Wednesday, October 23, 2019

முதியோர் சரணாலயம் / Dr.Vavar F Habibullah அமெரிக்காவிலிருந்து


நேற்று, ஒரு வித்தியாசமான
முதியோர் இல்லம் ஒன்றை பார்வையிட
என்னை அழைத்து சென்றார்கள்.

பிரபல தொழில் அதிபர்கள்,
விஞ்ஞானிகள்,நடிகர்கள்,
கலை, இலக்கிய வித்தகர்கள்,
அதிகாரிகள், அரசியல்வாதிகள்
என ஒரு காலத்தில் தங்கள்
துறைகளில் புகழ்பெற்று விளங்கிய
பிரபலங்கள் உள்ளடங்கும்
நவீன மருத்துவ வசதிகள்
கொண்ட ஹைடெக் விஐபி
சரணாலயமாக இந்த சென்டர்
திகழ்கிறது.


அதிகம் வயதான காரணத்தால்
தங்கள் சுய தேவைகளைக் கூட
தங்களால் செய்து கொள்ள
முடியாத நிலையில் உள்ள
இந்த பெரிய குழந்தைகளை,
மிகச்சிறந்த முறையில் கண்காணித்து அவர்களின் மனநலம், உடல் நலம்
பேண உதவும், சமூக நல ஆர்வலர்களால்
நடத்தப்படும் ஒரு உயர்தர
தொண்டு நிறுவனம் இது.

அந்நாட்களில் ஓகோ என்றிருந்த
இவர்கள் இன்று தன்னிலை மறந்த
வர்களாக,தான் யார் என்பதை
உணராதவர்களாக,அங்கங்கள்
செயலிழந்த நிலையில் சுயநிலை
மறந்து சாதாரண குழந்தைகள்
போல் வாழ கற்று வருகிறார்கள்.
குழந்தைகளுக்கான சிறப்புப்
பயிற்சி மட்டுமே இவர்களுக்கு
அளிக்கப் பட்டு வருகிறது.
அதைச் செய்யவே இவர்கள்
தடுமாறுகிறார்கள்.

பிறந்து,வளர்ந்து,கற்று,தேர்ந்து
பிறர் மெச்ச வாழ்ந்து, பின்னர்
எல்லாம் மறைந்து,மறந்து மீண்டும்
குழந்தைகள் நிலைக்கு மாற்றம்
செய்யும் ஒரு ரசவாதக் கலை
இங்கே வாழ்க்கைக் கலையாக
இவர்களுக்கு போதிக்கப் படுகிறது.

பிரபல டாக்டர் நண்பர் ஒருவர்
சமீபத்தில் என்னை சந்தித்த போது சொன்னார்....
“டாக்டர். ஒரு ஏழு வயது
குழந்தையாக வாழ்ந்தால்
எவ்வளவு சுகமாக இருக்கும்!”

உண்மையில் இந்த முதிய
குழந்தைகள் பணம், பதவி
புகழ் எதையும் இப்போது
தேடி அலையவில்லை.
அதில் எவ்வித
விருப்பமும் இல்லை.
இழந்து போன
கண் பார்வை சரியாகுமா!
காது கேட்குமா,பேச முடியுமா!
நடக்க இயலுமா,பேச,படிக்க
எழுத வருமா,மறதி மறைந்து
ஞாபகம் வெளிப்படுமா,உடல்
மனம் எல்லாம் முன்னிருந்த
நிலைக்கு திரும்புமா!!
பிறர் உதவியின்றி வாழ முடியுமா!
இது எல்லாம் நிறைவேறினால்
அதுவே வாழ்க்கை வெற்றியின்
ரகசியம் என்று இவர்கள்
சொல்லாமல் சொல்கிறார்கள்.

முதியவர்களை கண்டு கொள்ளாத
இளைய தலைமுறை வாழும் டிஜிடல்
உலகில்,வயது வந்தவர்களையும்
குழந்தைகள் போல் ட்ரீட் செய்ய
நல்ல குழந்தை மருத்துவர்களே
இப்போது தேவை என்பது மிகவும்
தெளிவாக புரிகிறது.




Dr .Vavar F Habibullah

No comments: