Thursday, October 24, 2019

இப்போது எல்லோர் கைகளிலும் தர்ஜுமா(குர்ஆன் தமிழாக்கம்) இருக்கிறது..

Saif Saif

இப்போது எல்லோர் கைகளிலும் தர்ஜுமா(குர்ஆன் தமிழாக்கம்)
இருக்கிறது..

இந்த குர்ஆன் ஆயத்துக்கு என்ன அர்த்தம் என்று சடாரென புரட்டிச் சொல்லி விடுகிறார்கள்..

போதாக்குறைக்கு முகநூலில் பதிலுக்கு பதில் கமென்ட்
போட்டு அறிவை வெளிப்படுத்துகிறார்கள்..

தெரியாவிட்டால் கூட வலிந்து சொல்ல முனைகிறார்கள்.. எல்லாம் தெரிந்தது
போல் பேசுகிறார்கள்.. இருக்கட்டும்...

கலீபா உமர் (ரலி) காலத்தில் நடந்த ஒரு சம்பவம் உங்கள் பார்வைக்கு...

ஸஹாபாக்கள் கூடியுள்ள அவையில் குர்ஆன் ஆயத்துக்களை சொல்லி இதற்கு என்ன பொருள்.? இது எதனைக் குறிக்கின்றது..? என்று அடிக்கடி வினா எழுப்புவது உமர்
அவர்களின் வழக்கம்..

ஒருமுறை..,


"இதா ஜாஅ நஸ்ருல்லாஹி வல் ஃபத்ஹ்" (110:1,2,3)

என்னும் அத்தியாயத்திற்கு என்னதான் பொருள் என்று ஸஹாபாக்களை பார்த்து கேட்டார்கள்..

"வெற்றி கிடைத்துக் கொண்டே செல்லச் செல்ல இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருங்கள்" என்று ஒரு சிலர் கருத்து கூறினார்கள்..ஒரு சிலர் மெளனம் காத்தார்கள்..

அந்த அவையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் இருந்தார்கள்..
இளவயது. விஷய ஞானங்கள் அதிகம் அறிந்தவர்.. உமரின் மாணாக்கரும் கூட..

ஆனால் பெரியவர்கள் அமர்ந்துள்ள அவையில் தன் வயது கருதி சட்டென்று ஒரு கருத்தை கூற தயக்கம் கொள்வார்கள்..

இது உமரவர்களுக்குத் தெரியும்.. உமரவர்கள் இப்னு அப்பாஸ் அவர்களை ஏறிட்டு நோக்கினார்கள்..

அதைக் கண்ட
இப்னு அப்பாஸ்

"இந்த அத்தியாயம் இறைத் தூதரின் இறப்பைக் குறித்து முன்னறிவிக்கிறது.. அதாவது நபிக்கு வெற்றியும் இறைபுறத்து உதவியும் கிடைத்து விட்டது என்றால் உலகில் அவர் வந்த நோக்கம் நிறைவேறி விட்டது எனப்பொருள்.. ஆகையால் இறைவனை போற்றிப் புகழ்ந்து குற்றங்களுக்கு பரிகாரம் பாவமன்னிப்பு கோருங்கள்.. கண்டிப்பாக இறைவன் உங்கள் மீட்சியை அங்கீகரிப்பவனாக இருக்கிறான்" என்றார்கள்..

உமர் அவர்கள் இப்னு அப்பாஸின்
அந்த கருத்தை ஆமோதித்தார்கள்..

இன்னொரு முறை ஸஹாபாக்கள் அவையில்...,

"உங்களில் யாரேனும் ஒருவர் இதை
விரும்புவாரா.?
(அதாவது) அவருக்குப் பேரீச்சைகளும், திராட்சைகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதனூடே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. கனிவகைகள் அனைத்தும்
அ(த் தோட்டத்)தில் கிடைக்கின்றன. (எதுவும் செய்ய) இயலாத சிறு குழந்தைகளே அவருக்கு இருக்கின்ற நிலையில் அவரை முதுமை வந்தடைகிறது. அப்போது தீயுடன் கூடிய புயற்காற்று அ(த்தோட்டத்)தை தாக்கிப் பொசுக்கி விடுகிறது. இவ்வாறு அல்லாஹ், உங்களுக்குத் தன் சான்றுகளை, நீங்கள் சிந்தித்துணரும் பொருட்டு விவரிக்கின்றான்."
(2:266)

இந்த இறைவசனத்தை கூறி விட்டு...

"இந்த இறைவசனத்தின் பொருள் என்ன.? இந்த இறைவசனம் எதனைக் குறிக்கின்றது?"
என்று கேட்டார்கள்..

"இறைவன் தான் இதன் விளக்கத்தை நன்கு அறிந்தவன் என்றார்கள்" ஒரு சிலர்..

இந்த பதிலை கேட்ட உமர் இம்முறையும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸை ஏறிட்டு நோக்கினார்கள்..

அப்பாஸ் தயங்கினார்கள்..

"அப்பாஸே உங்களை நீங்களே தரக்குறைவாக நினைக்காதீர்கள்..
நீங்கள் எதனை நினைக்கிறீர்களோ அதனை தைரியமாக எடுத்து சொல்லுங்கள்.".
என்று சொல்லவும்..

அதற்கு இப்னு அப்பாஸ்.,

"செயலில் ஈடுபடும் ஒருவனை உதாரணம் கூறி இறைவன் விளக்குகிறான்" என முடித்து கொண்டார்கள்..

உமரவர்களே விளக்கத்தை தொடர்ந்து சொன்னார்கள்..

"ஒரு மனிதனுக்கு இறைவன் செல்வத்தை கொடுத்திருக்கிறான்.. அவன் இறைவனுக்கு கட்டுப்பட்டு அடிமையாக வாழ்ந்திருக்க வேண்டும்.ஆனால் அவனோ இறைவனுக்கு நன்றி செலுத்த மறந்து நன்றி கொன்றவனாக வாழ்ந்து தன் செயல்கள் அனைத்தையும் பாழ்படுத்தி விட்டான்.."
என்றார்கள்..

இப்படியாக குர்ஆன் வசனங்கள் எந்த உட்பொருளை தருகிறது..எதுக் குறித்து சொல்கிறது என்று ஸஹாபாக்களே அர்த்தம் சொல்ல தயங்கி நிற்பதை காண முடிகிறது..

ஏதோ கொஞ்சம் விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டு தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று ஏதேதோ அர்த்தங்களை எடுத்து போட்டு ஆதாரம் சொல்பவர்களை இன்று ஏராளமாய் முகநூலிலும் பார்க்க முடிகிறது....

இதில் கொஞ்சம்
பேர் ஆண்டிராய்டு
போன் கையிலிருப்பதால் அட்வான்ஸாக எதற்கெடுத்தாலும் நரகம் சொர்க்கம் என்று பத்வா வேறு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்..

கற்றது கையளவு கல்லாதது உலகளவு..

குர்ஆன் விஷயத்தில் அல்லாஹ் விஷயத்தில் ரெம்ப கவனம் தேவை மக்களே..!

அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கட்டும்..!!!

Saif Saif

No comments: