Tuesday, November 19, 2019

கதறி அழுகிறேன் எல்லாம் வல்ல இறைவனின் சந்நிதியில்! .

 தஹஜஜுத் நேரம்.சரியாக மணி அதிகாலை 4.25!

கண்களில் கண்ணீர் கரைபுரண்டோட கதறி அழுகிறேன் எல்லாம் வல்ல இறைவனின் சந்நிதியில்! .

இதற்கு முன்பும் பலமுறை இப்படியே நடந்தது.

பல இரவுகள் அனிதாவுக்காக ! பிறகு அக்லாக் முதல் ஜுனைத் முதல் தப்ரேஸ் வரை அனைவருக்க௱கவும்! ரோஹித் வெமுலாவுக்காக, தலித் சகோதரர்கள் இழிவுபடுத்தப்பட்டு தாக்கப்படும் ஒவ்வொரு முறையும், பலமுறை ஆசிஃபாவுக்காக, பிறகு இளந்தளிர் சுர்ஜித்துக்காக, இப்போது பாத்திமா லத்தீஃபுக்காக!


தன் மகனிடம் ,"பல்வேறு மதங்கள் கொண்ட மக்கள் வாழும் இந்தியாவை நீ ஆளும் போது எவருடைய மத உணர்வையும் புண்படுத்தக் கூடாது" என்று சொல்லி அவ்வாறே ஆட்சியும் புரிந்த ஒரு நீதி மிக்க மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட ஓர் இறையில்லம்
அவமானப்படுத்தப்பட்டு இடிக்கப்பட்டு பிறகு தாரை வார்க்கப்பட்ட அவல நிலை அகல,

உலகெங்கும் பன்னாட்டு கூட்டுப் படைகளாலும் பாதுகாப்புப் படைகளாலும் சொந்த நாட்டு ராணுவங்களாலும் காவல் துறைகளாலும் கொடூரமாக வேட்டையாடப்பட்டுக் கொல்லப் பட்டுவரும் அப்பாவி இளைஞர்கள், சின்னஞ் சிறுவர்கள், பெண்கள் முதியவர்கள் அனைவருக்காகவும்

உதட்டில் பிரார்த்தனை, உள்ளத்தில் மனறாட்டம், குரலில் கெஞ்சல், நிலத்தில் நெற்றி, நாவில் இந்த துஆ:

"நீதியின் நாயகனே! தன் அடியார்கள் மீது
எழுபது தாய்களை விடவும் கருணையுள்ளவனே,² தாய் தந்தைகளின் அழுகைக்கு, விலங்குளைப் போல் வேட்டையாடப் படும் அந்தச் சமுதாயங்களின் அவலங்களுக்கு....

இந்தக் குழந்தைகளை தமது குழந்தைகளாக எண்ணி இயலாமையில் விம்முகின்ற,

பல்லாயிரக்கணக்கான முகநூல் நண்பர்களின் கட்டுப்படுத்த முடியாத சோகக் கண்ணீருக்கு, விசும்பல்களுக்கு பதில் அளித்திடு!' இறைவா! உன் தீர்ப்பு வந்திட சற்றே காலதாமதமாகும். ஆனால் அது ஒருநாள் வந்தே தீரும். அப்போது அது அநீதிகளைத் தவிடுபொடியாக்கிவிட்டு நீதியை சிம்மாசனத்தில் அமர்த்திவிடும். அராஜகத்தை அரியணையிலிருந்தே அகற்றிவிடும்!

அந்த நாளே எமது தேசத்தின், இந்த உலகின் பொன்னாள்!

Kanchi Abdul Rauf Baqavi

No comments: