Wednesday, November 27, 2019

உன் நச்சரிப்பு இல்லாத நாள் அமைதியாக இருக்குமென நினைத்திருந்தேன் இத்தனை நாள்.

Brindha Sarathy


உன் நச்சரிப்பு இல்லாத நாள்
அமைதியாக இருக்குமென
நினைத்திருந்தேன்
இத்தனை நாள்.

இவ்வளவு வெறுமை தருமென நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட
நீ முகம் சுளிப்பதும்
முணுமுணுப்பதும்
மனம் வாடி உழல்வதும்
எரிச்சலைத் தந்ததுண்டு எனக்கு.



ஆனால் நிரம்பித் தளும்பும்
உன் காதலின் கோப்பையிலிருந்து சிதறி விழுந்த துளிகள் அவை என
இப்போது புரிந்துகொள்கிறேன்.

மேகத்தின் குமுறலும்
இடிமுழக்கமும்
நிலம் நனைத்து ஈரமாக்கும்
அடைமழைக்காகவே என்பது
இன்னும் கூடுதலாகப் புரிகிறது இப்போது.

நிறங்கள் சிதறி வானவில் தோன்றிய
நம் காதலின் ஆரம்ப நாட்களையே அசைபோட்டபடியே இருந்துவிட்டேன்
இத்தனை நாள்.

அதையே மீண்டும் மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தும் விட்டேன்.

அந்த தினங்கள் மீண்டும் வரவே இல்லை நமக்கு.

இந்தச் சின்ன இடைவெளியில் அந்த வானவில்லை மறுபடி
வரைந்து எடுத்து வா.

உன்னை முதன்முதலாகச் சந்தித்த
அதே கடற்கரையில்
உனக்குப் பிடித்த அதே
அடர் பச்சை ஆடையுடன்
காத்திருப்பேன்.

மறவாமல் எடுத்து வா
இந்தப் பேசாத தினங்களைப் பற்றிய
கவிதை ஒன்றையும்.


_ பிருந்தா சாரதி

No comments: