயற்கை வாழ்வியலில் இருந்து விலகி இருப்பது தான். இயற்கை வாழ்வியல் என்பது செடி, கொடிகளால் ஆன உடை உடுத்துவதும், சமைக்காத உணவுகளை சாப்பிடுவதும், காடுகளில் வாழ்வதும் அல்ல.

ஏன் சாப்பிட வேண்டும்:

உடல் தனக்கு தேவையான விஷயங்களை நமக்குப் புரியும்படி அறிவிக்கும். உடல் இயற்கையை பின்பற்றி, அதற்கு மாறு செய்யாமல் இருப்பதுதான் இயற்கை வாழ்வியல்.

உடல் கேட்கிற போது உணவு கொடுக்க வேண்டுமா அல்லது நாம் நினைக்கும் போதெல்லாம் கொடுக்கலாமா?


நம் உடல், உணவை கேட்கிறதா அல்லது வேறு வேலையில் ஈடுபட்டிருக்கிறதா என்பதை அறியாமல், நாம் சாப்பிடும் உணவுகள் நிச்சயமாக சக்தியைத் தராது. உடலின் உள்ளுறுப்புக்களில் கழிவுகள் பெருக வழி செய்யும்.
நம் உடலின் ஒவ்வொரு உயிரணுவும் தன்னிகரில்லாத அற்புதம். அதை உலகின் எந்த கருவியோடும் ஒப்பிட முடியாது.

அப்படிப்பட்ட உயிரணுக்கள் கோடிக்கணக்கில் இணைந்து உருவான நம் உடலை நாம் எப்படி அணுகுகிறோம்?

நமக்கு நேரம் கிடைக்கிற போது சாப்பிடுகிறோம். உடல் கேட்கிற போது சாப்பிடுவதில்லை. பசித்து நாம் உண்ணும் உணவை செரித்துத் தான், முழு உடலின் ஆரோக்கியமும் நிலைப்படுத்தப்படுகின்றது.

சாப்பிடுவது கடமையா:

இயற்கை வாழ்வியல் என்பது கிராமங்களில் வாழ்வதை குறிப்பதில்லை. நாம் எங்கு வாழ்கிறோம் என்பதை விட, உடலின் இயற்கையோடு இணைந்து வாழ்கிறோமா என்பதுதான் முக்கியம்.

சாப்பிடுவது என்பதை ஒரு கட்டாய கடமையாக செய்யக்கூடாது என்பதற்காகவே நம் உடல், சுவையுணர்வை அளித்திருக்கிறது. உணவை செரித்து உடலுக்கு சக்தியளிக்க உள்ளுறுப்புக்கள் தயார் என்பதை, பசி நமக்கு அறிவிக்கிறது. ஆனால் நாம் பசிக்கிற போது சாப்பிடுவதில்லை.

குறிப்பிட்ட நேரத்தில் உணவு கிடைக்காத போது, உள்ளுறுப்புக்களைப் பராமரிக்கிற வேலைகளை செய்வதற்காக உடல் போய்விடுகிறது. நமக்கு நேரம் கிடைக்கிறது என்பதற்காக பசி இல்லாத போது சாப்பிடுகிறோம். பசியில்லாத போது சாப்பிடுவது உடலில் கழிவுகள் தேங்க வழிவகுக்கும்.

பசி போய்விட்டது. இனி எப்போது சாப்பிடலாம்?

அடுத்த முறை பசி வரும் போதுதான் நாம் சாப்பிட வேண்டும். பசியை உணர்ந்து உடல் கேட்கிற போது உணவு கொடுப்பதுதான், நம் உடலை துாய்மையாக வைத்துக் கொள்வதன் அடிப்படை.

எவ்வளவு சாப்பிட வேண்டும்:

அளவுக்கு அதிகமாக நாம் சாப்பிடும் உணவு கழிவாக மாறுகிறது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே போதும் என்ற உணர்வு தோன்றும். இது முதல் அறிவிப்பு. அடுத்த நிலையில் நாக்கின் சுவையுணர்வு குறையத்துவங்கும். இந்த நிலையில் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மூன்றாம் நிலையில் போதுமான உணவு இரைப்பைக்குள் சென்றவுடன், நிறைந்த உணர்வு ஏற்படும். இதற்கும் மேல் நாம் சாப்பிட்டால் வயிறு கனமாகவும், உடல் சோர்வும் தோன்றும். இந்த அறிவிப்புகள், உடலால் கொடுக்கப்படுபவை.

எப்படி சாப்பிடுவது:

உணவை நன்றாக அரைத்து, கூழாக்கி விழுங்க வேண்டும் என்றும், நாமாக முயன்று பற்களைக் கொண்டு வாய் வலிக்கும் வரை மெல்ல வேண்டும்.

இது சரியான முறையா?

”நொறுங்க தின்றால் நுாறு வயது” என்ற முதுமொழிக்கு மேற்கண்டவாறு அர்த்தம் தரப்படுகிறது.

தமிழில் நொறுங்குதல் என்பது தன்னியல்பில் நடப்பதைக் குறிக்கும். நொறுக்குதல் என்பது நம் முயற்சியால் செயற்கையாக நொறுக்கப்படுவதை குறிக்கும். நம் உடலில் நொறுங்கத் தின்பது என்பது யாருடைய வேலை. நம் சொந்த முயற்சியில் நடக்க வேண்டிய வேலையா அல்லது பற்களின் இயல்பான வேலையா.
குறுக்கிட்டால் குளறுபடி தான்: உடல் செய்ய வேண்டிய சுவாசத்தை நாம் கையில் எடுத்தால் என்னவாகும். கொஞ்ச நேரம் நீங்கள் சுவாசிக்க முயற்சித்தால் சுவாசம் சீரற்றுப் போகும். மூச்சுவிட முடியாத அளவிற்கு நெஞ்சு கனமாகும். உடலின் இயல்பான வேலைகளில் நாம் குறுக்கிட்டால் குளறுபடிதான் நடக்கும்.

பற்களின் இயல்பான வேலை மெல்லுவது தான். அதை நாம் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு தேங்காய்த் துண்டை அப்படியே வாயில் போட்டு விழுங்குங்கள் பார்ப்போம். மெல்லுவது உங்கள் வேலைதான் என்றால் ஒரு முறை கூட மெல்லாமல், தேங்காய்த் துண்டை விழுங்கிவிட முடியுமா. பற்கள் நம்மையும் மீறி ஓரிரு முறைகளாவது கடித்து விடுகின்றன. ஆக மெல்லுவது என்பதும் சுவாசிப்பதைப் போல உடலின் இயக்கம்தான்.

பற்களின் வேலையை பற்கள்தான் செய்ய வேண்டும். அதை நாம் செய்ய விட வேண்டும். உண்ணும் போதே வேறு பல வேலைகளையும் (டி.வி.பார்ப்பது) நாம் செய்தால் முழு கவனமும் உண்ணுவதில் இருக்காது. சில நேரங்களில் என்ன சாப்பிட்டோம் என்பது கூட மறந்து விடுகிறது. நம்முடைய கவனம் உண்ணுவதில் மட்டும் இருக்கும் போது பற்கள் தங்கள் வேலையை முழுமையாகச் செய்கின்றன. நாம் பிற வேலைகளைச் சேர்த்துச் செய்யும் போது மெல்லுவது முழுமையடைவதில்லை.

பசித்து சாப்பிடு:

பசிக்கிற போது அளவோடு, வேறு வேலைகள் ஏதும் செய்யாமல் விருப்பத்தோடு சாப்பிட வேண்டும். நம் முன்னோர்கள் நம்மை விட வலுவானவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், நீண்ட ஆயுள் கொண்டவர்களாகவும் இருந்தது இம்முறையில் தான்.

துாக்கத்தையும், பசியையும் பின்பற்றி இயற்கையான வாழ்க்கை முறையில் நம்மை இணைத்துக் கொள்ளும் போது உடல் மட்டுமல்ல; மனமும் சீர்படுகிறது.

நன்றி - தினமலர் மற்றும் உமர் பாரூக்

தொடர்புக்கு:

அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்,
முதல்வர்,
கம்பம் அகாடமி ஆப் அக்குபங்சர்,
கம்பம்.
இமெயில்: healerumar@gmail.com

குறிப்பு:

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

சரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் பொழுது கண்டிப்பாக அனைத்து வியாதிகளியிலிருந்தும் நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.
(http://reghahealthcare.blogspot.in/…/08/to-live-healthy.html)

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ /வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

(குறிப்பு : நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:


http://reghahealthcare.blogspot.in/
https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/groups/reghahealthcare
https://www.facebook.com/groups/811220052306876
Thanks & Regards,
Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

No comments: