Wednesday, November 6, 2019

திருவள்ளுவர் யாவருக்கும் உடையவர் !

#திருவள்ளுவர்சாகேப்

கழாக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
--------இது ஒரு திருக்குறள்

விளக்கம் ;
காலை கழுவாமல் பள்ளிவாசலுக்குள் நுழைவது போன்றது சான்றோர்கள் குழுமியிருக்கும் அவையில் பேதை ஒருவர் சென்று சேருவது...
வழிபாட்டு தலத்தில் காலை கழுவிய பிறகு நுழைவது முஸ்லிம்கள மட்டுமே செய்வதுண்டு..
அதை வள்ளுவர் குறளிலேயே வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போ சந்தேகமே இல்லாமல் அவரு நம்மாளு தான்...

மட்டுமல்ல குமரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் திருவிதாங்கோடு நடுக்கடைக்கு அருகில் (திருவள்ளுவர் வந்து சென்றதை நினைவு கூறும் வகையில்) ஒரு பகுதி #வள்ளுவர் ஜங்சன என்று பல நூறு ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறது

Colachel Azheem
--------------------------------------------------------------------------------------------------------

இன்று காலையில் என் கண்ணில் பட்ட முதல் பதிவு சகோதரர் Colachel Azheem அவர்களின் #திருவள்ளுவர்சாகேப் என்ற பதிவுதான்.

"கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்"-(குறள்: 840)

என்ற குறளுக்கு அவர் கொடுத்திருந்த விளக்கம் என்னை கவனிக்க வைத்தது.அவர் ஸீரியஸாகச் சொன்னாரா, ஸீசனை அனுசரித்துச் சொன்னாரா? என்பதை அந்தப் பதிவை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. என்றாலும் இந்தக் குறளுக்கு உரையாசிரியர்கள் என்னதான் சொல்லி இருக்கின்றனர் என்று பார்த்தேன்.


அவற்றுள் நம் காலத்து மூத்த உரையாசிரியர்களில் ஒருவரான புலியூர் கேசிகனின் உரை Colachel Azheem-இன் விளக்கத்தை ஒட்டி வருகிறது.அது இதுதான்:” சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல்,

”தொழுகைக்குரிய பள்ளி”

யினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும்”

மொழிநூல் மூதறிஞர் தேவநேயப் பாவாணர் தம் ‘திருக்குறள் தமிழ் மரபுரையில்,பள்ளி-தூய தமிழ்ச் சொல் என்று ஏற்கிறார். மணக்குடவர்,பரிமேலழகர் உரைகளை அவ்வளவாக ஏற்கவில்லை.அவர்களும் மு.வரதராசனார், சாலமன் பாப்பையா, கலைஞர், பரிமேலழகர் முதலிய பல உரையாசிரியர்களும் பள்ளி என்ற சொல்லுக்குப் படுக்கையறை என்றே பொருள் கொள்கின்றனர்.

பாவாணரோ, பள்ளி எனும் சொல் படுக்கை அறையை இந்தக் குறளில் குறிக்கவே குறிக்காது என்று நிறுவுகிறார்.அதுவே முற்றிலும் சரியாகத் தெரிகிறது.

பள்ளி’ என்ற சொல்லை ”தேவகம்”
(=தேவ + அகம் = இறை இல்லம்) என்று அருமையாகக் கூறுகிறார்.

எனினும் பொதுமக்களுக்குப் புரிய வேண்டும் என்று கருதியோ என்னவோ அது கோவிலைக் குறிக்கும் என்றும் கூறுகிறார்.

புலியூர் கேசிகனின் உரை வியப்பளிக்கும் விதத்தில் பொருத்தமாக இருப்பினும்,

மேற்கண்ட குறளில் பயின்று வரும் ‘பள்ளி’ எனும் சொல் மேலாய்வுக்கு உட்பட்டதாகும்.

அதை இறைவன் நாடினால் பின்னர் எழுதுகிறேன்.

-ஏம்பல் தஜம்முல் முகம்மது
--
Yembal Thajammul Mohammad

No comments: