Monday, February 3, 2020

“இஸ்லாமிய அன்பர்களே, உண்மையில் இசை பாவச் செயலா?”



அ. குமரேசன்

நஹீத் அஃப்ரின் -அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி. ஒரு தொலைக்காட்சியின் பாட்டுப்போட்டியில் இனிமையாகப் பாடி நேயர்களின் செவிகளையும் மனங்க்ளையும் வென்றவர். இறுதிப்போட்டியில் வெல்ல முடியாமல் போனாலும் நிறையப் பாராட்டுகளை, குறிப்பாகக் குழந்தைகளின் வரவேற்பைப் பெற்றவர்.

வெற்றி வாய்ப்பை இழந்ததை விடப் பெரிய சோகம், 46 முஸ்லிம் குருமார்கள் கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு துண்டறிக்கை. அல்லா வகுத்த வழியை மீறி இப்படி இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதா என்று அதிலே கேட்கப்பட்டிருக்கிறது.

சிறந்த பாடற்கலைஞராக வளரும் கனவோடு இருந்த அந்தச் சிறுமி தற்போது நொறுங்கிப்போயிருக்கிறார். முதலில் நஹீத்துக்கு எதிராக ஃபட்வா விதிக்கப்பட்டிருபபதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. மாநில முதலமைச்சர் உள்பட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தோரும் அதைக் கண்டித்துளளனர், சிறுமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


“இது ஃபட்வா அல்ல, ஒரு வேண்டுகோள்தான் என்று அந்த மாநிலத்தின் முஸ்லிம் சட்ட வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கெனவே 2015ல் மற்றொரு போட்டியில் நஹீத் வெற்றிபெற்ற நேரத்திலும் மவுலானாக்கள் உள்ளிட்டோர், “இப்படி இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது ஒரு பாவச் செயல்” என்று கூறி திட்டிக் குவித்தார்களாம். அண்மையில்தான் கர்நாடக மாநிலத்தில், சுஹானா என்ற மற்றொரு சிறுமி ஒரு தொலைக்காட்சியின் பாட்டுப் போட்டியில், கிருணன் பற்றிய பாடலைப் பாடி அவையோரின் பாராட்டை அள்ளியதற்காக, மங்களூரு முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்ட ஒரு குழு முகநூலில் அவர் மீது வசை பொழிந்திருந்தது.

காஷ்மீரைச் சேர்ந்த சிறுமி ஜரீனா வாசிம், முற்போக்குக் கருத்துகளைப் படங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் கூறிவரும் அமீர்கான் தயாரித்த ‘டங்கல்’ படத்தில் நடித்ததற்காக மிரட்டப்பட்டார்.

அதே காஷ்மீரில் சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று பள்ளிச் சிறுமிகள் ஒரு இசைக்குழு அமைத்து மேடையேறிப் பாடத் தொடங்கினார்கள். மிரட்டல்கள் வந்ததும் கலைக்குழுவோடு தங்களது கலைத் தாகத்தையும் கலைத்துவிட்டு காணாமல் போனார்கள்.

சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற மதமறுப்பாளர்களில் ஒருவனாகக் கேட்கிறேன்:

இஸ்லாமிய அன்பர்களே, உண்மையில் இசை பாவச் செயலா? அப்படியானால் பல முஸ்லிம் ஆண்கள் சிறந்த பாடகர்களாக, இசையமைப்பாளர்களாக, இசைக்கருவிகளை மீட்டுவோராகப் புகழ்பெற்றிருக்கிறார்களே? ஒருவேளை, இதையெல்லாம் பெண் செய்வதுதான் பாவமா? அல்லா அப்படித்தான் வகுத்திருக்கிறாரா? அவர் வருவாரானால், இது நியாயம்தானா என்று அவரோடு விவாதிக்கத் தயார்.

அ. குமரேசன், பத்திரிகையாளர்; எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1950-1956)
https://wordpress.com

No comments: