Thursday, October 24, 2019

இமாம் கஸ்ஸாலி (றஹ்) யின் சமூக விமர்சனப் பார்வை


இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் சமூகத்தில் தோன்றிய மகத்தான அறிவாளுமையும், ஆத்மீக புருஷத்துவமும் மிக்க ஒரு மாமனிதர். இஸ்லாமிய சிந்தனையிலும் முஸ்லிம் சமூக வாழ்விலும் மிக ஆழமான தாக்கத்தையும் செல்வாக்கையும் பதித்த ஒரு சிந்தனையாளர். தனது ஆத்மீக அனுபவத்தி னடியாக ஏற்பட்ட சிந்தனைத் தெளிவின் வெளிச்சத்தில் அவரது கால சமூகத்தின் சிந்தனைச் சிக்கலுக்குத் தெளிவு வழங்கிய ஒரு பேரறிஞர்.

இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களை சமூக வாழ்விலிருந்து ஒதுங்கி, தங்களுக்கென ஒரு தனி உலகைப் படைத்துக்கொண்டு, தத்துவ சிந்தனையில் ஈடுபட்ட வெறுமனே ஒரு சிந்தனை வாதியாக நாம் எந்த வகையிலும் கொள்ளல் முடியாது. அவர்கள் சமூக நீரோட்டத்தோடு நீந்திச் சென்று, சமூக வாழ்வின் வளைவு நெளிவுகளை அவதானித்து, சமூக விவகாரங்களில் தன்னை மிக ஆழமாக ஈடுபடுத்திக்கொண்டு, அவர்களது காலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கிய ஒரு சீர்திருத்த வாதியாக விளங்குகின்றார்கள். அவர்களது பன்முக ஆளுமையின் இந்தச் சமூகப் பரிமாணம் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


இமாம் கஸ்ஸாலி (றஹ்)யின் காலப் பிரிவில் சமூகத்தில் மக்களின் சிந்தனையில் குழப்பநிலை தோன்றியிருந்தது. பகுத்தறிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருந்த தத்துவ ஞானத்தின் செல்வாக்கு காரணமாக, இறைதூது, நபித்துவம் பற்றிய இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில்கூட விசுவாசம் தளர்ந்திருந்தது. இஸ்லாமிய ஷரீஆவின் கோட்பாடுகளைச் செயல்படுத்தும் மனப்பாங்கும், தன்மையும் அருகியிருந்தது. மதமும் சன்மார்க்கமும் பொதுமக்களுக்காகவே உள்ளது. தத்துவஞானம் சமூகத்தில் அறிவுத் துறையில் உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு உரிமையானது என்ற அடிப்படையில் சில தீவிர பகுத்தறிவுவாதிகள் செயல்பட்டனர். இது மக்களின் சன்மார்க்க வாழ்வில் மிகப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தஸவ்வுபின் அடிப்படையில் செயல்படுபவர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர், தாம் ஆத்மீகப் படித்தரத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருப்பதாகவும், எனவே அடிப்படைக் கிரியைகளை நிறைவேற்றும் அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் வாதிட்டனர். உலமாக்கள் என தங்களை அழைத்துக் கொண்ட மார்க்க அறிஞர்கள் தங்களது சன்மார்க்க அறிவை அற்ப இன்பத்துக் காகவும் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும் பேரம்பேசினர். தீவிர ஷீஆப் பிரிவினரான பாதினீக்கள் அல்குர்ஆனின் திருவசனங்களுக்குத் தவறான விளக்கமளித்து அதன் தூய்மையை மாசுபடுத்த முனைந்தனர். சமூக அநீதிகள், தீய செயல்கள் மிகப் பரவலாகக் காணப்பட்டன.(1)

அவர்களது கால சமூகத்தை, சன்மார்க்கத்தின் வெளிச்சத்திலும், பற்றற்ற மனநிலை யோடும், மனோ இச்சைக்கு எதிரான ஆத்மீகப் போராட்டத்தில் பத்து ஆண்டுகளை ஏகாந்த வாழ்வில் கழித்ததன் பயனாகப் பெற்ற உளத்தூய்மை மற்றும் சிந்தனைத் தெளிவின் ஒளியிலும் அவதானித்த இமாம் கஸ்ஸாலி (றஹ்) சமூகச் சீர்கேட்டுகளுக்கும் சிந்தனைக் குழப்ப நிலைகளுக்கும் காரணமாக அமைந்த – சமூகத்தில் புரையோடியிருந்த ஒவ்வொரு அம்சங்களையும் மிகத் தீவிரமான விமர்சனத்திற்கு உட்படுத்து கின்றார்கள். மிகத் துணிச்சலோடும், சக்தியோடும், தூய்மையான சிந்தையோடும் அவர்கள் இப் பணியில் ஈடுபட்டார். சமூகத்தைப் பாதித்துள்ள ஒவ்வொரு நோயையும் இனம் காணுகின்றார்கள். இதற்குக் காரணமாக அமைந்த, சன்மார்க்க அறிவைத் தவறாகப் பயன்படுத்திய மார்க்க அறிஞர்கள் (அவர்களை உலமாஉத் துன்யா- உலகம் சார்ந்த அறிஞர் என இமாமவர்கள் வர்ணிக்கின்றார்கள்), சமூக பொருளாதார அநீதிக்கும், சமூகத்தின் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைந்த ஆட்சியாளர்கள், தஸவ்வுப் என்ற தூய இஸ்லாமிய ஆத்மஞானத்தைத் திரித்தும் சிதைத்தும் மாசுபடுத்தியும் விளக்கி, ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக விளங்கிய போலி ஸூபிகள், தூய சன்மார்க்க சிந்தனையை மாசுபடுத்திய தத்துவஞானிகள் , சிந்தனையாளர்கள் அனைவரும் இமாமவர்களின் விமர்சனப் பார்வைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்த ஒவ்வொரு பிரிவினரும் சமூகத்திற்கு எதிராக இழைக்கும் அநீதிகளை அவர்கள் மிகத் தெளிவாகவும் துணிச்சலோடும் விளக்குகின்றார்கள்.

இமாம் கஸ்ஸாலியின் காலப் பிரிவில் சமூகத்தில் காணப்பட்ட சிந்தனைக் குழப்ப நிலை, சமூகச் சீர்கேடுகளுக்கு சன்மார்க்க அறிஞர்களான உலமாக்களே மூல காரணமாக அமைவதாக அவர்கள் கருதுகின்றார்கள். உள்ளங்கள் ஏன் நோய்க்கு ஆளாகின்றன? ஏன் மறுமை வாழ்வு பற்றி உணர்வற்று மனித உள்ளங்கள் மரத்துவிடுகின்றன? என்ற வினாக்களை எழுப்பும் இமாமவர்கள் அதன் காரணங்களை மிக விரிவாக விளக்குகின்றார் கள். அதில் முக்கிய காரணமாக உலமாக்களாகிய சன்மார்க்க அறிஞர்களைப் பீடித்துள்ள நோய் பற்றிக் குறிப்பிடுகின்றார்கள். “உலமாக்கள் மனித உள்ளங்களைப் பாதிக்கும் நோய்களின் மருத்துவர்களாவர். ஆனால் அந்த மருத்துவர்களே நோய்க்கு ஆளாகி இருக்கும் போது மக்களின் நோய்பிடித்த உள்ளங்களுக்கு சிகிச்சை செய்வோர் யார்? இதன் காரணமாக ஆத்மீக நோய்கள் அதிகரித்துவிட்டன. ஆத்மாவுக்கான மருத்துவம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. எனவே மக்கள் உலக வாழ்வில் தீராத பற்றுக் கொண்டுவிட்டனர். வணக்கங்கள் அவற்றின் உயிரோட்டத்தை இழந்துவிட்டன. வெறும் சடங்காக, சம்பிரதாயமாக அவை நிறைவேற்றப்படுகின்றன.” என மார்க்க அறிஞர்களின் அசிரத்தை காரணமாக சமூகத்தில் மலிந்துள்ள ஆத்மீக நோய்களின் ஆபத்தான விளைவுகள் பற்றி இமாமவர்கள் பேசுகின்றார்கள்.(2)

சன்மார்க்க அறிவை அற்ப உலக நன்மைகளுக்காகாகப் பயன்படுத்தும் மார்க்க அறிஞர்களை உலமாஉஸ்ஸூஃ – தீய உலமாக்கள் என வர்ணிக்கிறார்கள்‌. இஹ்யா உலூமுத்தீன் என்னும் நூலில் உலகம் சார்ந்த அறிஞர்கள் (உலமாஉத் துன்யா), மறுமை சார்ந்த அறிஞர்கள் (உலமா உல் ஆகிரா) என அவர்களது கால மார்க்க அறிஞர்களை இரு பெரும் பிரிவுகளாக வரிசைப்படுத்தும் இமாமவர்கள், உலகம் சார்ந்த அறிஞர்களில் காணப்படும் பன்னிரண்டு தன்மைகளை வகைப்படுத்துகின்றார்கள். ‘புகஹாக்கள்’ எனப்படும் சட்ட அறிஞர்களும், முதகல்லிமீன் என்னும் இல்முல் கலாம் சார்ந்த அறிஞர்களும் சன்மார்க்கத்தின் புறக்கிரியைகளோடு தொடர்புடைய, உடல் உறுப்புக்களுடன் சம்பந்தமான அறிவோடு மட்டுமே தங்களை மட்டுப்படுத்திக்கொண்டு உள்ளத்தோடு தொடர்புடைய, உள்ளத்தைப் பாதிக்கும் ஆத்மீக நோய்கள், அவற்றுக்கான நிவாரணங்கள் பற்றிய அறிவில் எத்தகைய ஆர்வத்தையோ ஈடுபாட்டையோ காட்டாதிருக்கின்றனர். அத்தகைய விடயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டால், அமைதியாக இருந்து விடுகின்றனர். ஆனால் ‘அல்-லிஆன், அள்ளிஹார்’ போன்ற விவாகரத்து தொடர்பான புறக் கிரியைகள் பற்றி வினவப்பட்டால் அவை பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் குவித்துவிடுகின்றனர். அவற்றோடு தொடர்புடைய- எத்தகைய அவசியமுமற்ற மிக நுட்பமான விடயங்களைக் கூட மிக நுட்பமாகவும், ஆழமாகவும் விளக்க ஆரம்பித்து விடுகின்றனர்.(3)

இதுபோன்றே இமாமவர்கள் அவர்களது காலப் பிரிவில் முஸ்லிம் சமூகத்திற்கு மிக அவசியமாகக் காணப்பட்ட பர்ளு கிபாயா வகையைச் சார்ந்த மருத்துவம் போன்ற கலைகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கின்றார்கள். அவர்களது காலப் பிரிவில் முஸ்லிம் சமூகத்தில் இந்தப் புறக்கணிப்பு காரணமாக தோன்றியுள்ள அவல நிலையைப் பின்வருமாறு கவலையோடு விளக்குகின்றார்கள்:

“பல நகரங்கள் உள்ளன. அங்கு முஸ்லிம்களல்லாத திம்மிகள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள்) தான் மருத்துவர்களாக உள்ளனர். மருத்துவத்துடன் தொடர்புடைய ஷரீஆ சட்டங்கள் பற்றி அத்தகையோரின் சாட்சியங்களை ஏற்றுக்கொள்வதற்கு சன்மார்க்கத்தில் அனுமதியில்லை. இந்நிலையில் முஸ்லிம்கள் “பிக்ஹ்” என்ற சட்டத்தைக் கற்பதிலேயே மிக முனைப்புடன் ஈடுபடுகின்றனர். குறிப்பாக சட்டப் பிரச்சினை யோடு தொடர்புடைய அபிப்பிராய பேதங்கள், கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் பற்றி அறிவதிலேயே தீவிர ஆர்வம் செலுத்துகின்றனர். நகரங்கள், கிராமங்கள் புகஹாக்களால் நிறைந்துள்ளன. மார்க்க சட்டக் கலையைக் கற்ற புகஹாக்கள் சமூகத்தில் ஒரு சிலரால் நிறைவேற்றப்பட்டால் போதுமானது என்ற நிலையில் இருக்கும் ஒன்றில் தீவிர அவதானம் செலுத்தி, சமூகத்தில் எவராலும் அவதானம் செலுத்தப்படாத பர்ளு கிபாயாவைப் புறக்கணிப்பது எவ்வளவு வேதனைக்குரியது?!(4)

இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் சமூகத்தின் சன்மார்க்கத் துறையில் காணப்படும் இன்னொரு மிக நுட்பமான குறைபாட்டை எடுத்துக் காட்டுகின்றார்கள். அதாவது சன்மார்க்கத்தோடு தொடர்புடைய குர்ஆனிலும், ஹதீஸி லும் காணப்படும் சில சொற் பிரயோகங்கள், ஸஹாபாக்கள் காலம், தாபிஈன்‌கள் காலப் பிரிவில் கையாளப்பட்ட கருத்திலிருந்து வித்தியாசப்பட்ட வகையில், வேறு வகையான பதப்பிரயோகங் களில், அவற்றின் மூலக் கருத்தை முற்றிலும் சிதைக்கும் வகையில் கையாளப்படுவதை இமாமவர்கள் அவர்களது காலப் பிரிவில் அவதானிக்கப்படும் மிகப் பெரும் குறைபாடாக எடுத்துக் காட்டுகின்றார்கள். ‘பிக்ஹ்’, ‘இல்ம்’, ‘அத் தவ்ஹீத்’, ‘அத் தஸ்கீர்‌, ‘அல்- ஹிக்ம்’ போன்ற பதங்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகின்றார்கள். ‘அல்–பிக்ஹ்’ என்ற பதம் மார்க்கச் சட்டத் தீர்ப்புகள், அவற்றிற்கான மிக நுட்பமான காரணங்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. அவை குறித்து அதிகமாகப் பேசப்படுகின்றது. அவை தொடர்பான நூல்கள் மனனமிடப்படுகின்றன. இவற்றை மிக ஆழமாகக் கற்று அதில் அதிகம் ஈடுபாடு காட்டுபவர் பிக்ஹில் தேர்ச்சி பெற்றவர் என அழைக்கப்படுகின்றார். ஆனால் உண்மையில் ‘பிக்ஹ்’ என்ற சொல் இஸ்லாத்தின் ஆரம்‌பகாலப் பிரிவில், மறுமைக் கான பாதையை விளக்கி, மனித உள்ளத்தில் புதைந்துள்ள மனோ இச்சையின் ஆபத்துகள் பற்றிய நுட்பமான அறிவை வழங்கி, நன்மையான செயல்களைப் பாதிக்கும் விடயங்கள் பற்றி உணர்த்தி, இம்மையின் பற்றைக் குறைத்து, உள்ளத்தில் இறையச்சத்தை மேலோங்கச் செய்யும் அறிவையே குறித்தது. அவர்களது இக் கருத்திற்கு ஆதாரமாக இமாமவர்கள் அல் குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் “ஸலபுஸ் ஸாலிஹீன்”களான நன்னெறி சார்ந்த சான்றோர்களின் கருத்துக்களிலிருந்தும் பல உறுதியான மேற்கோள்களை எடுத்தாண்டுள்ளார்கள்.(5)

சமூகத்தில் மக்களுக்கு மத்தியில் சன்மார்க்க அறிவுரைகளை நிகழ்த்தும் ‘வாஇள்கள்’ எனப்படும் உபதேசம் புரிவோர், ‘குஸ்ஸாஸ்’ என்னும் கதை சொல்வோர் பிற்காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் பரவலாகக் காணப்பட்டனர். இவர்கள் மூலமாகவே இஸ்ராயிலிய்யாத் என்னும் யூதர்கள் மரபு வழிக் கதைகள் முஸ்லிம் சமூகத்தில் பரவி சிலபோது தப்ஸீர்களில் ஊடுருவல் செய்தன. இமாமவர்கள் இவ்வாறு புனைந்துரைக்கப்பட்ட பொய்யான கதைகள், ‘ஹிகாயாத்’ சம்பவங்கள் பற்றி மிக வன்மை யாகக் கன்டிக்கின்றார்கள். இதனை சன்மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட ‘பித்ஆ’ என்னும் நூதனமாகக் கருதுகின்றார்கள்.

தவ்ஹீத் என்ற பதம், அல்லாஹ் ஒருவன் ஏகன் தனித்தவன் அனைத்து செயல்களும் அல்லாஹ்வின் விருப்பம், சித்தத்தின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன நன்மை தீமை ஆகிய அனைத்தும் அவனது திட்டத்தின் அடிப்படையிலேயே உருவாகின்றன அனைத்தின் மீதும் ஏகனாகிய அவனே ஆதிக்கம் செலுத்துகின்றான் என்ற எத்தகைய மயக்கமுமற்ற மிகத் தெளிவான கருத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ‘தவ்ஹீத்’ என்னும் இப்பதம் அதன் மூலக் கருத்து சிதைக் கப்பட்டு, தர்க்கம், சொல்லாடல், வாதங்களை முன்வைக்கும் உத்திகள் பற்றி விளக்கும் ‘கலாம்’ என்னும் கலையாகவும், இறைவன் தொடர்பாக அவசியமோ அடிப்படையோ இல்லாது அவனது யதார்த்தம், பண்புகள், மனிதனின் செயல் சுதந்திரம், விதி பற்றி விளக்கும் ஒரு தர்க்கக் கலையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய தர்க்கத்தில் ஈடுபடுபவர் தங்களை அஹ்லுத் தவ்ஹீத் எனக்கூட அழைத்துக் கொள்கின்றனர்.(6)

இமாம் கஸ்ஸாலியின் காலப் பிரிவில் ஸுல்தான் என அழைக்கப்பட்ட மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியே நடைபெற்றது. மக்களின் பணத்தை தங்களது ஆடம்பர வாழ்விற்கும், அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் ஆட்சியாளர்கள் பயன்படுத்தியமை போன்ற அதிகாரத் துஷ்பிரயோகம் பரவலாகக் காணப்பட்டது. அரச பதவிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் ஆட்சிக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டனர், இவை அனைத்தையும் மிகத் தெளிவாக அவதானித்து உணர்வுபூர்வமாக அறிந்திருந்த இமாமவர்கள் ஆட்சியார்களின் அநீதிகள், அதிகாரத் துஷ்பிரயோகம், பொதுப் பணத்தைக் கையாளும் அநீதியான முறைகளை மிகத் துணிச்சலுடன் கண்டித்தார்கள். உலமாக்கள் என்னும் சன்மார்க்க அறிஞர்கள் அநீதியான ஆட்சியாளர்களை அண்டி வாழ்வதைக் கண்டித்தார்கள். அநீதியான ஆட்சியார்களிடமிருந்து அன்பளிப்புகள் பெறுவது சன்மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என தீர்ப்பளித்தார்.

இமாமவர்கள் அநீதியான ஆட்சியார்களைக் கண்டித்ததோடு் அவர்களுக்கு கடிதங்களையும் அனுப்பி வைத்தார்கள். இது அவர்களது ஆழமான இறை விசுவாசத்தையும், அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் மனோ வலிமையையும், துணிச்சலையும் எடுத்துக் காட்டுகின்றது. இமாமவர்களின் காலப் பிரிவில் குராஸான் மாகாணம் முழுவதும் ஸெல்ஜூக்கிய மன்னர் ஸன்ஜர் பின் மலிக் ஷாவின் அதிகாரத்தில் இருந்தது. இமாமவர்கள் ஸுல்தானுக்கு பின்வரும் கடிதத்தை ஒருதடவை அனுப்பி வைத்தார்கள்

“எவ்வளவு வேதனைக்குரியது! உங்கள் ஆட்சியின் கீழுள்ள சாதாரண குடிமக்களின் கழுத்துக்கள் நீங்கள் விதிக்கும் அநியாயமான வரிகளின் சுமையால் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் உங்கள் குதிரைகளின் கழுத்துகளையோ தங்க மாலைகள் அலங் கரிக்கின்றன.” இது போன்றே ஸுல்தான் ஸன்ஜரின் சகோதரரான முஹம்மத் பின் மலிக் ஷாவுக்கும் அநியாயத்துக்குப் பயப்படும் படியும், அவரது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றும் படியும், மக்களின் உரிமைகளை மதிக்கும் படியும், இறைவனின் தண்டனைக்கு அஞ்சும் படியும் எச்சரித்துக் கடிதம் எழுதினார்கள். இமாமவர்கள் இவ்வாறு ஆட்சியாளர்களுக்கு எழுதிய கடிதங்களில் அறிவுரையும், வழிகாட்டுதலும், விமர்சனமும் இணைந்து காணப்பட்டன.

ஸெல்‌ஜூக்கிய அமைச்சர் பக்ருல் மலிக் ஒரு தடவை இமாமவர்களின் பிறப்பிடமான தூஸ் நகருக்கு வருகை தந்தார். அப்போது அவரை நோக்கி இமாமவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

“இந்த தூஸ் நகரம் பசியாலும், அநியாயத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது தானியங்களை விற்கின்றார்கள். வரிச்சுமை அவர்களை வாட்டுகின்றது. அதிகரிக்கும் விலைவாசிகள் அவர்களை மிகவும் பாதித்துள்ளன. உங்களுக்கு ஓர் அறிவுரை பகர்கின்றேன். நீங்கள் தனிமையில் இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்றுங்கள். உங்களது ஸஜதாவில் பச்சாதாபப்பட்டு, இறைவனை அஞ்சிய நிலையில் பின்வருமாறு கூறுங்கள். உனது ஆட்சியும் அதிகாரமும் உன்னைவிட்டும் என்றுமே நீங்காத ஆட்சியாளனே! தனது ஆட்சியும் அதிகாரமும் முடிவை அடைந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளனுக்கு அருள்புரிவாயாக!, அவனை அசிரத்தை, மறதியிலிருந்து விழித்தெழச் செய்து அவனது குடிமக்களுக்கு நன்மை புரிவதற்கு அருள்பாலிப்பாயாக!(7)

இமாம் கஸ்ஸாலி அவர்கள் வாழ்ந்த காலப் பகுதியின் சமூக நிலை பற்றிய அவர்களது மிக வெளிப்படையான, ஆரோக்கியமான, துணிச்சலான விமர்சனங்கள் ஒரு சன்மார்க்க அறிஞர் என்ற வகையில் சமூக விவகாரங்களில் அவர்கள் காட்டிய ஈடுபாட்டையும், சமூகத்தில் ஆட்சியாளர்கள், அறிஞர்கள், பாமரர் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு விமர்சனக் கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. இமாம் கஸ்ஸாலி (றஹ்) போன்ற ஆரம்ப கால அறிஞர்கள், தாம்‌ பெற்றிருந்த அறிவை ஆட்சியாளர்களிடம் அற்ப விலைக்கு பேரம் பேசாமல், இறை விசுவாசத்தோடும், பரிசுத்த எண்ணத்தோடும் பயன்படுத்திய இந்தப் பண்பு சமகால முஸ்லிம் அறிஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.



அடிக் குறிப்புக்கள்

அப்துல் ஹலீம் மஹ்மூத், களிய்யதுத் தஸவ்வுப் அல்- முன்கிஸ் மினள் லிழால், கௌ்ரோ-1981 .பக் 155
இஹ்யா உலூமுத்தீன்- பாகம் 3, பக்கம் 54
இஹ்யா உலூமுத்தீன்- பாகம் 1, பக்கம் 21
இஹ்யா உலூமுத்தீன்- பாகம் 1, பக்கம் 21
இஹ்யா உலூமுத்தீன்- பாகம் 1, பக்கம் 32
இஹ்யா உலூமுத்தீன்- பாகம் 1, பக்கம் 28-34,
மேலும் பார்க்க : அபுல் ஹஸன் அலி நத்வி, றிஜாலுல் பிகர் வத் தஃவா பில் இஸ்லாம்,

பெய்ரூத் 1977, பக்கம் 234

அபுல் ஹஸன் அலி நத்வி,, றிஜாலுல் பிக்ர், பக்கம் 236
http://drshukri.lk

No comments: