Thursday, October 24, 2019

இமாம் கஸ்ஸாலி அவர்களின் சமூக சீர்திருத்த பணிகளும் சிந்தனைகளும்

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சீர்திருத்தவாதிகள், சிந்தனையாளர்கள் வரிசையில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) மிக முக்கிய இடம் பெறுகிறார்கள். பெரும்பாலும் ஓர் ஆத்மிக ஞானியாக மட்டும் அவர்களை அடையாளப்படுத்தும் சிலர், அவர்களது பன்முக ஆளுமையின் பலமுக்கிய பரிமாணங்களை அவதானிக்கத் தவறிவிடுகிறார்கள்.

முஸ்லிம் உலகம் சிலுவைப் போர்கள், மங்கோலியப் படையெடுப்பு போன்ற பாதிப்புகளும் சவால்களுக்கும் ஆளாகியிருந்த காலப்பிரிவில் வாழ்ந்த அவர்களது நூல்களில் இத்தகைய பகைவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க முஸ்லிம்களைத் தூண்டும் வகையில் எத்தகைய குறிப்புகளும் காணப்படவில்லை என்பது மட்டுமன்றி முஸ்லிம் உலகில் மங்கோலியர்கள் சிலுவைப் போராளிகள் இழைத்த வன்செயல்கள், படுகொலைகள், அக்கிரமங்கள் பற்றிய எத்தகைய குறிப்புக்களையும் இமாமவர்களின் நூல்கள் பேசவில்லை என்பதும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் ஓர் முக்கிய விமர்சனமாகும்.


இந்த விமர்சனத்திற்கு அறிவுபூர்வமாக பதிலளிக்கப்படும் வகையில் கலாநிதி மாஜித் அர்ஸலான் கைலானி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

“இமாம் கஸ்ஸாலி அவர்கள் முஸ்லிம்கள் இராணுவத் தோல்விகளுக்கு ஆளாகிய நிலைகள் அதன் அவலங்கள் பற்றி விளக்குவதற்குப் பதிலாக முஸ்லிம்கள் இத்தகைய தோல்விகளுக்கு ஆளாகும் நிலைக்கு ஏன் உட்பட்டார்கள் எவ்வாறு ஆளானார்கள் என்பது பற்றியே தங்களது பூரண அவதானதத்தைச் செலுத்தினார்கள்.

இதனை கலாநிதி மாஜித் அர்ஸலான் கைலாணி மாலிக் பின் நபியின் ‘அல்- காபிலிய்யதுல் இஸ்திஃமார்’ காலனித்துவத்துக்கு ஆளாகும் நிலை என்றகோட்பாட்டோடு ஒப்பு நோக்குகின்றார்கள்.

முஸ்லிம் உலகம் காலனித்துவ வாதிகளின் ஆதிக்கத்திற்கு ஆளாகிய காலப் பிரிவில் வாழ்ந்த மாலிக் பின் நபி காலனித்துவவாதிகள் பற்றி விமர்சித்து அவர்களது பழியைப் போடுவதைத் தவிர்த்து காலனித்துவாதிகளின் ஆதிக்கத்திற்கு அடிமையாகும் நிலை ஏன்? எவ்வாறு ஏற்பட்டது என சுயவிசாரணை செய்யும்படி முஸ்லிம்களை அழைத்ததை, இமாம் கஸ்ஸாலியின் ‘காபிலியத்துல் ஹkமா தோல்விக்கு ஆளாகும் நிலைக்கு ஒப்பானது என்பது மாஜித் அர்ஸலான் கைலாணியின் கருத்தாகும்.

இமாம் கஸ்ஸாலி அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவு தேக்க நிலை அசைவும் இயக்கமுமற்ற தன்மை சிந்தனைக் குழப்பம் சமூக அநீநிதியின் விளைவுகள் ஆத்மீக உயிரோட்டமற்ற சடங்கும் சம்பிரதாயமுமாக சன்மார்க்கக்கிரியைகள் உருமாறியிருக்கும் அவல நிலை ஆகிய சமூக நோய்களை இனம்கண்டு அவற்றிற்கான தீர்வை வழங்கும் இஸ்லாமிய சிந்தனையின் புனர்நிர்மாணத்தையும் சமூகம் புனருத்தாரணப் பணியையும் மேற்கொண்டார்கள்.

ஒரு சிந்தனையாளனைப் பூரணமாக மதிப்பீடு செய்வதற்கு அவனது வாழ்வின் பல்வேறு காலகட்ங்களையும், அறிவு வளர்ச்சியின் பல்வேறு படித்தரங்களையும் கவனத்தில் கொள்ளல் அவசியமாகும். இமாம் கஸ்ஸாலி தங்களது அறிவு அனுபவம் அவர்கள் பெற்ற மனத்தெளிவு ஆகியவற்றின் வெளிச்சத்தில் தனது கருத்துக்களை அடிக்கடி மாற்றத்திற்கு உட்படுத்தினார்கள்.

இமாமின் வாழ்வின் இந்தப் பல்வேறு படித்தரங்களையும் அவரது கருத்துக்களின் படிமுறை வளர்ச்சியையும் பற்றி அறிவற்றவர்கள் இமாம் கஸ்ஸாலியை பல்வேறுவகையில் மதிப்பீடு செய்கின்றனர். சிலர் அவரை ஒரு தத்துவஞானியாகவும் வேறுசிலர் ஒரு முஅல்லிமாகவும் இன்னும் சிலர் அவரை ஒரு ஸ¥பியாகவும் இனம் காணுகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில் இமாம் கஸ்ஸாலி இந்த எல்லாபடித்தரங்களையும் கடந்து சென்றார்கள். இந்தப் பண்பே அவர்களை ஏனைய சிந்தனைகளிலிருந்து வித்தியாசப்படுத்தியது மட்டுமின்றி தங்களது பணியையும் பங்களிப்பையும் மிக வெற்றிகரமாக ஆற்றுவதற்கான எல்லாத் தகைமைகளையும் வழங்கியது.

இமாம் கஸ்ஸாலியின் காலம் பல்வேறு கருத்தோட்டங்கள், சிந்தனைப் பிரிவுகள் தத்துவக் கோட்பாடுகள் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்திய காலப் பிரிவாகவிளங்கியது. இந்த பல்வேறுபட்ட கருத்துக்கள், கோட்பாடுகளை துறைபோகக் கற்று அறிவுத் தெளிவு பெறுதல் ஒரு சாமான்யமான சாதாரண பணியாக விளங்கவில்லை. அது ஒரு இமாலயப் பிரயத்தனத்தை வேண்டி நின்றது. ஆனால் இமாம் கஸ்ஸாலியின் இயற்கையாகவே காணப்பட்ட அறிவுத்தாகம்.

தேடலுக்கான வேட்டை, விசாரணை உள்ளம், சவால்கள் நிறைந்த இந்த அறிவுப் போராட்டத்தில் அவர்களை துணிச்சலுடன் பிரவேசிக்க வைத்தது.

இமாம் கஸ்ஸாலி அவரது காலப்பிரிவில் காணப்பட்ட சிந்தனைப் பிரிவுகள் அனைத்தையும் துறைபோகக் கற்றுமனத் தெளிவுபெற்ற அறிவு அனுபவங்களை ‘வழிகேட்டிலிருந்து விடுதலை’ என்ற தனது நூலில் மிக அழகாகவும் தத்ரூபமாகவும் விளக்கியுள்ளார்கள்.

அவர்களது அறிவுப் பயணத்தை அஷ் அரி விரிவாளரின் கோட்பாடுகளை உள்ளடக்கிய இல்முல் கலாம் பற்றிய கற்கையுடன் ஆரம்பித்தார்கள். அதன் பிறகு தத்துவ ஞானம் இஸ்மாயிலிகளின் பாதினியா கோட்பாடு தஸவ்வுப் ஆகியதுறைகள் பற்றிய அறிவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு, இந்த ஒவ்வொரு துறைசார்ந்தவர்களிலும் காணப்பட்ட குறைகள் பலவீனங்களை தவறுகளை விமர்சித்தார்கள். ஒரு ஸ¥பியாக வாழ்ந்த அவர்கள் தனது அந்திம காலப் பிரிவு முழுவதிலும் ஹதீதிஸையும் ஸ¤ன்னாவையும் கற்பதில் ஈடுபட்டார்கள். ஸஹீஹுல் புஹாரியைத் தனது நெஞ்சில் வைத்த நிலையிலேயே அவர்களது மரணம் நிகழ்ந்ததாக இமாம் இப்னு தைமியா’ தனது நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

இமாம் கஸ்ஸாலியின் சீர்திருந்த முறைமையில் அரசியல் இராணுவ சீர்திருத்தம் முன்னுரிமை பெறவில்லை. அனைத்துக்கும் அடிப்படையாக மக்களின் உள்ளார்ந்த வாழ்விலும் சிந்தனையிலும் மாற்றம் ஏற்படுத்துவதே அவர்களது சீர்திருத்தப்பணிகளில் முன்னுரிமை பெற்றது.

இமாம் கஸ்ஸாலியை அவர்களது காலப் பிரிவின் சமூக நோய்களை உரிய முறையில் இனம்கண்டு அவற்றிலிருந்து மீட்சி பெறும் வழிமுறைகளை மிக நடைமுறை சாத்தியமான வகையில் விளங்கிய ஒரு சிந்தனையாளராகவும் சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். அறிவுத்துறையில் காணப்பட்ட குழப்ப நிலை, அறிஞர்களில் காணப்பட்ட பலவீனங்கள், ஆட்சியாளர்களின் சீர்கேடுகள், சமூக அநீதிகள், ஆத்மஞானிகளின் குறைபாடுகள் ஆகிய அனைத்தும் அக்கால முஸ்லிம் சமுதாயத்தையும் ஆட்சியையும் பலவீனமடையச் செய்துள்ளது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

கலாநிதி
எம். ஏ.எம். சுக்ரி
நன்றி http://archives.thinakaran

No comments: