Tuesday, November 19, 2019

ஒரு துஆ சொல்லித்தாருங்களேன்

ஒரு துஆ சொல்லித்தாருங்களேன் என்று கேட்ட தம் தந்தையின் சகோதரர் அல்-அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹும்ம இன்னி அஸ் அலுக்க அல்-ஆஃபியா” என்று படு சுருக்கமான துஆ ஒன்றைச் சொல்கிறார்கள் நபி (ஸல்).

இந்த துஆவைப் பற்றி சிந்தித்த அப்பாஸ் (ரலி) சில நாள் கழித்து நபியவர்களிடம் வந்து, “யா ரசூலுல்லாஹ். இந்த துஆ ரொம்பவும் சிறியதாக இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் பெரிதாகச் சொல்லிக் கொடுங்களேன்” என்றார்.

அதற்கு நபியவர்கள், “என் தந்தையின் சகோதரரே! அல்லாஹ்விடம் ஆஃபியா (العافية) வேண்டுங்கள். அல்லாஹ்வின்மீது ஆணையாக! ஆஃபியாவை விடச் சிறந்தததை நீங்கள் பெற முடியாது” என்றார்கள்.


ஆஃபியா என்றால் என்ன என்பது கீழ்காணுமாறு விவரிக்கப்பட்டுள்ளது -

நோய், துயர், துன்பம் போன்றவற்றிலிருந்து என்னைக் காப்பாற்று என்பது ஆஃபியா.
ஆரோக்கியமாக இருந்தால் அது ஆஃபியா
போதுமான பொருளாதாரம் வாய்த்திருந்தால் அது ஆஃபியா
பிள்ளைகளின் பாதுகாவல் - அது ஆஃபியா
மன்னிக்கப்பட்டும் தண்டிக்கப்படாமலும் இருந்தால் அது ஆஃபியா

*“யா அல்லாஹ்! என்னை இடுக்கண், துயரம், துக்கம், கொடுமை, தீங்கு, கேடு போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாயாக. என்னை சோதனைக்கு உள்ளாக்காதே”* என்று கேட்பவை அனைத்தும் எளிய, சிறிய, ஆனால் செறிவு மிக்க இந்த துஆவில் அடக்கம்.

உள்ளார்ந்து இறைவனிடம் வேண்டுங்கள் - *அல்லாஹும்ம இன்னி அஸ் அலுக்க அல்-ஆஃபியா.*


# Nazreen Salman - பக்கத்திலிருந்து
----------------------------------------------------------------
"எழுத்தேனும் சொல்லேனும்
இறைத்தூதர் வாயுரைத்தால்
பழுத்ததொரு சத்தியமே!
பயன்கொள்ளும் பாருலகே!"


--- ஏம்பல் தஜம்முல் முகம்மது

No comments: