Nooruddin DarulIslamfamily
ஒரு பிரச்சனை ஏற்பட்டது ரபீஆவுக்கு. அவரது நிலத்தில் ஓர் ஈச்சமரம் இருந்தது. அபூபக்ரின் நிலமும் ரபீஆவின் நிலமும் அருகருகே இருந்ததால் அந்த மரம் யார் நிலத்திற்கு உரியது என்பது பிரச்சனையாகி விட்டது.
ரபீஆ திண்ணைத் தோழர். அபூபக்ரு நபியவர்களின் அணுக்கத் தோழர். ரலியல்லாஹு அன்ஹுமா.
சர்வேயர், எண் இட்ட எல்லைக்கல் எதுவும் இல்லாத காலம் அது. ரபீஆ அந்த மரம் தன்னுடையது எனக் கூற, அபூபக்ரோ அது தன்னுடைய நிலத்தில் உள்ளது என்று வாதிட்டார். விவாதம் சற்றுச் சூடேற, அபூபக்ரு வாய் தவறி ரபீஆவைப் பற்றிச் சுடுசொல் ஒன்று கூறிவிட்டார். அவ்வளவுதான். ஆனால் வாயிலிருந்து வார்த்தை வெளியே விழுந்த அடுத்த கணமே தம் தவறு புரிந்து விட்டது அபூபக்ருக்கு.
"ஆமாம்! வாய் தவறி சொல்லிவிட்டேன். அதற்கு என்ன இப்பொழுது? யாருடைய மாமனார் நான்? அவரிடம் எனக்குள்ள செல்வாக்கு என்ன தெரியுமா?" என்றெல்லாம் பெருமை பேசி அகலவில்லை அபூபக்ருஸ் ஸித்தீக். பிரச்சனை முற்றிலும் திசைமாற ஆரம்பித்து விட்டது.
"இதோ பார். நான் உன்னை இகழ்ந்து ஒரு சொல் சொல்லிவிட்டேன். நீயும் என்னை ஒருமுறை இகழ்ந்து சொல்லிவிடு போதும். பழி தீர்ந்து விடும். நமக்குள் நாளை பிரச்சனை இருக்காது" அந்த 'நாளை' மறுநாள் அல்ல, மறுமையின் நாளை.
அபூபக்ரின் தரம், அவரது பெருமை, அவரது தியாகம், நபிகளிடம் அவருக்குள்ள சிறப்புத் தகுதி இதெல்லாம் அறியாதவரா ரபீஆ. ஏதோ, கோபத்தில் வாய் தவறி சொல்லிவிட்டார். அதற்காக, அவரை அதேபோல் நாமும் திட்டுவதாவது? "ம்ஹும்! அதெல்லாம் முடியாது" என்று மறுத்துவிட்டார் ரபீஆ.
"என்னைத் திட்டப் போகிறாயா இல்லையா?"
"முடியாது!"
"அப்படியென்றால் நான் நபிகளிடம் முறையிட வேண்டியிருக்கும்" என்று கிளம்பிவிட்டார் அபூபக்ரு. எதற்கு? தான் திட்டியதற்கு ரபீஆ பதிலுக்குத் திட்டி கணக்கைச் சரிசெய்ய மறுக்கிறார், அவருடைய கணக்கை நேர் செய்து தன்னைக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுவிக்க மறுக்கிறார். இது அநியாயமல்லவா? என்று நியாயம் கேட்பதற்கு.
நபிகளாரைக் காண்பதற்கு அபூபக்ரு விறுவிறுவென்று நடக்க, அவருக்குப் பின்னால் ரபீஆ வேகவேமாய் ஓட, அவருக்குப் பின்னால் ரபீஆவின் கோத்திரத்தினர் சிலர் கோபத்துடன் பின்தொடர, "நல்ல வேடிக்கை இது" என்பதுபோல் அந்த ஈச்சமரம் மட்டும் காற்றில் தன் கீற்றுகளை அசைத்துக் கொண்டிருந்தது.
"அவர்தான் முதலில் உம்மை இகழ்ந்து பேச ஆரம்பித்தவர். இப்பொழுது அவரே உம்மை முந்திக்கொண்டு உம்மைப் பற்றி நபியவர்களிடம் முறையிடச் செல்கிறாரா?" என்று ஆவேசமுடன் கேட்டனர் ரபீஆவின் உறவினர்கள்.
நின்றார் ரபீஆ. அவர்களை நோக்கித் திரும்பினார். "அமைதியாய் இருங்கள்! நீங்கள் யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள் தெரியுமா? அவர் அஸ்-ஸித்தீக். பெருமதிப்பிற்குரியவர். உயர்வானவர். அவர் உங்களை எல்லாம் திரும்பிப் பார்ப்பதற்குள் ஓடிவிடுங்கள். நீங்களெல்லாம் அவருக்கு எதிராய் எனக்கு ஆதரவளிக்கக் கூட்டம் திரட்டி வருகிறீர்கள் என்று அவருக்குத் தெரிந்தால் கோபம் ஏற்படலாம். அவர் கோபப்பட்டால், நபிகளும் கோபப்படலாம். அத்துடன் அழிந்தேன் நான். ஏனெனில் நபிகளை அவமதித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் கடுங்கோபம் என் தலைமேல் விழலாம்"
தங்களின் தலைவனையோ, தங்களது குழுவையோ ஆதரிப்பதாக நினைத்துக்கொண்டு, கரித்துக் கொட்டுவது, எதிர் தரப்பை ஏசிப் பேசுவது, பாட்டில்களை வீசி, வாகனங்களில் ஆயுதங்களை எடுத்துப் போட்டுக்கொண்டு ஊர் உலா வருவது போன்ற உத்தியெல்லாம் அறியாத சுத்தமான போர்க்கள வீரர்கள் அவர்கள். "சரி சரி. நீரே போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வாரும்" என்று சொல்லிச் சென்றுவிட்டனர் ரபீஆவின் குடும்பத்தினர்.
அபூபக்ரு சென்றார். நபிகளைச் சந்தித்தார். நடந்ததெல்லாம் கூறி முறையிட்டுவிட்டு அழுதார். அழுதது மரத்தை மீட்டுத் தரச் சொல்லி அல்ல; "ரபீஆவை என்னைத் திட்டச் சொல்லுஙகள்" என்று கோரிக்கையிட்டு.
வந்து சேர்ந்தார் ரபீஆ. நபியவர்கள் கேட்டார்கள், "ரபீஆ, உனக்கும் அஸ்-ஸித்தீக்குக்கும் இடையில் என்ன பிரச்சனை?"
"அல்லாஹ்வின் தூதரே! அவர் என்னை இகழ்ச்சியாகப் பேசியதைப்போல், நான் அவரைப் பேச வேண்டுமாம். நான் மறுத்துவிட்டேன்"
"நீ நன்று செய்தாய் ரபீஆ! உன்னை இகழ்ந்தவரை பதிலுக்கு நீ இகழ்ந்து பேசாதே! மாறாய், அல்லாஹ் அபூபக்ரின் பிழை பொறுக்கட்டும் என்று சொல்லிவிடு"
உடனே உரைத்தார் ரபீஆ, "அல்லாஹ் உமது பிழை பொறுக்கட்டும் அபூபக்ரே!"
கண்கள் குளமாகியிருந்தன அபூபக்ருக்கு. "அல்லாஹ் உமக்கு மாபெரும் கைம்மாறு வழங்கட்டும் ரபீஆ! அல்லாஹ் உமக்கு மாபெரும் கைம்மாறு வழங்கட்டும்" என்று அழுதுகொண்டே சென்றார் அபூபக்ரு (ரலி).
திண்ணைப் பள்ளியின் பட்டதாரியல்லவா? குணம் மிகைத்தது. அந்த மரத்தைவிட உயர்ந்து உயர்ந்து நெடுந்தோங்கி நின்றது.
ரலியல்லாஹு அன்ஹு!
நூல்: தோழர்கள்
ஆசிரியர்: நூருத்தீன்
No comments:
Post a Comment