கனவுகள் வழி பொங்கியெழும்
ஆன்மாவின் சங்கேத முடிச்சுகளை
மலர்களுக்கும் நோகாமல் கொய்ந்தெடுக்கும்
முழுநிலவின் மென்சுடர் சூழ்ந்தவன் நான்
தகிக்கும் சூரியனும்
மின்னும் பதினொரு நட்சத்திரங்களும் தாள்படிந்து பணிய
தன்னடக்கத்தை மேலாடையாக அணிந்து
மென் நடை பயிலும்
மேலோனின் நம்பிக்கைக்குரிய அடிமை நான்
நிகரற்ற பெருவனப்பின் ஒளியினால்
துயர முலாம் பூசப்பட்ட சரித்திரம் எனினும்
அழகிய எனும் ரட்சகனின் மொழிதலால்
பூரணப்படுத்தப்பட்ட வாழ்வு எனது
ரத்தச் சொந்தங்களின் துரோகங்களால்
வறண்ட கிணற்றில் வீழ்த்தப்பட்டதென் பால்யம்
கனவுகளின் சூட்சும உலகத்திலும்
ஆடுகள் மற்றும் ஓநாய்களின்
ரத்தத் தடயங்களிலும்
அலையென மேலெழுகிறது
கண்ணொளி மீட்கும் என் வியர்வை வாசம்
சட்டைக் கிழிசல்கள் உணர்த்தும்
சுய கட்டுப்பாட்டின் தீட்சண்யத்தை
ஆப்பிள்கள் அறுபட்டுத் தெறித்த
குருதித் துளிகள் சொல்லிப்போகும்
நெஞ்சுறுதியின் மாட்சிமையை
கால்களை நெரிக்கவந்த
நேசத்தின் கொடிகளிலிருந்து
நழுவி விரைந்தாலும்
எவரையும் எதன் பொருட்டும்
குற்றம் சாட்டாத குணமென் கொற்றவன் ஈந்த வரம்
ஏழு கொழுத்த மாடுகள் மேய்ந்த
மறைவுலகின் கதிர்கள்
சிறைச்சாலையின் கர்ப்ப இருளில் ஒளியூட்டி
புடம்போடப்பட்ட ஆன்ம நேர்மைக்கு
அதிகாரத்தின் சிம்மாசனத்தில் கிரீடம் சூட்டியது
கொடுத்த வாக்கை தலையில் சுமந்து
சூதுமிகு மனிதர்களின் கீழ்மைகளை
புன்னகையால் கடந்து
இழைக்கப்பட்ட கொடுமைகளை
மறதியின் புதைசேற்றில் அமிழ்த்தி
சங்கை மிகுந்தவனின் சங்கையால்
மெருகேற்றப்பட்ட மனிதன் நான்
நான் யூசுஃப்
மனித குல ரகசியங்களை தோள்களில் சுமந்து
மேன்மையின் சிறகுகளால் உலகைப் போர்த்தியவன்
-நிஷா மன்சூர்
சுலைஹா
-----------------
மேலும்....
உங்களுக்கு சொல்ல வேண்டும் என்றால்
அர்த்தங்களுக்கு வெளியே வளர்பவள் நான்
கல்லும் கல்லும் மோதிவரும்
நெருப்புப் பொறிகளால் உருவானவள்
இங்கிருந்தும் அங்கிருந்தும்
தாவுகின்ற மின்னொளி
கடந்தகால சாபங்களிலிருந்து மீண்டவளும்
எதிர்கால சவால்களை வென்றவளும் நானே
ஒட்டகங்களைப்போல்
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி
ஒளியை அணிந்திருப்பவள்
உப்புக் குவியலைப்போல் ஈரலிப்பானவள்
'இறுமாப்பு' என்னும் தாரகைகளாக
வீசியெறிந்திருக்கிறேன் என் பருவங்களை
கண்களிலிருந்து காதலை பொழியச் செய்பவள்
கனவுகள் காண ஏங்கும் கனவு நான்
என் உடல் செஞ்சாம்பல் குழம்பு
கத்திகளால்
கைகளையோ கனிகளையோ வெட்டிக்கொள்ளாதவள்
காதலால் கத்தியை உடைத்தவள்
நான் யூசுப்பைக் காதலிப்பவள்
சுலைஹா........
-Anar Issath Rehana
No comments:
Post a Comment