1987-88 வாக்கில் வெளிவந்த படம் "பூக்கள் விடும் தூது". டி.ராஜேந்தரின் இசையில் மோனிஷா என்கிற அழகுப்பெண் நடித்த இளம் காதலர்களின் முக்கோணக் காதல் கதை அது. ஆதரவற்ற அனாதையாக நடித்திருக்கும் படத்தின் நாயகனும் அழகன்தான். நன்றாக நடித்தும் இருந்தான். தமிழ்பட உலகில் ஒரு சுற்று வருவான் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது மட்டுமின்றி பின்னர் பிட் பட நாயகனாகவும் மலினப்பட்டு விட்டான்.(பிட்டுப் படங்களைப் ரசித்துப்பார்க்க ஒரு லட்சம் பேர் இருக்கும்போது நடிக்க நாலுபேர் இருந்தா என்ன தப்பு என்கிற சூப்பர் டீலக்ஸ் பட டயலாக் நினைவுக்கு வந்து தொலைக்கிறது) போகட்டும்.
சொல்ல வந்த சேதி என்னவெனில் நாயகனை இன்னொரு பணக்கார அழகி காதலிக்க, நாயகன் தன்னைவிட்டு விலகிப்போய் விடுவதான ஏக்கமும் பதட்டமும் மோனிஷாவுக்கு ஏற்பட்டிருக்கும். இடையில் நாயகனின் பிறந்தநாள் வரும். அப்போது " உங்க பிறந்தநாளுக்காக பால் பாயசம் காய்ச்சி கொண்டுவந்திருக்கேன்" என்று ஆசையாக மோனிஷா கொடுக்க, அதற்கு நாயகன் "பிறந்தநாளை கொண்டாடற வாழ்க்கையா நம்ம வாழ்க்கை, ஏண்டா இந்த உலகத்துல பிறந்தோம்னு கவலைப்படற வாழ்க்கைதானே நம்ம வாழ்க்கை" என்பான் தன்னிரக்கத்துடன்.
உடனே நொடித்தபடி மோனிஷா "இதெல்லாம்கூட ஞாபகமிருக்கா, இப்பல்லாம் பணக்கார சகவாசம் அதிகமாகிடுச்சே" என்பாள். பின்னர் ஊடலும் காதலுமாகத் தொடரும் அந்தக்கதை.
இதில்"ஏண்டா இந்த உலகத்துல பிறந்தோம்னு கவலப்படற வாழ்க்கை" என்கிற வாசகம் என்னை மிகவும் பாதித்தது. அதன்பிறகு வந்த ஒவ்வொரு பிறந்தநாளிலும் இந்தச்சொல் நினைவுக்கு வராமல் இருந்ததில்லை. வறுமையும் நிராதரவும் பசியும் தாயை இழந்த துயரமும் ஒருவாய் சோற்றுக்காக தன்மானத்தை உரசிப்பார்த்த தருணங்களும் கூடிக் கும்மியடித்த நெருக்கடியான வாழ்வில் இந்த வாசகம் என் மனதில் விம்மல்களை உருவாக்கியபடியே இருந்தது.
காலம் எனும் மாயச்சுழல் எல்லாவற்றையும் புரட்டிப்போடத்தானே செய்கிறது. 1992,1993 வாக்கில் பேனா நட்பு, கவிதை என்று இயங்கியபோது முதலில் அறிமுகமானவர்கள் ந.சதீஷ் நாமக்கல், இளையசெல்வன் பூலாம்பாடி,ரவி மதுரை,சேது ஸ்ரீனிவாஸ் மதுரை ஆகியோர். சேது தவிர்த்து ஏனைய மற்ற மூவருடனான நட்பு இன்றளவும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இவர்கள் மூலமாகத்தான் உற்சாகமூட்டும் நேசச்சொற்கள், பதினைந்து பைசா தபால் அட்டையில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தாங்கி வந்தன. அதிலும் முதன்முதலாக எனக்கு வந்த பிறந்தநாள் வாழ்த்து அட்டை சாய்தாசன் என்று இன்று இயங்கிக் கொண்டிருக்கும் நண்பர் சதீஷ் அனுப்பியது. நமக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லக்கூட நாலுபேர் இருக்காங்க எனும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்த திருப்புமுனை சம்பவங்கள் அவை.
பின்னர் குடும்பம் குழந்தைகள் என்றான பின்னர் பேரன்புத் தூறல்கள் நிறைந்திருக்கும் நாட்களாக பிறந்தநாள் தினங்கள் அமைந்தன. நேற்றோ நண்பர்களின் வாழ்த்துகள் பெரும் நேசச்சுனாமியாகவே அடித்துப் பூரிக்க வைத்துவிட்டன. நீங்கா நினைவுகளை உருவாக்கித் தந்த எல்லோருக்கும் எங்கள் அன்பு 💙💙💙
#பிள்ளைகள் அளித்த அன்புப்பரிசான வெள்ளி மோதிரத்தில் ஒளிரும் நேச நட்சத்திரங்கள்
No comments:
Post a Comment