Tuesday, October 29, 2019

அதோ ஒருத்தியின் கண்ணில் உலகத்தின் கண்ணீர்,




அதோ
ஒருத்தியின் கண்ணில்
உலகத்தின் கண்ணீர்,
வந்த மழையும்
இனி எந்த மழையும்
அந்தத் தாயின் கண்ணீர் கறையைக்
கழுவ இயலுமா

அடே சுர்ஜித்
இத்தனை பேர் அழுத கண்ணீரில்
நீ மிதந்து மிதந்து
மேலெழும்பி இருக்கலாம்
ஆனால்
அழுத கண்ணீரெல்லாம்
உன்னை அழுகவைத்து விட்டதே
உன்னை மீட்க
கையில் கயிறு கட்டிப்பார்த்தோம்,
ஆனால்
உன் கால் விரலில்
கயிறு கட்டிவிட்டதே மரணம்

எவன் அவன்
பின்கூட்டிப் பிறந்த குழந்தைக்கு
முன்கூட்டியே சவக்குழி வெட்டியவன்
உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ
நடக்கக்கூடாதது நடந்தேறிவிட்டது
மரணத்தில் பாடம் படிப்பது மடமைச் சமூகம்
மரணத்திலும் கல்லாதது அடிமைச் சமூகம்


ஏய்... மடமைச் சமூகமே,
வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில்
மரணத்தின் பக்கவிளைவு ஞானம்தானே
அந்தச் சவக்குழிக்குள் மண் விழுவதற்குள்
அத்தனை அபாய குழிகளையும் மூடி விடு
அந்த மெழுகுவத்தி அனைவதற்குள்
அத்துனை கண்ணீரையும் துடைத்து விடு

ஏய்... வானம் பார்க்கும் தொழில்நுட்பமே
சற்றே குனிந்து பாதாளம் பார்
இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள்


கவிப்பேரரசு வைரமுத்து

No comments: