இசையருவி குமரி அபூபக்கர்
- அ. நஸீமா சிக்கந்தர் எம்.ஏ, எம்.ஃபில்
மனிதன் கண்டறிந்த அரிய கலைச்செல்வங்களுள் இசையும் ஒன்று. இசைக்கு ஈர்க்கும் தன்மை அதிகம் என்பதால் அது மனிதர்களை மட்டுமன்றி விலங்குகளையும், தாவரங்களையும் தன் வசப்படுத்தும் தன்மையைக் கொண்டதாக விளங்குகிறது.
இவ்வரிய இசைக் கலையின் துணையுடன் நன்னெறிகளையும், இறைவனை வழிபடும் நெறிமுறைகளையும் எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ் இளக்கிய வரலாற்றில் தடம் பதித்த பெரியோர் பலர்.
தமிழக முஸ்லீம்களும் இதில் விதிவிலக்கல்லவர். இசைக்கும், இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்றே இன்றளவும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். முஸ்லீம்கள் இசைக்கு, குறிப்பாக தமிழிசைக்கு செய்த அரிய பல நற்காரியங்கள் மறக்கப்பட்டன அல்லது மறக்கடிக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் தமிழகத்தில் இசைத் துறையில் ஈடுபாடு கொண்டு அருண்பணியாற்றி வரும் முஸ்லீம்களை விரல் விட்டு எண்ணி விடலாம். குறிப்பாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை இசை வடிவில் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் கொண்டு சேர்த்தவர்கள் மிகக் குறைவு. அப்படிப்பட்ட அரிய பெரியோர்களில் ஒருவர், குறிப்பிடத்தக்கவர் குமரி அபூபக்கர்
கர்நாடக இசை, நாட்டுப்புறப் பாடல்கள் என இசையின் அனைத்து வடிவங்களிலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் பாடும் திறன் பெற்றவர் இசையருவி அபூபக்கர். தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற கடல் கடந்த நாடுகளிலும், வானொலி, தொலைக்காட்சி வாயிலாகவும், பள்ளிவாசல்களில் நடைபெரும் மீலாது விழாக்களிலும், சீறாப்புராணச் சொற்பொழிவுகளிலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கருத்துக்களைத் தன் கணீரென்ற குரலால் பரப்பி வருகின்றார். இவர்தம் இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றின் பதிவு இது... தமிழகத்தின் தென் கோடியில், கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்னம் என்ற கடற்கரை ஊரை அடுத்துள்ள காஞ்சாம்புரம் எனும் குக்கிராமத்தில் 1937ம் ஆண்டு பிறந்தவர் அபூபக்கர். தந்தை பெயர் மலுக் முகம்மது, தாயார் பெயர் ஆயிஷா பீவி அம்மையார்.
அபூபக்கர் 3ம் வகுப்பு வரை மலையாள மொழியில் படித்தவர். தன்னுடைய கேள்வி ஞானத்தாலேயே இவர் பாடகராக உயர்ந்தார். தனது மாமாவும், தமிழ், மலையாளம், அரபி ஆகிய மும்மொழிகளில் வித்தகருமாகிய எம்.பி.வி. ஆசான் எனும் பாடகரின் நல்லாசியுடன் இறைவனின் அளப்பெரும் கருணையும் இருந்ததால், சிறு வயதிலேயே மேடையேறும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
Read more at: https://tamil.oneindia.com/…/isai-aruvi-kumari-abubakar.html
No comments:
Post a Comment