Abu Haashima
பழுத்த இலையானாலும்
பயிருக்கு உரமாகி
விளைச்சல் தருபவர்கள்
முதியவர்கள் !
#அப்துல்_முத்தலிப் ஒரு முதியவர் !
#ஹாஷிம்_குடும்பத்தின் மூத்த குடிமகன் !
அன்றைய அரபு தேசத்தின் மக்களெல்லாம் அவரைத்தான் தலைவராக மதித்தார்கள் !
அவர் சொன்னால்
அந்த சொல்லுக்கு கட்டுப்பட்டார்கள் .
இறை நம்பிக்கையாளர்.
மக்காவுக்கு வரும் யாத்திரீகர்களுக்கு
தண்ணீர் உட்பட தேவையான உதவிகளை செய்து வந்தவர் அவர்.
வற்றாத சுனையாக பொங்கிக் கொண்டிருந்த
#ஜம்ஜம்_கிணறு
இருந்த இடம் தெரியாமல் மண்மூடிப் போய்விட்டது.
மக்கத்து மக்களுக்கும்
யாத்திரீகர்களுக்கும்
பெரும் துன்பம் ஏற்பட்டது.
அப்போது ...
#கஃபாவின் வாசலுக்கு வந்து
இறைவனிடம் முறையிட ஆரம்பித்தார் அப்துல் முத்தலிப்.
" இறைவா ...
ஜம்ஜம் கிணறு புதையுண்டு கிடக்கும் இடத்தை நீ எனக்குக் காட்டித் தா.
அப்படி காட்டித் தந்தால் என்னுடைய
#பத்து_பிள்ளைகளில் ஒரு பிள்ளையை
உனக்கு அறுத்துப் பலியிடுவேன் "
என்று கோரிக்கை ஒன்றை வைத்தார்.
இறைவன் அவரது வேண்டுதலை
ஏற்றுக் கொண்டான்.
அன்றிரவு அப்துல் முத்தலிப் உறங்கும்போது அவரது கனவில்
ஜம்ஜம் கிணறு இருக்கும் இடத்தை
இறைவன் காட்டிக் கொடுத்தான்.
மறுநாள் அந்த இடம் தோண்டப்பட்டு
புதையுண்டு கிடந்த ஜம்ஜம் கிணறு
மீட்டெடுக்கப்பட்டது.
#மக்காவின் தாகம் தீர்ந்தது
மக்காவை நோக்கி மீண்டும் யாத்திரீகர்கள் வர ஆரம்பித்தார்கள்.
அப்துல் முத்தலிப் மக்கத்து மலைகளைப் போல் மக்கள் மனங்களில் உயர்ந்து நின்றார்.
ஆனால் ....
#முதியவர் அப்துல் முத்தலிபோ
மனம் கலங்கி நின்றார்.
இறைவன் தன் கோரிக்கையை ஏற்று
தண்ணீர் கிணறை தந்து விட்டான்.
இறைவனுக்கு தானளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமே ...
என்று மனம் கலங்கினார்.
என்றாலும் இறைவனுக்கு மாறு செய்யக்கூடாதென்று உறுதி பூண்டு
கஃபாவுக்குச் சென்றார் .
தன் பத்துப் பிள்ளைகளின் பெயரையும்
பத்து ஓலைகளில் எழுதி அதில் ஒன்றை
கஃபாவின் காவலரிடம்
தேர்ந்தெடுக்கச் சொன்னார்.
அவர் எடுத்தார்.
அதில் இளைய மகன்
#அப்துல்லாஹ்வின் பெயர் வந்தது.
அப்துல்லாஹ் அவரது மனதுக்கு உகந்த மகன். இளைய மகன்மீது அவருக்கு அத்தனைப் பாசம்.
அவரை பலிகொடுக்க அவர் மனம் ஒப்பவில்லை.
மீண்டும் மீண்டும் எடுத்தார்.
அப்துல்லாஹ்வின் பெயரே வந்தது.
இறைவன் நாட்டம் அதுதான் என்று உணர்ந்து கொண்ட பெரியவர்
அப்துல்லாஹ்வுக்குப் பகரமாக
#பத்து_ஒட்டகங்களை பலியிடுவதாக மனதில் நேர்ந்து கொண்டார்.
ஒரு ஓலைத் துண்டில் பத்து ஒட்டகங்கள் என்றும் இன்னொரு ஓலைத் துண்டில்
அப்துல்லாஹ் என்றும் எழுதி அதில்
ஒரு துண்டை எடுக்க வைத்தார்.
அது...
அப்துல்லா பெயராகவே வந்தது.
அப்துல் முத்தலிப் மனம் தளரவில்லை.
மீண்டும் துண்டு போட்டார்.
இருபது ஒட்டகம் என்று எழுதினார்.
அப்போதும் அப்துல்லாஹ் பெயரே வந்தது.
இப்படியே எழுதி எழுதி எடுத்ததில்
அப்துல்லாஹ்வுக்குப் பகரமாக
#நூறு_ஒட்டகம் என்று எழுதிய ஓலைத் துண்டு வந்தது.
இறைவனுக்கு நன்றிகூறி நூறு ஒட்டகங்களை அப்துல் முத்தலிப் பலியிட்டார்.
அன்பு மகன் அப்துல்லாஹ்வை
அறுபடாமல் காப்பாற்றினார்.
நாட்கள் நகர்ந்தன.
அப்துல்லாஹ்வுக்கு
#ஆமினாவை பெண்பார்த்து
மணமுடித்து வைத்தார்
அப்துல் முத்தலிப்.
.
ஆமினா உம்மா கர்ப்பமாக இருந்தார். கணவர் அப்துல்லாஹ் வியாபாரத்தை முடித்து வரும் வழியில் யத்ரிபில் ( மதினா ) வைத்து இறந்துவிட்டார்.
தந்தை முத்தலிபின் சோகம் சொல்லில் அடங்காது. துவண்டு போனார்.
பிள்ளைப் பெறும் நாள் வந்ததும்
ஆமினா உம்மா அழகான ஒரு
#ஆண்_குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தையை கையில் ஏந்திய அப்துல் முத்தலிப் ...
#முஹம்மத் என பெயரிட்டு மூன்று முறை அழைத்து மகிழ்ந்தார்.
#முஹம்மத் என்றால்
#புகழப்பட்டவர் என்று அர்த்தம்.
மகனை இழந்த முதியவர் பேரனின் முகம் கண்டு சிந்தை மகிழ்ந்தார்.
குழந்தைக்கு ஆறு வயதானபோது அன்புத் தாயார் ஆமினா உம்மாவும்
இறைவனளவில் சேர்ந்து விட்டார்.
குழந்தை முஹம்மது அநாதையாக
நின்றபோது ....
" நான் இருக்கும்வரை நீங்கள் அநாதையில்லை " என்று தன் மார்மீதும்
தோள்மீதும் தவழவிட்டு வளர்த்தார்.
முதியவர் தன் மரணப்படுக்கையில் இருக்கும்போது தன் பிள்ளைகளையெல்லாம் அழைத்து
தன்னைப்போல் அன்பும் ஆதரவும்
ஈகைக் குணமும் நிரம்பிய மூத்த மகன்
அபுதாலிப் அவர்களிடம் பிள்ளை முஹம்மதை ஒப்படைத்து
ஒருகுறையுமில்லாது பேணி வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாதுகாப்பான மனிதரிடம் குழந்தை முஹம்மதை ஒப்படைத்த மன நிறைவோடு
முதியவர் அப்துல் முத்தலிப்
கண்களை மூடிக் கொண்டார்.
முதியவர்களெல்லாம்
முத்தலிப்கள்தான் !
முத்தலிப்
முதியோர்களின்
நிறைமுகம்
இருண்ட வானத்தை
வெளிச்சமாக்கும்
மதிமுகம்
குடும்பங்களை தாங்கி நிற்கும்
துறைமுகம்
துன்பங்களிலும் வாடாத
மலர்முகம்
சோதனைகளுக்கஞ்சாத
போர்முகம்
பாசத்தைப் பொழிகின்ற
மழைமுகம்
வம்சத்தின் வரலாறு சொல்லும்
நூல்முகம் !
முதியவர்களின் அருமை பெருமைகள்
எல்லோருக்கும் தெரிவதில்லை.
சிலருக்கு அவர்கள்
வேண்டாத சுமை
பலருக்கு
சுமைதாங்கி
மருமக்களுக்கு
கிழட்டுக் கோட்டான்கள்
உறவுகளுக்கு
ஊதியமில்லா ஊழியர்கள்
உணவுக்காக
உறையுளுக்காக வேகும்
சமையல்காரர்கள்
பிள்ளைகளுக்கு
பொக்கிஷங்கள்
அவர்கள்தான்
மேடுகளையும்
பள்ளங்களையும் பிரித்தறிந்து
பிள்ளைகளை பேணுபவர்கள்
மருத்துவர்களுக்கு
ரெகுலர் கஸ்டமர்கள்
சமுதாயத்திற்கு
பெரிய மனிதர்கள்
அரசுக்கு
மூத்த குடிமக்கள்
எத்தனை பெயர் வைத்தாலும்
அறிவில்
அனுபவத்தில்
முதியவர்கள்
முதிர்ந்தவர்களே !
அவர்கள் ....
பிள்ளைகளின் பாதுகாவலர்கள்
பேரன் பேத்திகள்
ஓடி விளையாடும்
பாசத் தோட்டங்கள்
இறைவனிடம்
தனக்காக எதுவும் கேட்காமல்
குழந்தைகளுக்காக
சடையாமல் பிரார்த்திக்கும்
பாசமலர்கள்
தன்னுயிரையும்
தியாகம் செய்யத் தயங்காத
தியாகிகள் !
முதியவர்கள் தினத்தில்
முதுமை பெற்றவர்களை
மதிப்போம்
அவர்களின் நலனுக்காக
இறைவனைத் துதிப்போம் !
Abu Haashima
No comments:
Post a Comment